May 2, 2024
  • May 2, 2024
Breaking News
November 5, 2022

லவ் டுடே திரைப்பட விமர்சனம்

By 0 489 Views

காதலின் அடித்தளம் நம்பிக்கை மட்டுமே என்று அழுத்தமாகச் சொல்ல ஆசைப் பட்டிருக்கிறார் இயக்குனரும், நாயகனுமான பிரதீப் ரங்கநாதன்.

கதையை ஒரே வரியில் சொல்லிவிட முடியும். பிரதீப்பும், நாயகி இவானாவும் காதலிக்கிறார்கள். அதற்கு முன் பின் எதுவும் இல்லாமல் ‘ ஹாப் வே ஓபனிங்’கில் தொடங்கும் படம்.

ஆனால், காதலுக்கு வில்லனாகும் இவானாவின் தந்தை சத்யராஜ், இருவரையும் சோதிக்க ஒரு உபாயம் செய்கிறார். இருவரும் அவர்களது கைப்பேசிகளை ஒருநாள் மாற்றி வைத்துக் கொள்ளும் படியும், அதற்குப் பிறகும் அவர்களுக்கு திருமணம் செய்து கொள்ள சம்மதம் என்றால் தனக்கும் சமம்மதம் என்கிறார்.

அப்படி கைப்பேசிகளை மாற்றிக் கொள்வதால் ஒருவரது உண்மை முகம், அடுத்தவருக்குத்  தெரிந்து அவர்களே பிரிந்து விடுவார்கள் என்பது அவரது நம்பிக்கை. அவரது நம்பிக்கை வென்றதா, காதலர்கள் வென்றார்களா என்பது கிளைமாக்ஸ்.

இயக்குநர் பிரதீப்பே நாயகனாக நடித்திருப்பதால் கடிவாளம் இல்லாத குதிரையாக நடித்துத் தள்ளியிருக்கிறார். அந்த நடிப்பில் தனுஷ் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் சாயல் நிறைய.

நாயகி இவானாவின் அழகும், இளமையும் எவரையும் காதல் கொள்ள வைக்கும் என்பதால் அவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட காதல்கள் இருக்கும் என்பது தெளிவு. அதனால், அவரைப் பற்றிய உண்மைகள் அச்சுறுத்தவில்லை.

சத்யராஜுக்கு இதுவரை அவர் ஏற்று நடித்திராத அய்யங்கார் வேடம். அடித்து தூள் கிளப்பி இருக்கிறார். சிதாரை வில்லத்தனத்துடன் அவர் மீட்டுவது புதிய ஐட்டம்.

இந்தப்பக்கம் நாயகனின் அம்மாவாக வரும் ராதிகா மகனிடம் காட்டும் அத்தனை கண்டிப்பும் அவர் நன்மைக்காகவே என்பது சிறப்பு.

நகைச்சுவையாக நகரும் ட்ரீட்மெண்ட் கொண்ட கதையில் பிரதீப்பின் நண்பர்கள் எளிதாக ஸ்கோர் செய்கிறார்கள்.

பிரதீப்பின் அக்காவாக வரும் ரவீனாரவி, யோகிபாபுவை மணந்து கொள்ள சம்மதிப்பதும், பிறகு பிரதீப்பின் அனுபவம் யோகிபாபுவின் மீது சந்தேகம் கொள்ள வைப்பதும் கதை நகர வழி வகுக்கிறது.

என்னதான் அதில் சஸ்பென்ஸ் வைத்தாலும் யோகி பாபுவிடம் எந்தத் தவறும் இல்லாதிருக்கும் என்பது அனுபவ ரசிகர்களுக்குப் புரிந்து விடும்.

ஆனால், யோகிபாபுவின் பாத்திரம் அவர் பெருமைப் பட்டுக் கொள்ளும் அளவில் இருக்கிறது.

தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவு படத்துக்கு பெருமளவு கை கொடுத்திருக்கிறது. 

யுவனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் பொருத்தமாக இருக்கின்றன.

ஆனால், 25 வருடத்துக்கு முன்பே லவ் டுடே படத்தில் விஜய் இருந்தும் வித்தியாசமான கிளைமாக்ஸ் கொடுத்த இயக்குனர் பாலசேகரனின் ‘ தில் ‘ இன்றைக்கு இளைஞர்களின் திருமண உறவு வினோதப்பட்டு இருக்கும் நிலையிலும் (ஒரு வித்தியாசமான கிளைமாக்ஸ் வைக்க) இந்த இயக்குனருக்கு இல்லை என்பது தெளிவு.

அதே தலைப்பை வைத்திருப்பதால் இந்த ஒப்பீடு அவசியமாகிறது.

ஆனாலும் படம் தொடங்கியது முதல் எந்தத் தேக்கமும் இல்லாமல், நேர்த்தியான திரைக் கதையுடன், ரசித்துச் சிரிக்கவும் செய்வதால் படத்தின் வெற்றி உறுதிப்பட்டு விடுகிறது.

இப்படி காட்சிக்கு காட்சி ரசித்து சிரித்து படம் பார்த்து வெகு நாள் ஆகிறது.

லவ் டுடே – நம்பிக்கைதான் காதல்..!