January 25, 2022
  • January 25, 2022
Breaking News
January 4, 2019

மாணிக் திரை விமர்சனம்

By 0 1221 Views

சினிமா உருவாக்கத்தின் பினனணியில் கதை விவாதம் என்பது முக்கிய அங்கம் வகிக்கும் விஷயம். அது ஏன் என்றால் ஒவ்வொரு காட்சியையும் கதை தகர்ந்து விடாமல் லாஜிக் கெட்டு விடாமல் உருவாக்குவதற்குதான். அதன்பின் ஷூட்டிங் என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரியான வேலைதான். மேற்படி கதை விவாதம் மட்டுமே சரக்குள்ள ஸ்கிரிப்டையும், சரக்கில்லாத ஸ்கிரிப்டையும் தரம் பிரிக்கும் காரணியாகிறது.

அத்தனை முக்கியமான ‘கதை விவாதம்’ என்ற ஒரு அம்சத்தையே கேள்விக்குள்ளாக்குகிறது இந்தப்பட ஸ்கிரிப்ட். இதன் இயக்குநர் ஒரு விஷயத்தில் உறுதியாக இருந்திருக்கிறார். அது லாஜிக்கே இல்லாத ஒரு படத்தை உருவாக்குவது.

நம் கண் முன்னே என்னென்னவோ நடந்து கொண்டே இருக்கிறது. மாயாஜால, சரித்திர, சமூக, நகைச்சுவை பொருந்திய, ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த, திரில்லரான இப்படி எத்தனை ஜேனர் உண்டோ அதெல்லாம் படத்தில் நடந்து கொண்டோ கடந்து கொண்டோ இருக்கின்றன. படத்தின் திரைக்கதையை கோர்வையாக இயக்குநராலேயே சொல்ல முடியுமோ என்னவோ..?

கதையின் நாயகன் மாகாபா ஆனந்த், ஒரு இடைவெளிக்குப்பின் வந்தாலும் அவரை எப்படி ரசிக்க முடியுமோ அந்த வேடத்தில் வருகிறார். அவர் இயல்பாகப் பேசும் விஷயங்களே சமயத்தில் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கின்றன. அவர் படத்தில் என்னவெல்லாமோ செய்கிறார்.

செத்துப்போய் மேலோகம் போகிறார். அங்கே வரம் வாங்கி இன்னொரு பெண்ணின் வயிற்றில் கருவாகிப் பிறக்கிறார். அவர் உயிரோடிருந்தால் மாமன்களுக்கு ஆகாது என்று ஒரு சாமியார் குழந்தையைக் கொல்லச்சொல்ல, பிறந்த சில மணிநேரங்களிலேயே ஆற்றில் டைவ் அடித்து தப்பித்து நீந்தி கரை சேர்கிறார். அங்கே இன்னொரு பெற்றோரிடம் வளர்கிறார்.

கிரிக்கெட் பைத்தியங்களாக இருக்கும் அந்தக் குடும்பத்தில் அவரை வளர்க்கும் பாட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஐபிஎல்லில் தடை செய்த செய்தியறிந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொள்ள, சிஎஸ்கே அணியை வாங்கி மீண்டும் களமிறக்கத் திட்டமிடுகிறார் மாகாபா… இடையில் எம்.ஜி.ஆர், ஹிட்லர் வந்து போகிறார்கள். இப்படியே இலக்கில்லாமல் போகிறது கதை.

இரண்டாம் பாதியில் வில்லன் அருள்தாஸிடம் மாட்டிக்கொண்டு அல்லல் படுகிறார் மாகாபா. அந்த அருள்தாஸ் இன்னும் மோசம். கோபம் வந்தால் தன்னிடம் அடியாள்களாக இருப்பவர்களையே விதம் விதமாகக் கொன்று குவிக்கிறார். ஒவ்வொருவரைக் கொல்லும்போதும் கொன்ற கணக்கை அருகில் போடுகிறார்கள். அது 670, 671 என்று கொலைகளைக் கூட்டிக்கொண்டே போகிறது.

நாயகி சூஸா குமார். வத்சன், மதுமிதா, அனு, மனோபாலா எல்லோரும் அங்கங்கே வந்து போகிறார்கள். லாஜிக்கும், கதையுமே இல்லாத படத்தில் இவர்கள் நடிப்பு பற்றியெல்லாம் யார் அக்கறை கொண்டிருக்கப் போகிறார்கள்..?

தரண்குமாரின் இசையும் பழனிகுமாரின் ஒளிப்பதிவும் தங்கள் பங்களிப்பை சரியாக நிறைவேற்றியிருக்கின்றன. 

என்ன செய்தாவது படம் பார்ப்பவரை சிரிக்க வைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் படத்தின் தலையாய நோக்கமாகியிருக்கிறது. அதை மட்டுமே மனத்தில் வைத்து ஜவ்வுமிட்டாய் பொம்மைகள் போன்று தன் இஷ்டத்துக்குக் திரைக்கதையை மாற்றிகொண்டே போகிறார் இயக்குநர் மார்ட்டின். 

‘பாட்ஷா’வை நினைவுபடுத்த படத்தின் தலைப்பை ‘மாணிக்’ என்று வைத்திருக்கிறார்கள். அந்த ‘பாட்ஷா’ பலிக்கவில்லை.

எல்லோரையும் சிரிக்க வைக்கும் நோக்கத்துக்காக இத்தனைப் பாடு பட்டிருக்கும் யூனிட்டையும் படத்தின் ரிசல்ட் சிரிப்புடன் வைத்திருக்க வேண்டுமே..?

இந்த வருடத்தில் ரிலீசான முதல் படம் என்பதில் அவர்கள் பெருமைப்பட்டுக் கொள்ள முடியும். 

மாணிக் – சிரிச்சாதான் ஆச்சு..!