ஷாம் நடிப்பில் நீண்ட காலம் கழித்து வந்திருக்கும் படம். இதில் ஷாம் காவல்துறை அதிகாரியாக வருகிறார். பயிற்சிக்காக அவர் அமெரிக்கா செல்ல, அங்கே அவர் அமெரிக்க அதிகாரிகளுக்கே பயிற்சி கொடுக்கும் அளவில் பணியாற்றுவதுதான் கதை.
அமெரிக்கா என்றாலே ‘சைக்கோ கில்லர்’ கதை தோன்றுகிறதா அல்லது ‘சைக்கோ கில்லர்’ கதை என்றாலே அமெரிக்கா போய் விடுகிறார்களா தெரியவில்லை. இதிலும் அப்படி ஒரு கில்லர் இளம் பெண்களை அவர்களின் ரத்த மாதிரியை எடுத்து பரிசோதித்து அதன் அடிப்படையில் குறிப்பிட்ட பெண்களை மட்டும் கடத்திக் கொல்கிறான்.
அதைத் துப்பறியும் டீமில் ஷாமும் பயிற்சியில் இருக்க, அவர் அதைக் கண்டுபிடித்தது எப்படி என்பதை ஒரு த்ரில்லராகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சாரதி.
அமெரிக்க காவல்துறையில் அவசர கால அழைப்புகளுக்காக இயங்கும் 911 என்ற பிரிவின் பணி ரசிக்க வைக்கிறது. ஒரு நபர் எதிர்கொள்ளும் எந்த வித பிரச்சினையையும் எதிர்கொண்டு அவர்களுக்கு தைரியமூட்டி அவர்களின் துயரைத் துடைக்கும் அந்தப் பிரிவில் பணிபுரிகிறார் நாயகி ஸ்ரீதேவி குமார்.
ஷாமைப் பார்த்த நொடியிலேயே ஸ்ரீதேவி ‘ஷாக்’காக, அவரைப் பார்த்து ஷாமும் ‘ஷாக்’காக அவர்களுக்கு ஒரு பிளாஷ்பேக்கும் இருக்கிறது. அது என்னவென்று சொன்னால்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. அதற்குப்பின் அமெரிக்கா வந்துவிடும் ஸ்ரீதேவியின் இடத்துக்கே ஷாமை காலம் (காதல்..?) கொண்டு வந்து சேர்க்கிறது.
அந்த முகம் தெரியாத ‘சைக்கோ கில்லரி’டம் மாட்டிக்கொண்ட பெண் அவசர கால அழைப்பில் ஸ்ரீதேவியை அழைத்தும், அவளுக்கு உதவ முடியாமல் போகிறது.
அதன் தொடர்ச்சியாக கடத்தப்படும் இன்னொரு பெண்ணும் உதவிக்கு அழைக்க, அவளையாவது காப்பாற்ற நினைக்கும் ஸ்ரீதேவியும், ஷாமும் எப்படி ஒத்திசைவாக அணுகி பிரச்சினையைக் கைக்கொள்கிறார்கள் என்பது கிளைமாக்ஸ்.
ஜேம்ஸ் பாண்ட் மாதிரி (!) நடிக்க வேண்டும் என்று நினைக்கும் ஷாம் ரொம்பவும் அலட்டிக்கொள்ளாமல் நடித்திருக்கிறார். அதற்கு மேல் இந்தக் கதையில் வேலையும் இல்லை. காதலில் தோல்வியுற்றவர் என்பதற்காக சோகமாகவே அவர் இருந்திருக்க வேண்டியதில்லை.
பிளாஷ்பேக்கில் கலகலப்பாக நாகரிக உடைகளில் வரும் ஸ்ரீதேவி குமார், அமெரிக்கா போனபிறகு யூனிபார்மிலேயே வருவதால் ரொம்பவும் ‘புரபஷனல்’ ஆகி அவரை ரசிக்க முடியாமல் போய் விடுகிறது.
கடத்தப்படும் பெண்ணாக வரும் ஆத்மியாவின் நடிப்பு நன்றாக இருக்கிறது.
அமெரிக்காவில் படமானதால் காட்சிக்குக் காட்சி பிரமிக்க வைக்கிறது எம்.எஸ்.ராஜேஷ்குமாரின் ஒளிப்பதிவு. அதற்கேற்ற ஷ்யாம் மோகனின் பின்னணி இசையும் படத்தின் தரத்தைக் காப்பாற்றுகிறது.
தமிழக போலீஸ் என்றாலே ஒரு காமெடி போலீஸ் இருந்துதான் ஆகவேண்டுமா..? அதுவும் ஷாமுடன் பயிற்சிக்குச் செல்லும் ஸ்ரீநாத்தின் காமெடி கொஞ்சம் கூட ஒர்க் அவுட் ஆகவில்லை.
அதைவிடப் பெரிய காமெடி, ஷாமுக்குப் பயிற்சி கொடுக்கும்போதே இம்சையும் கொடுக்கும் அவரது அமெரிக்க பயிற்சி அதிகாரி, கடைசியில் ஷாமின் திறமை கண்டு அவருக்கு சல்யூட் செய்து வழியனுப்பி வைப்பது.
அமெரிக்காவில் நடப்பதால் படத்துக்குள் நிறைய ஆங்கிலம் பேசுகிறார்கள். வில்லன் முதற்கொண்டு நிறைய அமெரிக்கர்களும் வருகிறார்கள்.
அந்த வகையில் ‘காவியன்’ அமெரிக்கப்படம் பார்க்கும் அனுபவத்தைத் தந்திருப்பதாகச் சொல்லலாம்..!