அமெரிக்காவில் இருந்து தமிழகம் வரும் பெண் எழுத்தாளர் ‘தானா’, பேய்கள் பற்றிய ஆராய்ச்சி குறித்து ஒரு புத்தகம் எழுத விரும்புகிறார்.
அந்த ஆராய்ச்சிக்கு அவர் ஒரு ஆள் இல்லாத பங்களாவை தேர்ந்தெடுக்கிறார். அந்த பங்களா வாசலில் இரண்டு கொலைகள் நடந்து முடிந்திருக்க, அந்த கொலைகள் அங்கே தற்கொலை செய்து கொண்ட ஒரு பெண் அவர் குழந்தை ஆகியோரின் ஆவிகளால் நடத்தப்பட்டது என்று உள்ளூர் மக்களால் பேசப்படுகிறது.
பங்களா வாசலில் கொலையான இருவரும் தொழிலதிபர் பாஸ்கர் சீனிவாசனிடம் வேலை பார்ப்பவர்களாக இருக்க அந்த தொழிலதிபரிடமும் பேட்டி எடுக்கிறார் பெண் எழுத்தாளர்.
இதற்கிடையில் இந்த கொலைகள் குறித்து இன்ஸ்பெக்டர் அன்பாலயா பிரபாகரன் ஒருபக்கம் விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறார். இந்த இரண்டு விஷயங்களும் இணையும் மையப்புள்ளியில் படத்தின் கிளைமாக்ஸ் நிகழ்த்தப்படுகிறது.
நாயகியாக நடித்திருக்கும் ‘தானா நாயுடு’ சொந்த பெயரிலேயே நடித்திருக்கிறார் அமைதியாக அதே சமயம் தேவையான இடங்களில் உணர்ச்சியைக் காட்டியும் நடித்திருக்கிறார். ‘வதன’ மொழியில் ஈர்க்கும் தானாவுக்கு மொழிப் பிரச்சினை இருக்க, தமிழ் பேசும் இடங்களில் ‘வசன மொழி’ மட்டும் கொஞ்சம் தடுமாறுகிறது.
அதை மட்டும் சரி பண்ணிக் கொண்டால் தானா நாயுடுவுக்கு ‘தானா’கவே வாய்ப்புகள் தேடி வரும்.
படத்தின் கதை திரைக்கதை வசனத்தை எழுதி இயக்கியும் இருக்கும் பாஸ்கர் சீனிவாசன் படத்தில் வில்லனாகவும் நடித்து இருப்பது சிறப்பு. நடிப்பில் கொஞ்சம் மெருகேற்றிக் கொண்டால் பிற படங்களிலும் அவர் வில்லனாக வலம் வர முடியும்.
தமிழ் படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கௌசல்யாவை பார்ப்பதற்கு ஆறுதலாக இருக்கிறது, ஆனால் பாவம் அவரை இடையிலேயே தற்கொலை செய்து கொள்ள வைத்து விட்டார் இயக்குனர்.
கௌசல்யாவின் மகளாக டைட்டிலை தாங்கி நடித்திருக்கும் பேபி கைலாவும் நன்றாக நடித்திருக்கிறார்.
இன்ஸ்பெக்டர் அன்பாலயா பிரபாகரனுடன் கான்ஸ்டபிளாக வரும் சிசர் மனோகரை காமெடிக்காக பயன்படுத்தி இருக்கிறார்கள். கிடைத்த வாய்ப்பில் சிரிப்பு சிக்ஸர் அடிக்க வேண்டிய அவர் காமெடிக்கு ‘சிசர்’ போட்டு கத்தரித்து விடுகிறார்.
ஒளிப்பதிவாளர் பரணி செல்வம் தன் பணியை குறைவில்லாமல் செய்திருக்கிறார். இசையமைப்பாளர் ஸ்வரணும் அவரால் முடிந்த அளவுக்கு படத்துக்கு உதவி புரிந்து இருக்கிறார்.
தானா நாயுடு யார் என்பதும் அவரால் படத்தின் மர்ம முடிச்சுகள் அவிழும் படத்தின் கிளைமாக்ஸில் இடம்பெறுவதும் ரசிக்க வைக்கிறது.
ஆனால் அதுவரை பொறுமையாக செல்லும் திரைக்கதையை ரசிக்க வைப்பதற்கு இயக்குனர் கொஞ்சம் முயற்சி எடுத்து இருக்கலாம்.
மூடநம்பிக்கையை வலியுறுத்தாமல் இருப்பதும் கடைசியில் உண்மையை கண்டறிந்து விட்ட இன்ஸ்பெக்டர் அதன் பின்னால் இருக்கும் நியாயத்தை உணர்ந்து தானா நாயுடுவை தப்பிக்க விடுவதும் நன்று.
‘கைலா’ என்ற தலைப்புடன் இன்னும் ஓர் எழுத்து சேர்த்து ‘கைலாசா’ என்று இருந்தால் இன்றைய ட்ரென்டிங் கில் படம் இன்னும் கவனிக்கப் பட்டிருக்கும்.
கைலா – ஹவாலா பேய்கள்..!