March 3, 2025
  • March 3, 2025
Breaking News
March 2, 2025

கூரன் திரைப்பட விமர்சனம்

By 0 16 Views

முன்பெல்லாம் நாய்களை வைத்து எடுக்கப்பட்ட படங்கள் நாய்கள் எப்படி மனிதர்களை காப்பாற்றுகின்றன என்ற கதையைக் கொண்டிருந்தன.

இப்போது நாய்களை மனிதர்கள் எப்படி காப்பாற்றுகிறார்கள் என்று எடுக்க ஆரம்பித்து விட்டார்கள். சமீபத்தில் வந்த அலங்கு படமும் இதற்கு சாட்சி. 

இந்தப் படமும் சட்டப் போராட்டம் நடத்தும் ஒரு நாய்க்கு ஒரு வழக்கறிஞர் எப்படி உதவி செய்கிறார் என்ற கதையைக் கொண்டிருக்கிறது.

இதுவரை மனிதர்களுக்கான நீதியைக் காப்பாற்ற சட்டத்தைக் கையில் எடுத்த ‘திரையுலக சட்ட மேதை’ எஸ்.ஏ.சந்திரசேகரன் இந்தப் படத்தில் அதே சட்டங்களை வைத்து நாய்க்காகப் போராடுகிறார்.

கொடைக்கானலில் குடிபோதையில் காரை ஓட்டி வரும் ஒருவன் தன் குட்டியின் மீது காரை ஏற்றிக் கொன்றதை நேரில் பார்த்த தாய் நாய், முதலில் காவல் நிலையம் சென்று முறையிடுகிறது. 

பேசும் மனிதர்களின் கோரிக்கைகளே ஏற்கப்படாத காவல் நிலையத்தில் நாயின் தவிப்பு புரிந்து கொள்ளப்படுமா என்ன? நாயைக் காவலர்கள் விரட்டுகிறார்கள். காவல் நிலைய வாசலிலேயே கிட்டத்தட்ட தர்ணா செய்வதைப் போன்று அமர்ந்திருக்கும் நாய் அங்கு வரும் வழக்கறிஞர் எஸ்ஏசி யின் நல்ல குணத்தைப் புரிந்து கொண்டு அவரைப் பின் தொடர ஆரம்பிக்கிறது. 

ஒரு கட்டத்தில் நாயின் தவிப்பை புரிந்து கொள்ளும் அவர் எப்படியான சட்டப் போராட்டம் நடத்தி அந்த நாய்க்கு நீதி வாங்கித் தந்தார் என்று சொல்லும் படம் இது. 

சட்டநாதன் என்றாலே எஸ்.ஏ.சிதான் என்று ஆகிவிட்ட தமிழ்ப் பட உலகில் அவரைவிட இந்த பாத்திரத்திற்குப் பொருத்தமான யாரையும் தேர்வு செய்து விட முடியாது. இந்த வயதிலும் நடை, ஓட்டம் என்று பயணப்பட்டுத் தன் பாத்திரத்துக்கு வலு சேர்க்கிறார்.

அப்புறம் அந்த நாய்… பேச்சுத் திறன் மட்டும்தான் இல்லை அதற்கு. மற்றபடி காரின் நிறம், நம்பர், தன்னுடைய பெயர் எல்லாவற்றையும் தெளிவாகச் சொல்கிறது…

எப்படி என்கிறீர்களா..? நாயின் மொழியை புரிந்து கொள்ளக்கூடிய ஒரு சாப்ட்வேரை வைத்திருக்கும் சத்யன் மூலமாக இது சாத்தியமாகிறது. 

நாய்தானே என்று நீதியைக் ‘குரை’ க்காமல்… ஸாரி…குறைக்காமல், அதன் எல்லா வாதங்களையும் ஏற்கும் நல்ல நீதிபதியாக வருகிறார் ஒய் ஜி மகேந்திரன்.

நாயைக் கொன்றவருக்காக வாதாடும் பாலாஜி சக்திவேல், போலீஸ் நாயை உயர் அதிகாரியின் ஆணைக்கு கீழ்ப்படிந்து அனாதரவாக விட்டுவிட்டு போகும் சரவண சுப்பையா, பார்வையில்லாமல் ஐ விட்னஸ் சொல்லும் ஜார்ஜ் மரியான், எஸ்.ஏ.சியின் உதவியாளர் இந்திரஜா ரோபோ சங்கர் என்று மற்ற பாத்திரங்களில் வருபவர்களும் இயக்குனர் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி குறை இல்லாமல் செய்திருக்கிறார்கள்.

மார்டின் தன்ராஜின் ஒளிப்பதிவு படத்தின் தன்மைக்கு ஏற்ப பயணப்பட்டு இருக்கிறது.

இசையமைப்பாளர் சித்தார்த் விபின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கூட அப்படியே.

நாய்க்கான சட்டப் போராட்டம் நடத்தும் கதை இது என்றாலும் கடைசி கடைசியாக, மதுவின் தீமைகளையும் படம் கண்டிக்கிறது. “மதுக்கடைகளால் எவ்வளவு பணம் விழுகிறது என்றுதான் பார்க்கிறார்களே தவிர, அதனால் எத்தனை பிணம் விழுகிறது என்று அரசாங்கம் பார்ப்பதில்லை…” என்று எஸ்.ஏ.சி பேசும் வசனம் அதற்குச் சான்று.

மனிதர்களுக்கு மட்டுமல்ல எல்லா உயிர்களுக்கும் சட்டம் பொதுவானதுதான் என்று சொல்லி இருக்கும் இயக்குனர் நிதின் வேமுபதியின் இந்த இந்த முயற்சிக்காக நாய்கள் மட்டுமல்ல… நாமும் நன்றி பாராட்டலாம்.

இருந்தாலும் படத்தில் அங்கங்கே லாஜிக், லந்து பண்ணுகிறது. போலீஸ் நாய்கள் டிஎஸ்பி பதவி வரை பெறத் தகுதியுள்ளவை என்ற நிலையில் இப்படி எல்லாம் இன்ஸ்பெக்டர் சொன்னதற்காக கண்மூடித்தனமாக அதை கொல்வதோ அல்லது நிர்க்கதியாக விட்டுவிட்டு வருவதோ நடக்காத விஷயம்.

அதேபோல் சம்பந்தப்பட்ட நாய் பெண்ணாக இருக்க அதற்கு ஜென்சி என்று பெயர் வைத்தது பொருத்தமாக இருக்கிறது. ஆனால், நாயின் கூற்றின்படி அதனுடைய உண்மையான பெயர் பைரவா என்கிறார்கள். அது எப்படி பெண் நாய்க்கு ஆண் பெயர் வைத்தார்கள் தெரியவில்லை.

உருவக்கேலி என்பது தவறான விஷயம் என்று இருக்க, ஒரு சட்ட வல்லுனரான எஸ்எஸ்சியே குண்டான தன் உதவியாளரை “குண்டம்மா… குண்டம்மா…” என்று அழைப்பதும் பொருத்தமாக இல்லை.

மற்றபடி, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்…’ என்ற கருத்தை முன்வைத்ததற்காக இந்தப் படத்தை விருதளித்து பாராட்டலாம்.

கூரன் – குரைத்தே வென்றவன்..!

– வேணுஜி