விஞ்ஞானமும் மெய்ஞானமும் எதிரெதிர் திசையில் பயணப்பட்டாலும் ஒரு வட்டத்தின் ஓரிடத்தில் இரண்டும் சந்தித்துக் கொள்ளவே வாய்ப்பு அதிகம் இருக்கிறது.
இதைத்தான் அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீனும் இந்த உலகில் எல்லாமே ஆச்சரிய படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது அல்லது எதுவுமே ஆச்சரியப்படத்தக்க வகையில் இல்லை என்கிறார்.
இந்தக் கற்பனையை வைத்துக்கொண்டு விஞ்ஞானமும் மெய்ஞானமும் கைகோர்த்து கொள்ளும் ஒரு அற்புதமான கதையை வடிவமைத்து இருக்கிறார் இயக்குனர் கிஷோர் . அதற்கு அழகான திரைக்கதை வடிவம் கொடுத்து படத்தை தயாரிக்கவும் செய்திருக்கிறார் டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் அருண்மொழி மாணிக்கம்.
தொல்லியல் துறையைச் சேர்ந்த அதிகாரியான ஹரிஷ் பெராடி சர்வதேச சிலை கடத்தல் கும்பலுடன் தொடர்பு வைத்துக்கொண்டு இங்கே அகழ்வாராட்சியில் கண்டுபிடிக்கப்படும் தொன்மையான பொருட்களை எல்லாம் விற்று பணம் சம்பாதித்து வருகிறார். கடத்தப்படும் பொருள்களுக்கு டூப்ளிகேட் தயாரித்து அவருக்கு வலது கையாக செயல்படுகிறார் நாயகன் சிபிராஜ்.
இந்த சர்வதேச சிலை கடத்தல் கும்பலை வலை விரித்து பிடிக்க காவல் துறையுடன் சேர்ந்து முயற்சி செய்கிறது தொல்லியல் துறை. ஆனால் நாயகனே கடத்தல்காரர்களுக்கு உதவி செய்ய இது முடிந்ததா என்பதுதான் படத்தின் சுவாரசியம்.
சிபிராஜ் க்கு ஏற்ற இலகுவான கதை அலட்டிக்கொள்ளாமல் மூளை பலத்துடனேயே இயங்கும் கேரக்டர் என்பதால் ஒரு செஸ் விளையாட்டை மனதில் இருத்தியே கடைசியில் வெல்கிறார்.
நாயகியாக தான்யா ரவிச்சந்திரன் நடித்தாலும் அவருக்கும் சிபிக்குமான காதல் காட்சிகள் இல்லாதது ஒரு குறைதான். ஓங்குதாங்காக இரண்டு பேரும் இருக்க இரண்டு டூயட் பாடல்களாவது வைத்து விளையாடி இருக்க வேண்டாமா..?
வில்லன் ஹரிஷ் பெராடி பார்வையிலேயே மிரட்டி இருக்கிறார்.
சிபி ராஜின் கூட்டாளியாக வரும் பகவதி பெருமாள் கண்களை உருட்டி விழிக்க இந்த படத்தில் நிறையவே வாய்ப்பு இருக்கிறது.
படத்தின் முக்கியமான களமாக கருதப்படும் மாயோன் மலை கிருஷ்ணன் கோயில் அமைந்திருக்கும் இடமும் அதற்கான புராண விளக்கமும் சிலிர்க்கச் செய்கிறது.
அதன் பின்னணியில் அமைந்த மகாபாரத விளக்கம் அருமை என்றால் அங்கு நடைபெறுவதாக சொல்லப்படும் மாய மந்திர விஷயங்களுக்கெல்லாம் அறிவியல் ரீதியாக கடைசியில் சிபிராஜ் விளக்கம் கொடுப்பது தமிழனுக்கு பெருமை.
இந்தப் படத்துக்கு என்ன தேவையோ அந்த அளவில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் இடம்பெற்றிருக்கிறது. ஆனால் அந்தப் பாம்பு வரும் காட்சியை இந்த அளவுக்கு நீட்டித்து இருக்க வேண்டியதில்லை.
வசனம் அதிகம் தேவைப்படாத படத்தில் இளையராஜாவின் பின்னணி இசை மட்டுமே படத்துக்கு வசனமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. அவரது சிக்னேச்சர் ஆக ஒலிக்கும் மாயோன் பாடல் மனதில் நிறைகிறது.
தொல்லியல் துறையின் உயர் அதிகாரியாக வரும் அருண்மொழி மாணிக்கம் அலட்டிக் கொள்ளாமல் நடித்து இருக்கிறார். கேஎஸ் ரவிக்குமாரும், கிருஷ்ணன் கோவிலில் பரம்பரை பாதுகாவலராக வரும் ராதாரவியும் தங்களது அனுபவ நடிப்பால் எளிதாக நடித்துக் கடக்கிறார்கள்.
ஒளிப்பதிவும் சிஜி காட்சிகளும், எடிட்டிங்கும் கைகோர்த்து படத்தை பரபரப்பாக கடத்துவதற்கு உதவியிருக்கின்றன.
மாயோன் – அறிவியல் ஆன்மிகப் புனைவு..!