April 17, 2021
  • April 17, 2021
Breaking News
February 22, 2020

கன்னி மாடம் திரைப்பட விமர்சனம்

By 0 543 Views
நல்ல திரைக்கதைக்கு உதாரணம் முதல் காட்சி நம்மை நிமிர்ந்து உட்காரவும், படம் ஆரம்பித்த பத்தாவது நிமிடத்துக்குள் கதை பயணிக்கும் திசையை நாம் இனம் கண்டுகொள்ளவும் வேண்டும். அந்த வகையில் நடிகர் வெங்கட் போஸ் இயக்குநராகியிருக்கும் இந்தப்படம் முதல் காட்சியிலேயே கவர்கிறது.
 
நாயகன் ஸ்ரீராம் கார்த்திக் கொலையாளியாக போலீஸ் ஸ்டேஷனில் அமர்ந்திருக்க, அவர் ஏன், யாரை கொலை செய்தார் என்பது பிளாஷ்பேக்கில் சொல்லப்படுகிறது.
 
அதில் வரும் முதல் காட்சியில் சென்னைக்கு அதிகாலையில் வந்திறங்கும் விஷ்ணு, சாயாதேவி ஜோடியும் அவர்களது கலக்கமும் அவர்களை வாழ்க்கை என்ன பாடு படுத்தப்போகிறதோ என்று உணரவைக்கிறது. இதில் நமக்கு ஏற்படும் பதைபதைப்பு படம் முழுதும் தொடர்வதே நேர்த்தியான படம் இது என்பதை உணரச் செய்கிறது.
 
ஸ்ரீராம் கார்த்திக்தான் கதையின் நாயகன் எனும்போது, நாயகி சாயாதேவி இன்னொருவனின் காதலியாக அறிமுகப்படுத்தப் படுவதும், ஒரு கட்டத்தில் அவர்கள் திருமணமே புரிந்து கொள்ள, நாயகனுக்கும், நாயகிக்கும் என்னதான் உறவு என்ற பரிதவிப்பு நம்மிடத்தில் தொற்றிக்கொள்கிறது. இன்னும் சொல்லப்போனால் இடைவேளை விடும் வேளையில்தான் ஸ்ரீராம் கார்த்திக்தான் ஹீரோ என்பதே உறுதி செய்யப்படுகிறது. 
 
இவ்வகையான திரைக்கதை உத்தியில் இயக்குநராக வென்றிருக்கிறார் வெங்கட் போஸ். படத்தின் இரண்டாவது பகுதியில் மனத்தை உருக்கும் பகுதிகள் ஏராளம்.
 
ஶ்ரீராம் கார்த்திக்கின் மிகையில்லாத இயல்பான நடிப்பு கவர்கிறது. அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்பதற்கான சாத்தியங்கள் படத்தில் பல இடங்களில் உணரப்படுகிறது. சாதி வெறி பிடித்த அப்பாவுக்குத் தப்பிய பிள்ளையாக அவர் பிறந்தாலும், விஷ்ணு – சாயாதேவியின் மனநிலை புரிந்து அவர்களுக்கு உற்ற தோழனாக வருவதிலும், உரிய நேரத்தில் சாயாதேவிக்கு அடைக்கலம் கொடுக்கும் காவல் தெய்வமாக ஆவதிலும், அதன் காரணமாகவே தன் காதலை மனதுக்குள்ளேயே மறைத்து காதலியின் திருமணத்துக்குப் போய் கண்ணீருடன் திரும்பி வருவதிலும் முத்திரை பதிக்கிறார். 
 
சாயாதேவியின் முகமும், நடிப்பும் இந்தப் படத்தின் ‘மலர்’ பாத்திரத்துக்கென்றே வடிவமைக்கப்பட்டதைப் போலிருக்கிறது. சோகத்தையும், காதலையும் அந்தக் கண்களில் தாங்கி நாம் மனத்துக்குள் பதிகிறார் அவர். கோலிவுட் காதல் காவியங்களில் இந்த ‘மலர்’ பாத்திரமும், சாயாதேவியும் மறுக்காமல் இடம் பிடிப்பார்கள். 
 
முதல் பாதியில் மட்டுமே என்றாலும் விஷ்ணுவும் கவர்கிறார். ஆனால், அவர் செல்வந்தர் வீட்டுப் பையன் என்ற சொல்கிற அளவில் இல்லாமல் அவர் ஏதோ வாழ்வின் சுகபோகங்களை எல்லாம் அனுபவிக்க அலையும் ஏழையைப் போல் காட்டுவது இடிக்கிறது. அந்த காரணத்தாலேயே அவர்களுக்குப் பிரச்சினை வரும் என்பது போல் நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
 
ஆடுகளம் முருகதாஸ், சூப்பர் குட் சுப்பிரமணி இருவரும் தேவையான இடங்களில் தேவையானதைச் செய்திருக்கிறார்கள். ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா சங்கர் வரும் கலகலப்பான காட்சிகள் கனமான பின்பாதியை இலகுவாகக் கடக்க உதவுகிறது. ஆனால், உணர்வுபூர்வமாகவும் மேற்படி மூவரும் கதைக்கு உதவி இருக்கிறார்கள்.
 
ஸ்ரீராம் கார்த்திக் மீது ஒருதலையாய்க் காதல் கொண்டு… அது நிறைவேறாது என்று ஒரு கட்டத்தில் அறிந்து வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்றுக் கொள்ளும் பெண் ஆட்டோ டிரைவர் வலினா பிரின்சஸும் கவர்கிறார். 
 
ஸ்ரீராமின் அப்பாவாக வரும் கஜராஜின் எண்ண ஓட்டம் என்னவென்பதே புரியவில்லை. சாதிவெறியராக அவர் வருவதும், அவர் மகனான ஸ்ரீராம் அதன் சுவடுகளே தெரியாமல் நேர்மறையாக வாழ்வதும் அப்பாவின் கேரக்டரை அவர் எப்படிப் புரிந்து கொண்டிருக்கிறார் என்று, குழம்ப வைக்கிறது.
 
அதே போல் கடைசிக் காட்சியில் இழந்துபோன தன் வாழ்வை எண்ணி கஜராஜ் கதறி அழுவதில் அவர் மனம் திருந்தி விட்டதாகவே நாம் உணர்ந்துகொள்ள முடிகிறது. அப்படி இல்லை என்று தெரிய வரும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. சொந்த சகோதரியையும், அவள் கணவனையும் வெட்டிக் கொலை செய்த போதிலும் அவர் மீது அன்புடனேயே அவர் மகனான ஸ்ரீராம் இருப்பதும், கிளைமாக்ஸ் ஒரே காட்சியில் அவர் மீது வன்மம் கொள்வதிலும் எப்படி லாஜிக் ஏற்படுத்திக் கொள்வது என்பதும் புரியவில்லை.
 

ஹரி சாயின் பின்னணி இசை ஓகே. இது போன்ற படங்களுக்கு பாடல்களுக்கான இசை மிகவும் முக்கியம். ‘ஓயாத மேகம்’ என்ற பாடலின் மெட்டு அப்படியே பழைய பாடலொன்றை நினைவு படுத்துகிறது. ஹரிஷ் ஜெ.இனியனின் ஒளிப்பதிவு இயல்பாக அமைந்திருக்கிறது. 

கொண்டாடப் பட்டிருக்க வேண்டிய களத்தைக் கொண்டிருக்கும் படம் இது. இன்னும் கொஞ்சம் கவனித்து செதுக்கியிருந்தால் இலக்கை அடைந்திருக்கும். இருந்தும் கவனித்துக் கடக்க வேண்டிய முயற்சியாக அமைந்து வெங்கட் போஸுக்கும், அவரை நம்பிக் களத்தில் இறங்கிய தயாரிப்பாளருக்கும் பெருமை சேர்த்திருக்கிறது.

கன்னி மாடம் – காதலும் மானமும் பற்றிய கனத்த பதிவு..!