May 2, 2024
  • May 2, 2024
Breaking News
August 12, 2022

லால் சிங் சத்தா திரைப்பட விமர்சனம்

By 0 514 Views

ஹாலிவுட் படங்களை அப்படியே சுட்டு எடுக்கும் வழக்கத்தை மாற்றி அங்கே டாம் ஹாங்க்ஸ் நடித்த ‘பாரஸ்ட் கம்ப்’ படத்தின் உரிமையைப் பெற்று இந்தியப் படமாக எடுத்த நேர்மைக்கே முதலில் ஆமிர்கானுக்குப் பாராட்டைத் தெரிவிக்க வேண்டும்.

(அவரேதான் படத்தின் நாயகன் லால் சிங் சத்தா மட்டுமன்றி தயாரிப்பாளர் என்பதையும் அறிக.)

அதைச் சிதைக்காமல் இந்திய வாழ்வியல் கலந்து எழுதிய அதுல் குல்கர்னிக்கும், அழகியல் கலந்து எடுத்ததற்காக இயக்குனர் அத்வைத் சந்தனுக்கும் அடுத்தடுத்த பாராட்டுகள் போய்ச் சேர வேண்டும்.

கதை இதுதான். தந்தை இல்லாமல் தாயுடன் வசித்து வரும் லால் சிறு வயது முதலே நடக்க சிரமப்படுபவராகவும், எதையும் தாமதமாகப் புரிந்து கொள்பவராகவும் இருக்கிறார். அவரது பிரச்சனை காலில் இல்லை மனதில் இருக்கிறது என்று மருத்துவர் ஆலோசனை சொன்னாலும் அதை எப்படி மாற்றுவது என்று தெரியாமல் அவரை ஆபத்து அணுகாமலேயே வளர்க்கிறார் அவரது அன்னை.

ஆனால் பள்ளித் தோழி ரூபா என்கிற சிறுமி மட்டும் அவரது தன்னம்பிக்கையை வளர்க்க உதவுகிறார். அதன் காரணமாக நடப்பதற்கு சிரமப்படும் அவர் வேகமாக ஓடவும் செய்கிறார் ரூபா கூறியபடி எப்போதெல்லாம் ஆபத்து அவரை துரத்துகிறதோ அப்போதெல்லாம் வேகமாக ஓடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். ஆனால் மனநிலை மட்டும் குழந்தைத்தனமாகவே இருக்கிறது. இதன் காரணமாக அவரை மன வளர்ச்சி இல்லாதவராகவே சமூகம் கருதுகிறது.

பதின் பருவ வயது கடந்து, பருவம் எய்தியதும் ரூபாவுக்கு சினிமா நடிகையாகும் ஆசை துளிர் விட அதனால் மும்பை செல்கிறார். சிறு வயது முதலே ரூபாவை திருமணம் செய்ய ஆசை கொண்டிருக்கும் ஆமீர் கானுக்கு இது பேரதிர்ச்சியாக இருக்கிறது. அதை மறக்கவும் அம்மாவின் சொல்படி ராணுவத்தில் சேர்ந்து குடியரசுத் தலைவரிடம் விருது பெறுவது வரை உயர்கிறார்.

ஆனால் தன் ஆசை நிராசையாகப் போன ரூபா மீண்டும் லாலுடன் சேர்ந்தாரா, இருவரும் இணைந்து வாழ்ந்தார்களா என்பது மீதிக்  கதை.

லாலாக ஆமிர் கானும், ரூபாவாக கரீனா கபூரும் நடித்திருக்கிறார்கள். அவர்களின் சிறு பருவத்தினரா தோற்றத்தில் வரும் குழந்தைகளும் அற்புதத் தேர்வு.

இந்தப் படத்தில் ஆச்சரிய விஷயங்களில் ஒன்று – பதின் பருவ அமீர் கான் அப்படியே அந்த பருவத்துக்காரராக தோன்றுவதும், வயது முதிர முதிர அவர் உடலிலும் முகத்திலும் முதிர்ச்சி ஏறுவதும்தான்.

இந்தக்கதை ரூபாவைத் தேடிச் செல்லும் ஆமிர் கான் ரயிலில் தன் சக பயணிகளிடம் சொல்வது போல் ஃப்ளாஷ்வாக்காக அமைந்திருக்கிறது. 

படம் முழுதும் ஆமீர் கான்தான் நிறைந்திருக்கிறார். உடல் மொழியுடன் வசன மாடுலேஷனையும் மாற்றி ஒரு அற்புத நடிப்பைக் கொடுப்பதற்கு இந்தியாவில் ஒரு சில பேரால்தான் முடியும் அதில் ஒருவர் ஆமீர்கான் என்பதை இதில் நிரூபித்து இருக்கிறார். அந்த சிக்கலான பாத்திரத்தை மனத்தில் ஏற்றிக் கொண்டால் மட்டுமே இவ்வளவு அற்புதமாக அவரால் நடித்திருக்க முடியும்.

அதேபோல் எந்த படத்திலும்… இன்னும் கேட்டால் தனது இளமையிலும் கூட இவ்வளவு அழகாக கரீனா கபூர் இருந்திருப்பாரா என்று தெரியவில்லை. அத்தனை இளமையாகவும் அழகாகவும் இருக்கிறார் கரீனா.

ஆமிர் கான் சொல்லும் தன் வாழ்க்கை பிளாஷ்பேக் கதையில் பொற்கோவில் ஆக்கிரமிப்பு, இந்திரா காந்தி மரணம், பாபர் மசூதி இடிப்பு, கார்கில் போர், அண்ணா ஹசாரே உண்ணாவிரதம், மும்பை தாஜ் ஓட்டல் தாக்குதல், அத்வானி ரத யாத்திரை என ஒவ்வொரு காலகட்டத்திலும் அப்போதைய இந்திய அரசியல் நடந்த முக்கிய நிகழ்வுகளை திரைக்கதையின் போக்கில் இணைத்திருப்பதால் இந்தக் கதையை உண்மைக் கதையாகவே நம்மால் உணர முடிகிறது.

தான் சிறுவனாக இருந்தபோது ஷாருக்கான் என்ற சிறுவனுக்கு நடனம் கற்றுத் தருவதும், அந்த ஷாருக்கான் பின்னாளில் இந்திய திரைவானில் நடிகராக உயர்ந்திருப்பதைச் சொல்லும் போதும் சக பயணிகளைப் போலவே நமக்கும் சிரிப்பு பொத்துக் கொண்டு வருகிறது. ஷாருக்கானின் சிறுவயது கிராபிக்ஸ் அசத்தலோ அசத்தல்.

இப்படி ஒரு மனநிலை உள்ளவரை ராணுவத்தில் சேர்த்துக் கொள்வார்களா, இந்தியர் யார் தீவிரவாதி யார் என்று தெரியாமல் அவர் கண்ணில் பட்டவர்களை எல்லாம் காப்பாற்றிக் கொண்டிருப்பதையும் ஏற்க முடியவில்லை.

சற்று மெதுவே நகரும் திரைக்கதையும் தமிழில் எழுதப்பட்ட வசனங்களும் இந்த கவிதையான படத்துக்கு ஸ்பீட் பிரேக்கர்கள் ஆக இருப்பதை சொல்லியே ஆக வேண்டும்.

ஒளிப்பதிவு உலகத் தரத்தில் இருக்கிறது இசையும் அப்படியே. ஆனால் பாடல்கள் அனைத்தும் மெலடி ரகமாகவே இருப்பதால் மெதுவே நகரும் படத்தை இன்னும் மெதுவே ஓட்டுகிறது

அதையெல்லாம் மறந்துவிட்டுப் பார்த்தால் ஆமீர் கானின் இந்த லால் சந்த் சத்தா, ‘சத்தான படைப்பு’ என்று சொல்ல முடியும்..!