November 22, 2024
  • November 22, 2024
Breaking News
May 7, 2022

கூகுள் குட்டப்பா திரைப்பட விமர்சனம்

By 0 764 Views

சொந்த ஊர், பழகிய மண் தவிர எந்த நவீனங்களையும் நம்பாத ஒரு வயோதிகருக்கும் ஒரு ரோபோவுக்கும் ஏற்படும் நேசம் தான் படத்தின் கதை. ஆனால், எந்திரம் எந்திரம்தானே..? அது பழுதானால் என்ன ஆகும் என்பது கிளைமேக்ஸ். மலையாளத்தில் வெளியான ‘ஆன்டிராய்ட் குஞ்சப்பன்’ படத்தின் தமிழ் ரீமேக்தான் இந்தப்படம். 

தமிழுக்கான கமர்ஷியல் மற்றும் கிளாமருக்காக தர்ஷன், லாஸ்லியாவைப் பயன்படுத்தி இருக்கிறார்கள. ஆனால், இவர்கள் ஹீரோ, ஹீரோயின் அல்ல. சொல்லப்போனால்  இந்த படத்தின் ஹீரோவே வயோதிகராக தர்ஷனின் அப்பாவாக வரும் கே.எஸ். ரவிக்குமார்தான். தனது உதவி இயக்குனர்களுக்காக தனது சொந்த தயாரிப்பில் நடித்துள்ளார். மலையாளத்தில் சுராஜ் நடித்ததைப் பார்க்காதவர்களுக்கு இதில் கே.எஸ்.ஆர் நடிப்பு ‘பளிச்’சென்று தெரியும்.

கதை? எலக்ட்ரானிக்ஸ் இஞ்சினீயரான தர்ஷன் வேலைக்காக வெளிநாடு செல்வதை அப்பாவான கே.எஸ்.ஆர் விரும்பவில்லை. ஆனால், தனிமையில் சொந்த கிராமத்தில் இருப்பவரைப் பார்த்துக்கொள்வதற்கு ஆள் வேண்டுமே..? ஜெர்மனியில் தன் கம்பெனி தயாரித்த ஒரு ரோபோவை அதற்காகக் கொண்டு வருகிறார். ஆரம்பத்தில் அதை வெறுக்கும் கே.எஸ்.ஆர் போகப் போக ரோபோவையும் தன் மகனாகவே பாவிக்கும் நேரம், அங்கே ஜெர்மனியில் தயாரான ரோபோக்கள் பழுதடைந்து தன் எஜமானர்களையே கொல்லும் அளவுக்குப் போக என்ன ஆகிறதென்பது ‘பக் பக்’ க்ளைமேக்ஸ்.

கே.எஸ்.ரவிக்குமார் வயதான தோற்றத்துக்கு பொருத்தமாக இருக்கிறார். தனிமையின் கொடுமையை மகனுக்கு சொல்லி எடுபடாத வேளையிலும், படிப்படியாக ரோபோவைப் புரிந்து கொண்டு பாசம் காட்டும் காட்சிகளிலும் ஸ்கோர் செய்கிறார். இளமையில் முடிந்து போன காதலை முதுமையில் ரோபோ துளிர் விட உதவி செய்ய தன் காதலை வெளிப்படுத்தும் இடங்களில் மிளிர்கிறார்.

யோகிபாபு இருந்தும் ரோபோவே கவர்கிறது. அந்த ரோபோ முழுதும் எந்திரமா, அல்லது அதற்குள் ஒரு சிறுவனோ குள்ள மனிதனோ இருக்கிறார்களோ என்று புரியவில்லை. மற்றபடி தர்ஷன், லாஸ்லியா, பவித்ரா லோகேஷ், சுரேஷ் மேனன், மனோபாலா, மாரிமுத்து, சி.ரங்கநாதன், உள்ளிட்டோர் தங்கள் பங்கைக் குறையில்லாமல் செய்திருக்கின்றனர்.

பிராங்ஸ்டர் ராகுல் நல்ல காமெடியனாக இருந்தும், அவருக்கு ஒரு ரசிகர் பட்டாளம் இருந்தும் படங்களில் ஏனோ சரியான வாய்ப்பு கிடைக்கவேயில்லை. இதிலும் அப்படித்தான்.

ஜிப்ரானின் இசையும், அர்வியின் ஒளிப்பதிவும் படத்தின் விறுவிறுப்பைக் கூட்ட உதவியிருக்கின்றன.

படத்தை இயக்கியிருக்கும் சபரி மற்றும் சரவணன் தங்கள் முதல் படத்தையே கமர்ஷியலாக எடுத்து தங்கள் குருவுக்குக் குறைந்தவர்கள் அல்லர் என்று நிரூபித்திருக்கின்றனர். ஆனாலும், படத்தில் அங்கங்கே தெரியும் தொய்வைச் சரிக்கட்டி இருக்கலாம்.

கோடை விடுமுறையில் குழந்தைகளுடன் சென்று இந்த குட்டப்பனுடன் குதூகலிக்கலாம்..!