October 10, 2024
  • October 10, 2024
Breaking News
  • Home
  • Uncategorized
  • கொட்டுக்காளி திரைப்பட விமர்சனம்
August 21, 2024

கொட்டுக்காளி திரைப்பட விமர்சனம்

By 0 66 Views

சர்வதேசப் பட விழாக்களில் பல விருதுகளை வென்ற கூழாங்கல் பட இயக்குனர் பி.எஸ்.வினோத் குமார், சூரியை நாயகனாகக் கொண்டு இயக்கிய படம் இது என்பதாலும், சிவகார்த்திகேயன் இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார் என்பதாலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இதற்கு இருந்தது. 

அந்த எதிர்பார்ப்பைப் படம் பூர்த்தி செய்து இருக்கிறதா என்று பார்ப்போம். 

இது வழக்கமான சினிமாவாக இருக்காது என்பது நாம் அறிந்ததுதான். மாற்று சினிமாக் களத்தில் அமைந்துள்ள இந்தப் படம் ஒரு இசையமைப்பாளரின் பின்னணி இசை கூட தேவைப்படாமல் சுற்றுப்புறத்தில் ஒலிக்கும் இயல்பான காட்சி ஒலிகளினூடே நகர்கிறது. 

தென் மாவட்டங்களில் ‘ கொட்டுக்காளி’ என்கிற சொல் பிரபலம். இதற்குப் பொருள் ‘பிடிவாதமான பெண்’ என்பதுதான். அப்படி நாயகி அன்னா பென் பிடிவாதக்காரப் பெண்ணாக ஏதோ ஒரு விஷயத்தை மனதில் நினைத்துக் கொண்டு உறைந்து போய் இருக்க, அவருக்கு கிராமத்து நம்பிக்கையின்படி பேய் பிடித்து விட்டது என்று அந்தக் குடும்பம் நம்புகிறது. 

அதன்படி அவர் மீது ஏறிய பேயே இறக்கும் (!l விதமாக, முறை மாமனான நாயகன் சூரியின் தலைமையில் அன்னா பென்னுடன்  கிளம்புகிறது அந்தக் குடும்பம். இந்தப் பயணமும் அதன் முடிவும்தான் கதை.

டைட்டில் ரோலாகக் கிடைத்திருக்க, மலையாள நடிகை அன்னா பென்னின் அலட்டிக்கொள்ளாத  நடிப்பு ஆச்சரியப்பட வைக்கிறது. தான் நினைப்பதும் நடப்பதும் சரிதான் என்கிற பிடிவாதத்தில் யாருடனும் சொல்லுக் கட்டாமல் யாருடனும் மல்லுக் கட்டாமல் தான் உண்டு தன் காதல் உண்டு என்று இறுகிப் போய்க் கிடக்கும் நடிப்பில் மிரள வைக்கிறார். 

ஒன்றரை மணி நேரப் படம் முழுவதும் அவருக்கு ஒரே ஒரு இடத்தில் முணுமுணுக்கும் வசனம் மட்டுமே வைத்திருக்கிறது. மற்ற எந்த இடத்திலும் அவர் ஒரு வார்த்தை பேசவில்லை. ஆனால் அவர் நடிப்பு பேசப்படும்.

சூரி இதில் ஏற்றிருக்கும் பாத்திரம் அவர் விரும்பி ஏற்றது. “நீ உம் னு சொல்லு ரதி மாதிரி பொண்ணுங்கள கொண்டு வந்து நிறுத்துறேன். இவளை ஏன் கட்டிக்க பிடிவாதமா நிற்கிறே..?” என்று கேட்கும் தங்கையை ஒரு முறைப்பில் அடக்குவதாகட்டும், அத்தை மகளைப் படிக்க வைக்கச் செலவு செய்து படிக்கப் போன இடத்தில் வேறு சாதிக்காரன் ஒருவனை காதலிக்கும் விஷயம் தெரிந்தும் அவளைக் கட்டுவதில் பிடிவாதம் பிடிக்கும் ஒரு முரட்டு வாலிபனின் பாத்திரத்தை அப்படியே உயிர்ப்புடன் கொண்டு வந்திருக்கிறார் சூரி. 

அந்தக் காரணத்திலேயே அந்த மொத்தக் குடும்பமும் அன்னா பென்னை குணப்படுத்த போய்க்கொண்டிருக்க, யாரிடமும் ஒரு வார்த்தை பேசாமல்… ஆனால் தனக்கு பிடித்த பாடலை முணு முணுத்துக் கொண்டு வருவதைப் பார்த்ததும் வருகிறதே சூரிக்கு கோபம்..?!

அன்னா பென்னை மட்டுமல்லாமல்… அந்த ஒட்டு மொத்தக் குடும்பத்தையும் அடித்துத் துவைத்து துவம்சம் செய்து விடுகிறார். 

மற்றபடி சூரியின் தந்தை, அக்கா, தங்கை, அத்தை, மாமா என்று அந்த மொத்தக் குடும்பமும் இயல்புக்கு ஒரு மில்லி மீட்டர் கூடவோ அல்லது குறையாமலோ நடித்திருப்பது அற்புதம். சம்பந்தமில்லாமல் இவர்களிடம் வந்து மாட்டிக் கொள்ளும் ஆட்டோ டிரைவரும் கூட பரிதாபம். 

இவர்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டு விடுகிறார் பெண்களிடம் வைத்த மருந்தை வெளியே எடுக்கும் அந்தப் பூசாரி. இளம் பெண்களின் அந்தரங்க இடத்தில் எல்லாம் கையை வைத்து அவர் தடவுவதைப் பார்க்கும் போது இன்றைய நாட்டு நடப்பு பளிச்சென்று நமக்குச் சுடுகிறது. 

அதுவே சூரிக்கும் சுட, அவர் என்ன முடிவு எடுக்கிறார் என்பதை நம்மிடமே விட்டுவிட்டு எஸ்கேப் ஆகி விடுகிறார் இயக்குனர். 

அத்துடன் பிரச்சனை ஒரு காதல் விஷயமாக இருக்க அதை விட்டுவிட்டு போலி சாமியாரிடம் வந்து சிகிச்சை பெற்றார்களா இல்லையா என்பதாக முடிவது திருச்சிக்கு டிக்கெட் எடுத்து விட்டு திண்டிவனத்தில் இறங்கிய கதையாகிறது.

படத்தில் பின்னணி இசை இல்லை என்பது ஒரு குறையாக இல்லை. ஆனால், உலகத்தரம் என்பதாக தேவையற்ற காட்சிகளின் நீளம் சற்று அலுப்பை ஏற்படுத்துகிறது. 

இடையே ஏ ஆர் ரகுமானின் ஒரு பாடலைப் போட்டு பாடல் இல்லாத குறையைப் போக்கிவிடுகிறார் இயக்குனர். 

பேய் ஓட்டும் போது பலி கொடுப்பதற்காக ஒரு சேவலை வாங்கி வீட்டில் கட்டிப் போட்டு வைத்திருக்க, அந்தச் சேவலை அன்னாவும் அன்னாவை அந்தச் சேவலும் மாறி, மாறிப் பார்த்துக் கொண்டிருப்பது சிறப்பான காட்சி.

சமுதாய முன்னேற்றம் அடையாத அந்தப்  பழமைவாதக் குடும்பத்திடம் அந்த சேவலைப் போலவே நாம் மாட்டிக் கொண்டிருக்கிறோம் என்று அன்னா நம்மிடம் சொல்லாமல் புரிய வைக்கும் காட்சி அது.

புதிய முயற்சிதான் என்றாலும் முழுமை அடையாமல் தொக்கி நிற்பதில்…

இந்தக் கொட்டுக்காளி, நாம் கொட்டிய எதிர்பார்ப்பை காலி செய்கிறது.

ஆயினும், இப்படி ஒரு மாற்றுச் சினிமாவுக்கான படத்தைத் தயாரிக்க முன் வந்ததில் நடிகர் சிவகார்த்திகேயனை தனியாகப் பாராட்டலாம்..!

– வேணுஜி