கொரோனா வைரஸ் பீதியில் உலகநாடுகளே உறைந்து கிடக்க, இந்தியாவுக்கும் ஆபத்து நெருங்கி வருகிறது. என்னதான் தமிழ்நாட்டுக்கு ஆபத்து இல்லையென்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சொன்னாலும் நேற்று தொடக்கப்பள்ளிகள், எல்லையோர மாவட்ட மால்கள், தியேட்டர்களை மூடச்சொல்லி முதல்வர் உத்தரவு பிறப்பித்தது சூழலின் நெருக்கடியை உணர்த்துவதாக இருக்கிறது.
இந்நிலையில் இந்தவாரம் வெளியாக இருந்த ‘காவல்துறை உங்கள் நண்பன்’, ‘காக்டெயில்’ உள்ளிட்ட படங்களின் வெளியீடும் தள்ளிப்போகிறது. இந்தவாரம் நடக்கவிருந்த சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு விட்டன. அதில் ஜோதிகா நடிக்கும் ‘பொன்மகள் வந்தாள்’ ஆடியோ வெளியீடும் ஒன்று.
அப்படியானால் படப்பிடிப்புகள் மட்டும் தொடர்ந்து நடக்குமா..? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியாவெங்கும் இந்தி, தெலுங்குப்படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டிருக்க, தமிழ்ப்படப்பிடிப்புகள், மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் தொடர்பான கேள்விகள் எழுந்துள்ளன.
இதற்கு பதிலளிக்கும் விதமாக குஷ்பு சுந்தர் பேசிய ஆடியோ ஒன்றில் சின்னத்திரை படப்பிடிக்களில் பலர் இணைந்து பணியாற்ற வேண்டி இருப்பதால் நோய்த்தொற்று வர வாய்ப்பு இருப்பதாகவும் அதனால், டிவி மற்றும் திரைப்படங்களின் படப்பிடிப்புகளை நிறுத்தக் கோரி ஆர்.கே.செல்வமணியிடம் பேசியிருப்பதாகவும், இன்று 3 மணிக்கு அவர் இது தொடர்பான முடிவை அறிவிப்பார் என்றும் கூறியிருக்கிறார்.
கொரோனா வைரஸ் படப்பிடிப்புகள் மூலம்தான் பரவியது என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகாமல் இருக்கவே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்றும் குஷ்பு கூறியிருக்கிறார்.