May 2, 2024
  • May 2, 2024
Breaking News
March 19, 2022

குதிரைவால் திரைப்பட விமர்சனம்

By 0 634 Views

கிடைத்தற்கரிய ஒரு பொருளை குதிரைக் கொம்பு என்பார்கள். இந்தப் பட இயக்குனர்கள் மனோஜ் மற்றும் ஷியாம் அப்படி ஒரு அரிய விஷயத்தை குதிரைவாலாக மாற்றியிருக்கிறார்கள்.

சினிமாவில் காட்சிப்படுத்தப்படும் கனவுகளுக்கும் நாம் நிஜத்தில் காணும் கனவுகளுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. சினிமாவில் வரும் கனவுகள் மிகுந்த லாஜிக்கோடு நிஜத்தின் நகல் போலவே காட்டி பின்னால் அதைக் கனவு என்று சொல்லி முடிப்பார்கள். ஆனால் வாழ்க்கையில் நாம் காணும் கனவுகளில் எந்த லாஜிக்கும் இருக்காது. நம் நினைவுப் படிமங்களில் தங்கிவிட்ட விஷயங்கள் கனவுகளாக உருப்பெறும்போது பல வித மாயக் காட்சிகள் தோன்றுவது இயல்பு.

சில நாட்களில் அப்படி நாம் கனவு கண்டு கண் விழிக்கும் போது அது கனவா இல்லை நிஜமா என்று புரிந்து கொள்வதற்கு சில நிமிடங்கள் தேவைப்படும்.

அந்த சில நிமிடங்கள், கால வர்த்தமானங்களைத் தாண்டி நீண்டு கொண்டிருந்தால் என்ன ஆகும் என்பதுதான் இந்தப் படத்தில் இயக்குனர்கள் எடுத்துக் கொண்டிருக்கும் லைன்.

இலக்கியங்களில் கையாளப்படும் ‘பின் நவீனத்துவம்’ என்கிற விஷயத்தை ஒரு திரை முயற்சியாக ஆக்கி இருக்கும் இவர்களைப் பாராட்டலாம். ஆனால் இலக்கிய அளவில் பின் நவீனத்துவ சிந்தனைகளை படைப்பதாகட்டும் படிப்பதாகட்டும் சாத்தியமான விஷயம். திரைப்படங்களில் அவற்றைக் கையாளும்போது அதைப் படைப்பதும் கடினம், அதைப் புரிந்து கொள்ள பலமுறை பார்ப்பதும் கடினம் என்கிற அளவில் இந்த முயற்சியை மேற்கொண்ட அவர்களுக்கும் படத்தைத் தயாரித்த யாழி பிலிம்ஸ், வெளியிட முன்வந்த நீலம் புரடக்‌ஷன்ஸ் பா. ரஞ்சித் முதலானவர்களுக்கு ஒரு கைத்தட்டல் கொடுக்க வேண்டியிருக்கிறது.

காரணம், இது ஒரு அரிய முயற்சி என்பதுடன் வணிகத்தனமான சினிமாவில் அதற்கு நிகராக மாற்று சினிமாவை சிந்திக்க வேண்டிய அவசியம், கலைக்கு காலம் தோறும் இருக்கிறது. அதை யார் முன்னெடுப்பது என்பதில்தான் பிரச்சினையே. அப்படி ஒரு முயற்சியான இந்தப் படத்தை சினிமாவின் இன்னொரு பரிணாமமாகக் கொள்ள முடியும்.

படத்தில்… நாயகன் கலையரசன் ஒருநாள் தூக்கத்திலிருந்து விழிக்கும்போது தனக்கு குதிரை வால் முளைத்திருப்பதை உணர்கிறார். அதை நிஜமென்றே நினைத்து அது எப்படி நேர்ந்தது என்று ஆராய முற்பட்டு அதன் காரணத்தைத் தேடுகிறார். 

அந்தத் தேடலில் ஒரு பாட்டி, கணித ஆசிரியர், ஜோதிடர் என பலரும் வர அவர் தேடல் முற்றுப்பெற்றதா என்பதுதான் கதை.

ஒரு பக்கம் சரவணனாக, இன்னொரு பக்கம் ஃபிராய்டாக தன்னை உருவகித்துக் கொள்ளும் கலையரசனுக்கு இந்தப்படம் முக்கியமானது. காரணம் இந்தப்படம் சர்வதேச அளவில் கவனம் பெறும் என்பதால் அதன் பலன் அவருக்கும் கிடைக்கும். 

வால் இல்லை – ஆனால் வால் இருப்பதாக நம்மை உணரச் செய்யவேண்டும் என்ற சவாலில் வெற்றி கண்டிருக்கிறார் அவர். குதிரையைப் போலவே அவர் உடலைச் சிலிர்க்கும்போது நமக்கும் சிலிர்க்கிறது. படம் நெடுக அவர் பாத்திரம் அடையும் குழப்பத்தை அவர் முகம் நன்றாகவே பிரதி பலித்திருக்கிறது.

அஞ்சலி பாட்டிலுக்குப் பெரிய வேலையில்லை என்றாலும் கதையைப் புரிந்து கொண்டு வினை ஆற்றியிருக்கிறார்.

வாழ்வில் நம் போக்கு எப்படி இருந்தாலும் அதற்கு இவ்வுலகம் உடன்பட்டு ஊதிப் பெரிதாக்கும் என்பதை உடன் வரும் முக்கியப் பாத்திரங்களான லட்சுமி பாட்டி, சேத்தன், கே.எஸ்.ஜி.வெங்கடேஷ் உணர வைக்கிறார்கள். எல்லாப் பிரச்சினைகளுமே அவரவர் பார்வையில் ஒரு நியாயம் சொல்வதை இந்தப் பாத்திரங்கள் உணர்த்துகின்றன.

ஒளிப்பதிவாளர் கார்த்திக் முத்துக்குமாரும், எடிட்டர் கிரிதரனும் எந்தப் புரிந்துணர்வில் இயங்கினார்கள் என்று தெரியவில்லை. இது சரி என்றோ, சரியில்லை என்றோ சொல்ல முடியாத ‘நான் லீனியர் எடிட்டிங்’கில் பயணிக்கிறது படம்.

ஆனால், கனவுலகத்தை காட்சிப்படுத்தி இருப்பது நன்றாக இருக்கிறது. பிளாஷ்பேக் கிராமம் மனத்தைக் கொள்ளை கொள்கிறது. கோணங்களில் அதிக சிரத்தை கொள்ளாமல் இருப்பதும் ஒரு உத்தி என்பது புரிகிறது.

பிரதீப், மார்டின் விஸ்ஸரின் இசையமைப்பு படத்தின் உணர்வுக்கு சரியாகப் பொருந்தி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத சக்தியான எம்.ஜி.ஆர் மாற்று முயற்சியாக உருவான இந்தப்படத்திலும் இடம் பெற்றிருப்பது பொருத்தம்தான். ஆனால், எம்.ஜி.ஆர் ரசிகர்களால் அதைக் கொண்டாட முடியாது என்பது வருத்தம்.

ரசிகனுக்குப் புரிகிறதோ இல்லையோ எந்த முயற்சியிலும் ரசிக்க வைக்கும்படி செய்ய முடியும் – செய்யவும் வேண்டும். அந்த ஒரு விஷயத்தில் இயக்குனர்கள் கவனம் செலுத்தி இருக்கலாம்.

அப்படி செய்யும் அடுத்தவர்களின் முயற்சியில் இந்தப் பின் நவீனத்துவப் படங்களும் வெகுஜன ரசிகனை சென்றடையலாம்.

அதற்கான முன்னெடுப்பில் இந்தக் குதிரைவால், பந்தயத்தில் முதலில் ஓடும் குதிரையின் மூக்காக அமைகிறது.

– வேணுஜி