‘படை வீரன்’ அம்ரிதாவை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. அவரது அட்டகாச நடிப்பைப் பார்த்தவுடன் அவர் கலைக் குடும்ப பின்னணியில் இருந்து வந்திருப்பார் என்று நினைக்கத் தோன்றும்.
கேட்டால், “என்னுடைய குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வந்த முதல் ஆள் நான் தான். நான் பி காம் பட்டதாரி. சில குறும்படங்கள், விளம்பர படங்கள், இசை ஆல்பங்களில் நடித்தது தான் எனக்கு படை வீரன் பட வாய்ப்பைப் பெற்று தந்தது” என்கிறார் அம்ரிதா.
இப்போது விரைவில் வெளியாக இருக்கும் ‘காளி’ படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து நடித்திருக்கிறார் அம்ரிதா. அதுபற்றிச் சொல்லும்போது “காளிக்கு முன்னால் விஜய் ஆண்டனி சாரின் இசையையும், நடிப்பையும் பார்த்து வியந்த நான், நேரில் பார்த்தபோது மிகப்பெரிய உயரங்களை தொட்ட பிறகும் மிகவும் அடக்கமாக, எளிமையாக இருக்கும் அவரது பண்பைப் பார்த்து வியந்தேன்.
படப்பிடிப்பில் ஒரு தோழனாகப் பழகினார், நான் நடிக்கும் காட்சிகளில் என் நடிப்பைப் பாராட்டியபடியே இருந்தார். குறிப்பாக நான் மிகவும் பதட்டப்படும் நெருக்கமான காதல் காட்சிகளில் என் பதட்டத்தைத் தணிக்க உதவினார். அது என் நடிப்பை மேம்படுத்திக்கொள்ள உந்து சக்தியாக இருந்தது..!” என்ற அம்ரிதா, படத்தின் இயக்குனர் கிருத்திகா உதயநிதியுடன் வேலை பார்த்த அனுபவத்தை பற்றி இப்படிக் கூறினார்.
“கிருத்திகா மிகவும் இனிமையாவர், குறிப்பாக ஒரு பெண் இயக்குனரிடம் வேலை பார்த்தது எனக்கு வசதியாக இருந்தது. படைவீரன் படத்தின் பாடல் வீடியோ ஒன்றை பார்த்துதான் அவர் என்னைத் தேர்ந்தெடுத்தார். அவர் தந்த ஊக்கமும் எனக்கு உதவியது..!”
“சினிமாவில் அம்ரிதாவின் கோல் என்னவாம்..?”
“சிம்ரன், திரிஷா தான் என் ரோல் மாடல். அவர்களைப் போல் வந்தாலே அது சாதனை..!”
அப்படியே ஆகட்டும் அம்ரிதா..!