November 25, 2024
  • November 25, 2024
Breaking News
March 19, 2018

கேணி திரைப்பட விமர்சனம்

By 0 1736 Views

தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்குமிடையில் முல்லைப்பெரியாறு அணைக்கட்டுப் பிரச்சினை இருக்கிறதல்லவா..? இந்த நீர்ப்பங்கீட்டுப் பிரச்சினையின் மூலத்தைச் சுருக்கி அதுவே ஒரு கேணித் தண்ணீர்ப்பிரச்சினையாக இருந்தால் எப்படி இருக்கும் என்று ஒரு கற்பனை செய்து பார்த்திருக்கிறார் இயக்குநர் எம்.ஏ.நிஷாத்.

கேரளத்துக்காரரான இவர் இயக்கினால் படம் கேரளாவுக்கு ஆதரவாகத்தான் இருக்கும் என்று நினைத்துவிட வேண்டாம். மனசாட்சியுள்ள மனிதரான நிஷாத் அப்படி ஒருதலைப்பட்சமாக நடந்து கொளாமல் ‘கேணி’யளவு ஈரமுடையவராகவே இருக்கிறார் இந்தப்படத்தில்.

படத்தின் கதை இதுதான். கேரள – தமிழ்நாட்டு எல்லையில் இருக்கும் கிராமத்தில் கணவரின் சொந்த வீடு ஒன்று இருக்கிறது கதை நாயகியாக வரும் ஜெயப்ரதாவுக்கு… (எத்தனை வருடமாகிறது மேடத்தைப் பார்த்து… ‘மௌனமான நேரம்…’ மறக்கமுடியுமா..?) குழந்தைகள் எவருமில்லாமல் கணவரின் பணிநிமித்தம் ஆலப்புழையில் வாழ்ந்துவரும் ஜெயப்ரதாவின் கணவரின் உயிரை அரசியல் சதி காவு வாங்குகிறது.

கணவரின் விருப்பப்படி பல வருடங்கள் கழித்து கிராம வீட்டுக்கு வாழ வருகிறார் ஜெயபிரதா. அவரைப் போலவே அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பழி வாங்கப்பட்ட இளம்பெண்ணான பார்வதி நம்பியாரையும் அவளது கற்பைக் காப்பாற்றும் பொருட்டுத் தன்னுடன் அழைத்து வருகிறார். வந்த இடத்தில் இவர்கள் வீட்டுக்குச் சொந்தமான கேணி சமீபத்திய சர்வேயில் கேரளா எல்லைக்குள் போய்விட்டதாகச் சொல்லி இவர்கள் அதில் தண்ணீர் எடுக்கத் தடை விதிக்கிறது கேரள கிராம சபை.

அந்த தமிழக எல்லயோர கிராமத்தில் கடும் தண்ணீர்ப்பிரச்சினை நிலவ, இந்தக் கேணியில் மட்டுமே நல்ல  ஊற்று இருக்க, தன் உரிமையைப் பெறுவது மட்டுமல்லாமல், வறட்சிக்கு உள்பட்ட ஊரும் அந்தக் கேணியில் நீர் எடுத்துக்கொள்ள வகை செய்யும் ஜெயப்ரதாவின் போராட்டம்தான் கதை.

ஜெயப்ரதாவே எதிர்பார்த்திருக்க மாட்டார் இந்த வயதில் தனக்கு இப்படி ஒரு வேடம் கிடைக்குமென்று. அவரது தளர்வான உடலும், ‘எம்.பி’ தோற்றமும் அந்தப் பாத்திரத்தில் அவரை இட்டு நிரப்ப மறுத்தாலும், நடிப்பில் அவற்றை நேர் செய்கிறார் ஜெயப்ரதா.

பார்வதி நம்பியாரின் கேரக்டரும் பரிதாபத்துக்குரியது. அவரது வாளிப்பான உடல், போலீஸ் காமுகனிடமிருந்து கடைசிவரை அவரைக் காப்பாற்றிவிட முடியுமா என்று நம்மை பதைபதைப்புக்குள்ளாகவே வைத்திருக்கிறது.

இவர்களைத் தாண்டி ரசிக்க வைத்திருக்கிறார் கிராமத்தில் தன் ஒற்றைப் பிள்ளையுடன் வசித்துவரும் அனுஹாசன். அந்தப் பிள்ளைக்கும் தண்ணீர் தேவைப்படும் உஷ்ணநோய் ஒன்று தாக்க, ஒரு குவளைத் தண்ணீருக்காக அவர் படும் அல்லாட்டக் காட்சி ஒன்று போதும் அவர் திறமையைச் சொல்ல.

தமிழக கிராமத்துத் தலைவராக வரும் பார்த்திபன் வரும் காட்சிகளெல்லாம் ரசிக்க வைக்கின்றன. அவரது பாத்திரமும் அவரைக் கையெடுத்துக் கும்பிட வைக்கிறது.

ஜெயப்ரதாவின் கணவராக வரும் இயக்குநர் ஜோய் மாத்யூ, சுயநல மந்திரி தலைவாசல் விஜய், தன்னார்வ வழக்கறிஞர் நாசர், தமிழக கலெக்டர் ரேவதி, நீதிபதி ரேகா அனைவருமே நிறைவாகச் செய்திருக்கிறார்கள்.

நௌஷாத் ஷெரீபின் ஒளிப்பதிவில் வறட்சியும் வளமையாக விரிகிறது என்றால் வளமையை விவரிக்க வேண்டியதில்லை. எம்.ஜெயச்சந்திரனின் இசையில் பாடல்களும், சாம் சி.எஸ்ஸின் பின்னணி இசையும் பாராட்டத் தக்கவை.

கேணிப்பிரச்சினையும், கிராமத்துத் தண்ணீர்த் தேவையுமே ஒரு நீண்ட படத்துக்கான நியாயமான நீளத்தைக் கொண்டிருக்க, அது போதாதென்று ஜெயப்ரதாவின் கணவர், பார்வதி நம்பியாரின் வருங்காலக் கணவர் பிரச்சினைகளையெல்லாம் நீட்டி முழக்கிச் சொல்லியதில் ஏற்பட்டிருக்கும் அலுப்பைத் தவிர்த்திருக்கலாம். இதை ஒரு ஸ்டோரியாக்க முயலும் மீடியாக்காரர்களின் பகுதியும் நீளத்தை இன்னும் நீட்டியிருக்கிறது.

ஆனால், அந்த விஷயம் இன்றைய பரபரப்பு மீடியாக்களுக்கான அவசிய அறிவுறுத்தல் என்பதை மறுப்பதற்கில்லை.

தண்ணீர் அரசியலை மட்டும் நறுக்குத் தெறித்தாற்போல் சொல்லியிருந்தால் ‘அறம்’ போன்று அனைவரும் கொண்டாடத் தக்க படமாக அமைந்திருக்கும் இந்தக் கேணி.

இருந்தாலும் நீர்ப் பிரச்சினையை அதுவும் தமிழ்நாட்டுத் தாகத்துக்கு சாதகமாக்கி தமிழ் மக்களின் வயிற்றில் நீரை வார்த்த  நிஷாத்துக்குக் கோயில் கட்ட முடியாவிட்டாலும், அவர் பெயரில் ஒரு ‘கேணி’யாவது அமைத்து நீர் வழங்கலாம்.

கேணி – தவிச்ச வாய்க்குத் தண்ணீர்..!