October 30, 2024
  • October 30, 2024
Breaking News
August 25, 2018

லக்ஷ்மி திரைப்பட விமர்சனம்

By 0 1648 Views

நூறாண்டு கண்ட சினிமாவில் சினிமா கண்டுபிடிக்கப்பட்ட நாளிலிருந்து புழங்கி வந்திருக்கும் கதை. ப்ரீ கேஜி குழந்தை கூட அடுத்து என்ன நடக்கும் என்று கண்டுபிடித்து விடக்கூடிய திரைக்கதை. அப்புறம் என்ன…. ஆ…வ்…!

லக்ஷ்மியாக நடித்திருக்கும் தித்யாவுக்கு நின்றால் நடனம், நடந்தால் நடனம், சாப்பிட்டால் நடனம், பஸ்ஸில் ஏரினால் நடனம், அட… படுத்தால் கூட நடனம்தான். தந்தை இல்லாமல் அல்லது அவர் என்ன ஆனாரென்றே தெரியாமல் நடனத்தை வெறுக்கும் அம்மா ஐஸ்வர்யா ராஜேஷுடன் தித்யா வாழ்ந்து கொண்டிருக்க, வருகிறது இந்திய அளவிலான நடனப் போட்டி.

அதில் பங்கெடுக்க, சென்னையில் இருக்கும் டான்ஸ் அகாடெமியில் பங்கெடுக்க வேண்டும். அம்மாவோ டான்ஸ் என்றாலே வெறுக்க, வழியில் காபி ஷாப் வைத்திருக்கும் பிரபுதேவாவுடன் ஏற்படும் நட்பில் அவரை அப்பாவாக நடிக்க வைத்து அகாடமியில் பங்கேற்கிறார் தித்யா.

நடனப்போட்டிக்கான தேர்வின்போதுதான் லக்ஷ்மிக்கு மேடைபயம் இருப்பது தெரியவர, அதனால் ஒட்டுமொத்த சென்னை அணிக்கும் வாய்ப்பு பறிபோகும் சூழலில் பிரபுதேவா வெளிப்பட்டு லக்ஷ்மியை தேர்வு செய்யச் சொல்கிறார். “அதைச் சொல்ல நீ யார்..?” என்று தேர்வாளர் கேட்க, அதுவரை அரைகுறை இருளில் இருந்த பிரபுதேவா வெளிச்சத்துக்கு வந்து நிற்க, அனைவரும் வாய் பிளக்கின்றனர். அவர்தான் இந்தியாவின் நம்பர் ஒன் டான்சராக இருந்த ‘விகே’ என்னும் நடனக் கலைஞர்.

அவரை நடனத்தில் அடித்துக்கொள்ள ஆளில்லை என்ற நிலையில் காதல் பிரச்சினையால் மும்பையை விட்டு வெளியற, அடுத்த ஸ்டேஜில் இருக்கும் டான்ஸர் முதலிடம் பெற்றுவருகிறார். அவரே இப்போதைய மும்பை நடன அணியின் மாஸ்டராக இருக்க, பிரபுதேவாவை போட்டியில் வைத்து வெல்ல வேண்டும் என்ற வைராக்கியத்தில் பிரபுதேவாவே சென்னை அணிக்கு மாஸ்டராக இருந்தால் சென்னை அணிக்கு வாய்ப்புத் தரப்படும் என்கிறார்.

‘பிரபுதேவா ஒத்துக்கொண்டாரா’, ‘அவருக்கு யாருடன் காதல் பிரச்சினை’, ‘அந்தப் பிரச்சினை தீர்ந்ததா’, ‘தித்யாவின் அப்பா யார்’, ‘ஐஸ்வர்யா ராஜேஷின் நடனத்தை வெறுக்கும் மனநிலை முடிவுக்கு வந்ததா’, ‘சென்னை அணி போட்டியில் வென்றதா..?’ என்ற கேள்விகளுக்கெல்லாம் இருப்பதிலேயே அது எளிதான பதில்களாய் நினைக்கிறீர்களோ அதையே இட்டு நிரப்பிவிட்டால் படம் முடிந்து ‘எ பிலிம் பை விஜய்’ கார்டு போட்டாயிற்று என்று அர்த்தம்.

இந்த ‘அடாசு’ கதைக்கு ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவின் பெயரை வேறு டைட்டிலில் போடுகிறார்கள்.

பிரபுதேவா நன்றாக ஆடுவதில் எந்த ஆச்சரியமுமில்லை. ஆனால், அவருக்கேற்ற இசையை வடிக்கத்தான் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் போன்று இசையமைப்பாளர் வாய்க்கவில்லை. (எத்தனை பாடல்களில் அவர் எப்படியெல்லாம் ஆடிப் பார்த்திருக்கிறோம்…? அப்படி முயன்றிருக்க வேண்டாமா..?)

நல்ல வாய்ப்பை கோட்டை விட்ட இசையமைப்பாளர் சாம் சி.எஸ், பிரபுதேவா குழந்தைகளை மோட்டிவேட் செய்து பயிற்றுவிக்கும் நடனத்துக்கும், தித்யா ஆடும் கிளைமாக்ஸ் நடனத்துக்கும் மட்டும் ஒருவாறு பாடல்களைத் தேற்றிப் போட்டு பெயரைக் காப்பாற்றிக் கொள்கிறார்.

நீரவ்ஷாவின் ஒளிப்பதிவிலும் வழக்கமான ஈர்ப்பு இல்லை. அதிலும் ஐஸ்வர்யா ராஜேஷின் மீது அவருக்கு என்ன கோபமோ, ‘காக்கா முட்டை’யில் கூட கண்ணில் ஒற்றிக்கொள்ளும் வனப்புடன் தெரிந்த ஐஸ்வர்யாவை ‘குளோஸ் அப்’களில் காட்டி பயமுறுத்தியிருக்கிறார். போதாகுறைக்கு கோவை சரளாவின் ‘குளோஸ் அப்’ வேறு..!

காமெடிக்கென்று நேர்ந்து விட்டிருக்கும் கோவை சரளாவும், கருணாகரனும் சிரிப்பை வரவழைப்பதற்கு பதிலாக கடுப்பை வரவழைக்கிறார்கள்.

வில்லன் போல் அறிமுகமாகி கடைசியில் திறமைக்கு மரியாதை தரும் சல்மான் யூசுப் கானின் பாடிலேங்குவேஜும், நடனங்களும் அருமை..! மாநகர் பஸ்ஸில் சாம்ஸ் ஒருவர் மட்டுமே கண்டக்டர் போலிருக்கிறது..!

படத்தின் பாராட்டத்தக்க ஒரே அம்சம், பல மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தைகள்தான். ஒவ்வொருவரிடமும் எத்தனை அபார நடனத் திறமைகள்..? அதிலும் தித்யாவும், அர்ஜுனாக வரும் சிறுவன் மற்றும் மும்பை அணிக்காக ஆடும் சிறுவன் ஆகியோர் அற்புதத் திறமையாளர்களாக இருக்கிறார்கள். குழந்தைகளுக்கு திருஷ்டி சுற்றிப் போட வேண்டும்.

கிளைமாக்ஸில் தித்யா அப்ளாஸ்களை அள்ளிக்கொண்டு போகிறாள். கிளைமாக்ஸ் நடனம் மட்டுமே ஒட்டுமொத்தப் படத்திலும் ரசிக்க வைக்கிறது. அதுவரை பொறுமை காக்கும் மனம் இருந்தால் நீங்கள் அதை ரசிக்கலாம்.

“தோத்துடக் கூடாதுங்கிற நினைப்போட பிராக்டிஸ் பண்ணனும்… ஜெயிச்சுக்கிட்டே இருப்போம்கிற நினைப்போட போட்டியில ஆடணும்…” – வெல்டன் ‘அஜயன்பாலா’ வசனம்..!

குழந்தைகளுக்கான படம் எடுப்பது ஒருவகை. படமே குழந்தைத்தனமாக இருப்பது இன்னொரு வகை. இது இரண்டாவது ரகம்.

லக்ஷ்மி – ‘ஆட்டம் கண்ட’ களம்..!