August 10, 2022
  • August 10, 2022
Breaking News
March 26, 2021

காடன் படத்தின் திரை விமர்சனம்

By 0 330 Views

தன் ‘மைனா’ படம் முதலே காடுகளின் காதலனாகிப் போன இயக்குநர் பிரபு சாலமன் இந்த முறையும் தன் குழுவினருடன் காட்டுக்குள்ளேயே சென்று படம் பிடித்து வந்திருக்கிறார். காட்டுக்குள் அவர் பெற்ற அனுபவங்களின் வாயிலாக இந்த முறை காட்டின் அகலமும், நீளமும் அவருக்கு நன்றாகவே கை வந்திருப்பதாகக் கொள்ள முடிகிறது.

காடுகளின் அவசியத்தையும், காடுகளில் மனிதர்களின் பிரவேசத்தால் வன விலங்குகளுக்கு ஏற்படும் ஆபத்தையும், வனமும், வன விலங்குகளும் அழிவதால் மனிதர்களுக்கு ஏற்படவிருக்கும் பேராபத்தையும் இந்தப்படம் மூலம் அபாய அறிவிப்பாக வெளியிட்டிருக்கும் பிரபு சாலமனுக்கு ஒரு சல்யூட் வைத்து விட்டு தொடங்கலாம்.

அசாமின் காசியாபாத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இந்தப் படத்தை அவர் எடுத்திருப்பது சமகால சமூக மற்றும் அரசியல் சார்ந்த நவீனமாக இருக்கிறது.

காட்டுக்குள்ளேயே மூன்று தலைமுறையாக வளரும் ராணா, அந்த காட்டின் பாதுகாவலராக இருக்கிறார். தனி ஒரு மனிதனாக லட்சம் மரங்களை நட்டு வனம் வளர்த்ததால் குடியரசுத் தலைவரின் விருதையும் பெற்றிருக்கிறார் அவர். அதனால், அவரால் சரளமாக ஆங்கிலமும் பேச முடிகிறது. அந்தக் காட்டுக்குள் வாழும் யானைகள், மற்றும் பழங்குடியினரின் பாதுகாவலராக இருக்கிறார் அவர்..

அந்தக் காட்டை அழித்து ஒரு குடியிருப்பை உருவாக்க மத்திய மந்திரி ஒருவர் முயல்கிறார். அதை செயல்படுத்தினால் வனவிலங்குகள் முக்கியமாக யானைகளின் வழித்தடம் மற்றும் வாழ்விடம் இழக்கும் அபாயம் ஏற்படும் என்பதனால் ராணா இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். ஆதிக்க சக்திகளுக்கு எதிராக அவரால் அதை செயல்படுத்த முடிந்ததா என்பதுதான் படத்தின் கதை.

காடனாக நடித்துள்ள ராணாவின் உயர்ந்த தோற்றம் அந்தப் பாத்திரத்தை நமக்கு எளிதாக விளக்கி விடுகிறது. அத்துடன் அவரது வித்தியாசமான மேனரிஸமும், நடிப்பும் அந்தப் பாத்திரத்துக்கு உயிர் கொடுக்கின்றன. ஆனாலும், அதில் பிதாமகன் விக்ரமின் சாயல் தெரிவதைத் தவிர்த்திருக்கலாம். 

கும்கி யானையின் பாகனாக நடித்துள்ள விஷ்ணு விஷால் குறைந்த அளவிலான காட்சிகளில் வருவதுடன் சற்றே வில்லத்தனமாகவும் நடித்து பாவத்தைக் கட்டிக் கொள்கிறார், அதற்கான பரிசையும் பெற்று நொந்து போகிறார். காட்டுக்குள்ளிருக்கும் புரட்சிப் பெண் ஜோயா ஹுசைன் மேல் கொண்ட காதலால் அவர் அத்தனைக் கொடுமைகளையும் செய்கிறார் என்பது அவரை இன்னும் ரசிக்க முடியாமல் செய்கிறது.

ஜோயா ஹுசைனின் அழகும், ஆற்றலும் கவர்கின்றன. விஷ்ணு விஷால் அவர் மீது காதலில் விழுந்ததில் தவறில்லை என்றே தோன்றுகிறது.

ராணாவின் ஜோடியாக யாரும் இல்லாவிட்டாலும் அவருடனேயே பயணப்படும் பத்திரிகையாளர் ஸ்ரேயா பில்கனோகரும் இயல்பான நடிப்பில் கவர்கிறார். 

காடுகளைப் பற்றியும், யானைகளின் வாழ்வைப் பற்றியும் இத்தனை விரிவாக யாரும் ஆய்வு நடத்திப் படமெடுத்ததில்லை.. யானைகள் வெளிப்படுத்தும் உணர்வுகளை அவற்றின் வித்தியாசமான ஒலிகளின் மூலமே வெளிக் கொண்டு வந்திருப்பதில் இயக்குனர் பிரபு சாலமனின் திறமை பிரமிக்க வைக்கிறது.படத்தில் ராணாவுக்குக் கொடுக்கப்பட்ட மேன் ஆஃப் தி ஃபாரஸ்ட் விருதை இவருக்குத் தரலாம். 

அழகியலுக்காக அங்கங்கே கிராபிக்ஸ் வேலைகள் லாஜிக்கை மீறினாலும், யானைகளின் காட்சிகள் எதிலும் செயற்கைத் தனம் தெரியாமல் நேர்த்தியாகவே சிஜி கையாளப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.அசோக்குமாரின் ஒளிப்பதிவுதான் படத்தின் ஹீரோ எனலாம். ஷாந்தனு மொய்த்ராவின் பின்னணி  இசை ஆங்கிலப் பட அனுபவத்தை நமக்குத் தருகிறது. ரசூல் பூக்குட்டியின் ஒலிக்கலவையும் அதன் முதுகெலும்பாக அமைந்துள்ளதை மறுப்பதற்கில்லை.

வித்தியாசமான இந்த பிரமாண்ட முயற்சியை குடும்பத்துடன் ரசிக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு. 

காடன் – கானகக் காவலன்..!