கூத்துக் கலைதான் சினிமாவின் நதிமூலம் என்றிருக்க, இந்த சினிமாவின் மூலம் கூத்துக் கலைஞர்களின் வாழ்க்கையை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட அர்ப்பணிப்புடன் முயற்சித்து இருக்கிறார் இயக்குனர் பாரி இளவழகன்.
திருவண்ணாமலைப் பக்கம் நடக்கிற அல்லது நடந்த கதையைப் படமாக இயக்கியிருக்கும் அவரே படத்தின் நாயகனாகவும் நடித்திருப்பது சிறப்பான விஷயம்.
கூத்தின் குழுதான் ஜமா என்று அழைக்கப்படுகின்றது. அப்படி ஒரு ஜமாவில் பெண் வேடமிட்டு நடிக்கிறார் பாரி இளவழகன். இதனால் அவரது உடல் மொழி, பழகும் விதம் முதற்கொண்டு அத்தனையும் பெண் போலவே மாறி இருக்கிறது. அவரது அம்மாவாக வரும் கேவிஎன் மணிமேகலைக்கு அதுவே ஒரு பெரிய கவலையாக இருக்கிறது.
கடந்த தலைமுறையில் அந்த கிராமத்தில் இந்த ஜமாவை உருவாக்கி வைத்தவர் பாரி இளவழகனின் தந்தை என்று இருக்க இப்போது அதன் வாத்தியாராக சேத்தன் இருக்கிறார்.
தன் தந்தை ஆரம்பித்த ஜமாவில், தான் வாத்தியாராக உயர வேண்டும் என்று விரும்பிய பாரி இளவழகனின் ஆசை நிறைவேறியதா என்பதுதான் கதை.
வழக்கமான சினிமா நகர்த்தல்கள் கொஞ்சமும் இல்லாமல் அப்பட்டமான கிராமத்து கூத்துக் கலைஞர்களின் வாழ்க்கையை அப்படியே படமாக்கி இருக்கிறார் பாரி இளவழகன். அந்த வகையில் இயக்குனராக வென்றிருக்கும் அவர் நடிகனாக இன்னும் ஒரு படி மேலே போய் வென்றெடுத்து இருக்கிறார்.
இப்போது இருக்கும் முதல் நிலை நடிகர்களுக்குப் போட்டியாக உடல் மொழி உட்பட அத்தனை விஷயங்களிலும் துல்லியமான கவனம் பதித்து நடித்திருப்பவருக்குப் பல விருதுகள் காத்திருக்கின்றன.
அவருக்கு அடுத்தபடியாக படத்தில் கிட்டத்தட்ட வில்லன் போல் வரும் சேர்த்தனின் நடிப்பைச் சொல்லலாம். நடிப்பு என்றே தெரியாமல் அண்டர் பிளே செய்திருக்கும் அவரது ஆதிக்க மனோபாவம் அந்தப் பாத்திரத்திலும், நடிப்பிலும் அப்படி வெளிப்படுகிறது.
விழிகளாலேயே காதல் பேசும் நாயகி அம்மு அபிராமியும் அசத்தியிருக்கிறார் . அத்தனை துணைப் பாத்திரங்களும் கூட மிகை இலலாத… ஆனால் குறையும் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தி ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்கள்.
படத்தில் கண்ணுக்குத் தெரியாமல் ஆனால் காதுக்குக் கிளர்ச்சியூட்டும் நாயகனாகி இருக்கிறார் இசைஞானி இளையராஜா. இசைஞானியின் பின்னணி இசை உலக மகத்துவம் பெற்றது. அதை இந்தப் படத்தில் இன்னொரு முறை நிரூபித்திருக்கிறார் அவர். காட்சிகளில் தெரியாத உணர்ச்சிகளைக் கூட அவரது இசை மேம்படுத்தி இருக்கிறது.
கிளைமாக்சில் பாரி இளவழகன் ஆடும் அர்ஜுனன் வேடத்திலான பம்பர ஆட்டமும் அதற்கு விசை கொடுத்து இருக்கும் இசைஞானியின் இசையும் ஹைலைட்.
கோபால் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு கதையின் தன்மைக்கேற்ப அண்ணாமலை ஜோதியாக ஒளிர்ந்திருக்கிறது.
இது சினிமா கடந்த சினிமாவாக இருக்க வேண்டும் என்பதில் இயக்குனர் தீர்மானமாக இருந்திருக்கிறார் என்று தெரிகிறது. அதனால் சினிமாவின் வணிகம் சேர்ந்த எந்த அம்சமும் இல்லாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இந்த விஷயமே இந்தப் படத்தை ஒரு டாக்குமெண்டரி போல உணர வைக்கிறது. கூத்துக் கலையைப் போலவே வருமானம் இல்லாத தொழிலாக சினிமாவை நடத்துவது என்பது சிக்கலான விஷயம்தான்.
ஆனால், சினிமா என்ற பெயரில் கூத்தடிக்கும் மசாலாக் குப்பைகளுக்கு மத்தியில் முழுமையான கூத்து வாழ்க்கையை ஒரு சினிமாவாகக் கொடுத்திருக்கும் அவரது முயற்சியை வரவேற்கலாம்.
என்றாலும் ரசனை பொதிந்த சுவையைக் கூட்டி இருந்தால் வணிக ரீதியாகவும்…
ஜமாய்த்திருக்கும் இந்த ஜமா..!
– வேணுஜி