September 20, 2024
  • September 20, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • எங்கள் டீமின் ஆவரேஜ் வயதே 29தான் – ஜிகிரி தோஸ்த் டீம் மீட் சுவாரஸ்யம்
November 9, 2023

எங்கள் டீமின் ஆவரேஜ் வயதே 29தான் – ஜிகிரி தோஸ்த் டீம் மீட் சுவாரஸ்யம்

By 0 216 Views

பிரதீப் ஜோஸ்.கே மற்றும் அரன்.வி இணைந்து தயாரித்திருக்கும் ‘ஜிகிரி தோஸ்த் ‘ படத்தின் தலைப்பே சொல்லிவிடும் இது நட்பை போற்றும் படம் என்று.

இப்படத்தில் ஷாரிக் ஹாசன், அரன்.வி, அம்மு அபிராமி, விஜே ஆஷிக், பவித்ரா லக்‌ஷ்மி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, துரை சுதாகர், அனுபமா குமார், கெளதம் சுந்தரராஜன், சிவம், ஜாங்கிரி மதுமிதா, ஆர்.என்.ஆர்.மனோகர், சரத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அரன்.வி, இயக்குநர் ஷங்கரிடம் ‘எந்திரன் 2.0’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர். அதற்குப் பின் அவர் இயக்கிய சில குறும்படங்கள் சைமா உள்பட பல விருதுகளை வெல்ல, தயாரிப்பாளர் பிரதீப் கிடைத்து, இந்தப்பட வேலைகளை தொடங்கி விட்டனர்.

தயாரித்து இயக்கி இருக்கும் அரன்.வி இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்தும் இருக்கிறார்.

‘ஜிகிரி தோஸ்த் ‘ படத்தின் பணிகள் முடிவடைந்து, தற்போது வெளியீட்டுக்கான பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ள நிலையில், தயாரிப்பாளர் பிரதீப் ஜோஸ், இயக்குநர் அரன்.வி, ஷாரிக் ஹாசன், அம்மு அபிராமி, நடிகர் கௌதம் சுந்தர்ராஜன், வில்லனாக நடித்திருக்கும் சிவம், இசையமைப்பாளர் அஷ்வின் விநாயகமூர்த்தி, ஒளிப்பதிவாளர் ஆர்.வி.சரண் உள்ளிட்ட படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து படம் குறித்து பகிர்ந்து கொண்டார்கள்.

அரன்.வி படம் குறித்து கூறுகையில், “கதைப்படி, பொறியியல் கல்லூரியில் படிக்கும் நான் கண்டுபிடிக்கும் ஒரு கருவியால் 500 மீட்டரில் உள்ள செல்போன் உரையாடல்களை ஒட்டு கேட்க முடியும். அப்படி ஒரு கண்டுபிடிப்பை சுற்றிதான் கதை நகரும். கல்லூரி நண்பர்களின் ஜாலியான வாழ்க்கையையும் உள்ளே வைத்து, நடக்கும் சம்பவங்களை விறுவிறுப்பாகச்  சொல்லியிருக்கிறேன்.” என்றார்.

நாயகன் ஷாரிக் ஹாசன், “மூன்று நண்பர்கள் அவர்களுடைய ஜாலியான வாழ்க்கை மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சில பிரச்சனைகள் தான் கதை. எனக்கும் அது பிடித்திருந்ததால் நடித்தேன்.

முதலில் என்னிடம் தலைப்பு ஜேடி என்று கூறினார் அரன். ஜேடி என்றதும் நான் சரக்கு பெயரா என்றெல்லாம் கூட யோசித்தேன். ஆனால், அதுவெல்லாம் இல்லை ‘ஜிகிரி தோஸ்த்’ என்றார். சரக்கடிக்கும் காட்சி கூட படத்தில் இல்லை.

படத்தின் பலமே திரைக்கதைதான். நிச்சயம் இந்தப் படம் எனக்கு நல்ல அடையாளத்தைக் கொடுக்கும்..!” என்றார்.

நாயகி அம்மு அபிராமி படம் குறித்து கூறுகையில், “இந்தப்பட ஹீரோயின் என்பதைத் தாண்டி, நண்பர்களாக நடித்தது தான் இந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது. தீவிரவாதம், தொழில்நுட்பம், கடத்தல் என்று பல விசயங்கள் படத்தில் இருக்கிறது, அவை அனைத்தும் திரைக்கதையில் அழகாக ஒன்று சேர்ந்து படத்தை விறுவிறுப்பாக நகர்த்தி செல்கிறது.

நான் ஷாரிக்கின் காதலியாக நடித்திருந்தாலும், என்னுடைய வேடத்திற்கு என்று தனித்துவமான விசயம் இருக்கும், அதில் ஒரு சிறிய திருப்புமுனையும் இருக்கும். அதை இப்போது சொல்ல முடியாது..!” என்றார்

விஜே ஆஷிக் படம் குறித்து கூறுகையில்,

“இந்தப் படம் எனக்கு மிக முக்கியமான படம், காரணம் படம் முழுவதும் நான் வருகிறேன். நம்ம வேலை உண்டு நாம் உண்டு, தேவையில்லாத பிரச்சினையில் தலையிடக் கூடாது என்று நினைக்கும் ஒரு கதாபாத்திரம், அதே சமயம், பிரச்சினையில் இருக்கும் நண்பர்களை விட்டுவிட்டு போக மனம் இல்லாமல் அங்கே இருக்கும் ஒரு கதாபாத்திரம்.

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படம் போல தொழில்நுட்பத்தை மையப்படுத்திய விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட படமாக இருக்கும்.” என்றார்.

நடிகர் கெளதம் சுந்தரராஜன் பேசுகையில்,

“இயக்குநர் அரன் இயக்கிய குறும்படத்தில் நான் நடித்திருக்கிறேன். அந்த குறும்படம் என்னை வெகுவாக கவர்ந்தது. காரணம், அதில் உள்ள விசயங்கள் அனைத்தும் பாசிட்டிவாக இருக்கும். சிகரெட் புகைப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகள் இல்லாமல் அனைத்துமே நல்ல விசயங்களை கொண்ட படமாக இருக்கும். அதை தொடர்ந்து இந்த படத்தில் நடித்திருக்கிறேன், இந்த படமும் பாசிட்டிவான படம் தான். நல்ல விறுவிறுபான படமாக மட்டும் இன்றி அனைத்து தரப்பினரும் பார்க்க கூடிய ஒரு பொழுதுபோக்கு படமாக இருக்கிறது. புதுமுக மற்றும் வளர்ந்து வரும் கலைஞர்கள், இவர்களுக்கு பத்திரிகையாளர்கள் ஆதரவளிக்க வேண்டும்…” என்றார்.

இசையமைப்பாளர் அஷ்வின் விநாயகமூர்த்தி படம் குறித்து பேசுகையில், “அரண் எனக்கு கல்லூரி நண்பர் இந்த படம் ஆரம்பிக்கும் முன்பே என்னை சந்தித்து கதை சொல்லிவிட்டார். அப்போது இந்த படத்துக்கு தயாராகி விட்டேன்.

இது முழுக்க முழுக்க இளைஞர்கள் ஆகிய எங்களால் உருவான படம். எங்களுடைய மொத்த வயதின் ஆவரேஜே 29க்குள்தான் வரும்.” என்றார்.

இளமை வெல்லட்டும்..!