January 25, 2022
  • January 25, 2022
Breaking News
March 18, 2019

கிரிஷ்ணம் திரைப்பட விமர்சனம்

By 0 563 Views

பக்திப்படங்கள் வருவது அருகிவிட்ட இக்காலத்தில் மீண்டும் கடவுள் பக்தி கொண்டவர்களுக்காகத் தயாரிக்கப்பட்ட நவீனப் படம்.

வழக்கமாக பக்திப்படம் என்றாலே அது கற்பனைக் கதைகளை அடியொற்றிதான் இருக்கும். யாரோ சொன்னது, யாருக்கோ நடந்தது என்கிற அளவிலேயே அவை தயாரிக்கப்படும்.

ஆனால், தன் வாழ்வில் நடந்த… இன்னும் சொல்லப்போனால் தன் மகனுக்கு நேர்ந்த ஒரு அனுபவத்தை அப்படியே படமாகத் தயாரித்திருக்கிறார் பி.என்.பலராம். இதுவே இந்தப்படத்தின் மீதான நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம்.

அத்துடன் அப்படித் தயாரான படத்தில் தன் மகனையே ஹீரோவாக்கியிருப்பதும் உலக சினிமாவில் ஒரு ஆச்சரியமான அங்கம். படம் எப்படி பார்க்கலாம்.

பெரும் தொழிலதிபர் சாய்குமாரின் மகனாக வருகிறார் நாயகன் அக்‌‌ஷய் கிருஷ்ணன். குருவாயூர் கிருஷ்ண பக்தராக இருக்கும் சாய்குமார் தன் மகன் அக்‌‌ஷய் கிருஷ்ணனை ஒரு நண்பன் போலவே பாவித்து பழகி வருகிறார். அக்க்ஷய் கிருஷ்ணனின் அம்மாவாக சாந்தி கிருஷ்ணா. (நினைவிருக்கிறதா இந்த பன்னீர் புஷ்பங்கள் நாயகியை..?)

கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் அக்‌ஷய் கிருஷ்ணாவுக்கு நல்ல நண்பர்கள் குழு ஒன்று இருக்கிறது. அதே கல்லூரியில் படிக்கும் ஐஸ்வர்யா உல்லாஸுடன் காதல் வயப்படுகிறார் அக்‌ஷய். மகனின் எல்லா செயல்களுக்கும் துணையாக இருக்கும் தந்தை சாய்குமார் இந்த காதலுக்கும் துணையாக இருக்கிறார்.

இந்நிலையில், கல்லூரியில் நடக்கும் ஒரு போட்டியில் அக்‌‌ஷய் கிருஷ்ணனுக்கு உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. சாதரணமாக ஆரம்பிக்கும் அந்த பிரச்சினை போகப்போக விஸ்வரூபம் எடுக்கிறது. பத்து லட்சம் பேரில் ஒருவருக்கு வரக்கூடிய Chronic Constrictive Pericarditis என்றழைக்கப்படும் அந்த நோய்க்கு அறுவை சிகிச்சை ஒன்றுதான் வழி. ஆனால் அதிலும் உயிர்பிழைக்க ஒரு சதவிகிதம்தான் வாய்ப்பு என்கிறார்கள்.

மனம் கலங்கிப்போனாலும் குருவாயூர் கிருஷ்ணன் மீது அபார நம்பிக்கை கொண்ட சாய்குமார் ஆபரேஷனுக்கு ஒத்துக் கொள்கிறார். என்ன நடந்தது என்பது கிளைமாக்ஸ்.

தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியாகியிருக்கும் இந்தப்படத்தில் அக்‌ஷய் கிருஷ்ணின் வேடம் அப்பழுக்கில்லாமல் படைக்கப்பட்டிருக்கிறது. ஏதோ தவறுசெய்வது போல் தெரிந்தாலும் அதன் பின்னணியில் அவரது நல்லெண்ணமே வெளிப்படுகிறது. முதல் படம் என்றே தெரியாத அளவுக்கு நடித்திருக்கும் அக்‌ஷய்க்கு ஹேர் ஸ்டைலை மட்டும் மாற்றிக் கொண்டால் நல்ல எதிர்காலம் இருக்கிறது.

அக்க்ஷய் கிருஷ்ணனின் காதலியாக ஐஸ்வர்யா உல்லாஸ் லட்சணமாக இருக்கிறார். நடிப்பும் இயல்புத்தன்மை மாறாமல் இருக்கிறது.

குருவாயூர் கிருஷ்ணன் மீது அளவு கடந்த நம்பிக்கை கொண்டவராக வரும் சாய்குமாருக்குதான் நடிக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது. அவரும் அனுபவ நடிப்பில் அசத்துகிறார். அவரது மன உறுதி அது பக்தியாக இருந்தாலும் தப்பில்லை ஒருவருக்கு இருந்தால் எதையும் சாதிக்கலாம். சாந்தி கிருஷ்ணாவும் கணவனது பதற்றத்தைத் தணிக்கும் அளவில் இயல்பாக நடித்திருக்கிறார்.

முன்பாதி முழுக்க கல்லூரியில் கடக்கும் கதை பின்பாதியில் மருத்துவமனை, அறுவை சிகிச்சை என்று பதைபதைக்க வைக்கிறது. அறுவை சிகிச்சையின் போது நம் இதயத்துடிப்பு வெளியே கேட்கிற அளவுக்கான பதட்டத்தில் விரையும் படம் குருவாயூர் கிருஷ்ணனின் அருளில் பதற்றம் தணித்து நிறைகிறது. பதைபதைப்பான இயக்கத்துடன் ஒளிப்பதிவையும் ஏற்றிருக்கிறார் தினேஷ் பாபு.

ஆர். ஹரிபிரசாத் இசையில் கல்லூரி விழாப் பாடலில் உற்சாகமும், பிற பாடல்களில் உருக்கத்தையும் நிறைக்கிறார்.

ஒரு உண்மைக்கதையான இந்தப்படத்தை வணிக ரீதியிலான சினிமா மொழியில் சொல்லியிருக்கிறார் தினேஷ் பாபு. அதையே இயல்பான கதையோட்டத்தில் சொல்லியிருந்தால் இன்னும் கூட நாம் ஒன்றிப்போயிருக்க வாய்ப்பிருக்கிறது.

கிருஷ்ணம் – கடவுளை நம்புவோர் கைவிட மட்டார்கள்..!