December 2, 2024
  • December 2, 2024
Breaking News
November 3, 2023

கபில் ரிட்டன்ஸ் படத்தின் திரை விமர்சனம்

By 0 389 Views

விளையாட்டை முன்னிறுத்தி இதுவரை வந்த படங்கள் பெரும்பாலும் கதையின் நாயகனோ, நாயகியோ ஒரு விளையாட்டில் தனித்துவம் பெற்று விளங்க, அவர்களுக்கு சாதிப்பதற்கு வாய்ப்பே கிடைக்காமல் போய்விடுவதும், பின்னர் ஒரு நல்லவர் ஊக்கத்தால் அவர்கள் சாதனை படைககும் கதையைக் கொண்டதாகவே இருக்கும்.

ஆனால் இந்தப் படத்தில் ஒரு வித்தியாசமான விளையாட்டுக் கதையைச் சொல்ல முயசித்திருக்கிறார் இயக்குனரும், படத்தின் நாயகனுமான ஶ்ரீனி சௌந்தர்ராஜன். தயாரிப்பாளரும் அவரேதான்.

கதைப்படி நாற்பது வயதாகும் அவருக்கு அடிக்கடி கெட்ட கனவு ஒன்று வந்து அவரைக் கொலைகாரரக உணரவைக்க, தூக்கத்திலிருந்து விழித்துக் கொள்கிறார். அவர் தன் மகனை பொறியாளராக்க ஆசைப்படுகிறார். அவரது மனைவியோ மகனை டாக்டராக ஆசைப்பட, நாயகனின் அப்பாவோ தன் பேரன் கலெக்டர் ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

ஆனால் ஶ்ரீனியின் மகனுக்கு கிரிக்கெட்டில் பெயரெடுக்க வாய்ப்பு வருகிறது. ஆனால் கிரிக்கெட்டில் சேரக்கூடாது என்று அவனை தடுத்துக் கொண்டிருக்கிறார் ஶ்ரீனி. அது ஏன் என்பது ஒரு சஸ்பென்ஸ்.

கடைசியில் யாருடைய ஆசை ஜெயித்தது என்பதுதான் படத்தின் கிளைமேக்ஸ். அந்த கிளைமாக்ஸிலும் நம் நினைப்பைத் தாண்டி வேறு ஒரு ஆன்டி கிளைமாக்ஸ் கொடுத்து ஆச்சரியப்பட வைக்கிறார் ஶ்ரீனி சௌந்தர்ராஜன்.

ஒரு படத்தில் ஒரு பொறுப்பை சுமப்பதே பெரிய விஷயம். ஆனால் தயாரிப்பாளராகவும் நடிகராகவும், இயக்குனராகவும் பல பொறுப்புகளை ஏற்று இருக்கும் ஶ்ரீனி சௌந்தர்ராஜன் தாங்கும் திறன் வியக்க வைக்கிறது.

இயல்பிலேயே அவர் ஒரு கிரிக்கெட்டராக இருந்திருக்க வேண்டும் அவர் பந்து வீசும் பாணி கபில்தேவைப் போல் இருப்பதாக படத்தில் சொல்லப்படுகிறது உண்மையில் கபிலின் சாயல் அவர் பந்துவீச்சில் இருப்பதை நாம் காணவும் முடிகிறது.

நடிப்பில் போதுமானதை செய்திருக்கிறார் இருந்தாலும் ஒரு நல்ல இயக்குனர் கைகளில் கிடைத்தால் அவர் நடிப்பில் இன்னும் பரிமளிக்க வாய்ப்பு உள்ளது.

அவர் மனைவியாக வரும் நிமிஷா தொழில் முறை நடிகையைப் போல் இல்லாமல் இயல்பான இல்லத்தரசியாக நடித்திருக்கிறார். தூக்கத்திலிருந்து அடிக்கடி எழும் கணவனை பார்த்து கவலைப்படும் அவர் அந்தக் கவலைக்கு மருந்தாக அந்த பிரச்சனையின் ஆணிவேரைக் கண்டுபிடித்து தீர்ப்பது நல்ல விஷயம்.

ஸ்ரீனியின் சிறுவயது தோற்றத்தில் அவரது மகன் மாஸ்டர் பரத்தே நடித்திருப்பது பொருத்தமாக இருக்கிறது. அவருக்கு பளிச்சென்ற முகமும், பாந்தமான நடிப்பும் இருப்பதால் எதிர்காலத்தில் சிறந்த நடிகராகவும் வாய்ப்பு இருக்கிறது. மாஸ்டர் ஜானின் பங்களிப்பும் ஓகே..!

முகம் தெரிந்த நடிகர்களாக பருத்திவீரன் சரவணன், ரியாஸ்கான், வையாபுரி வந்து போகிறார்கள். மூவரில் ரியாஸ்கானுக்கு அதிக வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட வில்லன் போன்ற வேடத்தில் வருகிறார் அவர்.

ஷ்யாம் ராஜ் ஒளிப்பதிவும், எஸ்.எம்.பிரதாப் ராஜ் இசையும் படத்தின் தேவையை நிறைவேற்றி இருக்கிறது. பாடல்களில் பா. விஜய், சினேகன் எழுதியிருக்கும் பாடல் வரிகள் கவனத்தை ஈர்க்கின்றன.

பட்ஜெட்டுக்குத் தக்கவாறு பயணப்பட்டு இருக்கும் இந்தப் படம் இன்னும் சிறப்பான திரைக்கதை நேர்த்தியோடு எடுக்கப்பட்டிருந்தால் கவனம் பெற்றிருக்கும்.

இருந்தாலும் விளையாட்டை முன்வைக்கும் முயற்சியாக இருக்கும் இந்தப் படத்தைக் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.

கபில் ரிட்டர்ன்ஸ் – கிரிக்கெட்டை சரிக்கட்டு..!