May 3, 2024
  • May 3, 2024
Breaking News
August 17, 2022

ஜீவி 2 திரைப்பட விமர்சனம்

By 0 528 Views

2019 ஆம் ஆண்டில் வெற்றி நடிப்பில் வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியாகி அனைவரின் பாராட்டை பெற்ற திரைப்படம் ஜீவி.

தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஆஹா ஓடிடியில் 19-ஆம் தேதி வெளியாகிறது.

ஜீவி முதல் பாகத்தின் கதை தொடர்பியல் விதியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும். எங்கோ யாருக்கோ நடக்கும் ஒரு நிகழ்வுகள் திரும்பவும், இன்னொருவருக்கு அதே போன்று நடக்கும் சம்பவத்திற்கும் தொடர்பு இருப்பதாகச் சொல்லப் பட்டிருக்கும்.

அதனைப்பற்றி தெரிந்து கொண்ட வெற்றி அதைத் தடுக்க முயற்சி செய்ய அதைத் தடுத்து நிறுத்தினாரா இல்லையா? என்பது முதல் பாகத்தின் கதையாக இருந்தது.

இந்த இரண்டாவது பாகத்தையும் அதன் தொடர்ச்சி போல மாற்றி ஒரு கிரைம் திரில்லராக கொடுத்திருக்கிறார் படத்தின் இயக்குனர் வி.ஜே.கோபிநாத்.

இந்த இரண்டாவது பகுதியில் ஆட்டோ ஓட்டுனராக வரும் வெற்றி தன் மனைவி அஸ்வினியின் மருத்துவ செலவை சமாளிக்க கார் ஒன்றை வாங்கி ஓட்டிக் கொண்டிருக்கிறார்.

ஒட்டுமொத்த சிகிச்சைக்கு பெரும்பணம் தேவைப்படும் நிலையில் அவர் பெரிதும் நம்பிக் கொண்டிருந்த அஸ்வினியின் பூர்வீக சொத்து ஒன்றும் கை கொடுக்காமல் போய் விட கார் பழுது, அக்கா மகள் நோய்வாய்ப்படுவது, ஒட்டுமொத்த குடும்பச் சுமை என்று மேலும் அவருக்கு பிரச்சனைகள் அழுத்த புதிதாக அறிமுகமான பணக்காரர் முபாஷிர் வீட்டில் திருட நினைக்கிறார்.

தனக்குக் கடை வைத்துக் கொடுத்து வாழ்க்கையை நடத்த உதவிய நண்பனுக்காக வெற்றியின் நண்பர் கருணாகரனும் இந்த திருட்டில் ஈடுபட ஒத்துக்கொள்ள என்ன ஆகிறது என்பது மீதி கதை.

வெற்றியைப் பொறுத்தவரை சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர் என்பது நிரூபணம் ஆகிவிட்டது. அத்துடன் இயல்பாக நடிப்பதை தன் பாணியாக வைத்துக்கொண்டு தனி பாதையில் பயணம் போய்க் கொண்டிருக்கிறார். இதை வெற்றியின் அடையாளம் என்றும் அவரது வெற்றியின் அடையாளம் என்றும் கொள்ளலாம்.

பாத்திரத்துக்கேற்ற பொருத்தமான தேர்வாக வருகிறார் அஸ்வினி. பிரச்சினைகளைக் காணத் தோன்றாமல் எதிர்கொள்வதில் அவரது நடிப்பு நம்பகமாக இருக்கிறது.

காமெடி மட்டுமல்லாமல் குணச்சித்திர பாத்திரத்தையும் தன்னால் தாங்க முடியும் என்று இன்னும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார் கருணாகரன்.

பிரவீன் குமார் ஒளிப்பதிவு கச்சிதமாக பொருந்தியுள்ளது. ‘நீ நீ போதுமே’ பாடலும், பாடல் காட்சிகளும் கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் இசையில் ரசிக்க வைக்கிறது.

தொகுப்பாளர் கே.எல்.பிரவீன் தொகுப்பு சிறப்பு.

நடுத்தர வர்க்கத்து மக்களின் வாழ்வியலையும், சந்திக்கும் பிரச்சினைகளையும் கண்ணில் பார்ப்பதைப் போன்ற உணர்வு. அதிலும் நாம் செய்யும் நல்லவையும், அல்லவையும் எதிர்வினையாக நம்மையே வந்து சேரும் என்ற படிப்பினையும் கிடைப்பது நிறைய யோசிக்க வைக்கும்.

ஜீவி 2 – ஜீவனுள்ள படைப்பு..!