July 18, 2024
  • July 18, 2024
Breaking News
July 9, 2023

இன்ஃபினிட்டி திரைப்பட விமர்சனம்

By 0 168 Views

தலைப்பைப் பார்த்ததும் நாம் பார்க்கப்போவது ஆங்கிலப் படமா தமிழ்ப் படமா என்ற சந்தேகமே வந்துவிட்டது. ஆனால் படம் தொடங்கியதும் இது அக்மார்க் தமிழ்ப் படம் என்பது புரிந்துவிடுகிறது.

தமிழகத்தில் ஒரே இரவில் அடுத்தடுத்து இரண்டு கொலைகள் நடைபெற, தலைப்பு செய்தியாகும் இந்த கொலைகளைப் பற்றிய விசாரணைக்கு வரும் இன்ஸ்பெக்டரும் கொல்லப்பட நகரே தீப்பற்றிக் கொள்கிறது.

எனவே இந்தக் கேசை துப்பறிய சிபிஐயிடம் கோருகிறார்கள். சிபிஐயில் யாருக்கும் அடங்காமல் தன்னிச்சையாக செயல்படும் நட்டி நடராஜனிடம் இந்தக் கேஸ் ஒப்படைக்கப்படுகிறது. அவர் எப்படி துப்பறிந்து இந்தக் கொலைகளின் பின்னால் இருக்கும் உண்மையை வெளிக்கொண்டு வருகிறார் என்பதுதான் படத்தின் கதை.

கதையாக கேட்டால் இது ஒரு நல்ல ஸ்கிரிப்ட் போலத்தான் தோன்றுகிறது. நல்ல படங்களில் மட்டுமே நடிப்பவர் என்று நம்பப்படும் நட்டி நடராஜனும் ஹீரோவாக நடிக்க ஒத்துக் கொண்டிருப்பதால் நிச்சயம் இந்தப் படம் சிறப்பாக இருக்கும் என்பதுதான் படம் பார்க்க வருபவர்களின் எண்ணமாக இருக்கும்.

ஆனால் திரைக்கதை மற்றும் காட்சிகளின் அமைப்பில் இயக்குனர் சாய் கார்த்திக் பலவீனப்பட்டு விடுவதால் நம் எதிர்பார்ப்பு கொஞ்சம் சரிகிறது.

நட்டி நடராஜனின் அறிமுகம் என்னவோ அமர்க்களமாகத்தான் இருக்கிறது. தங்க மோசடி வழக்கு ஒன்றில் விசாரணை செய்து கொண்டிருக்கும் அவர் விசாரணைக்கு உட்பட்டிருக்கும் போலீஸ் அதிகாரியையே பளார் என்ற கன்னத்தில் அறைவதில் அவரது உக்கிரம் நன்றாகப் புரிகிறது.

அடுத்தடுத்த கொலைகள் பற்றி அவர் ஆராய முற்படும் முன்பகுதியும் பரபரப்பாகவே நகர்கிறது. ஆனால் வழக்கமான கமர்சியல் சினிமா இலக்கணப்படியே அவருக்கு ஒத்தாசை செய்ய சிபிஐயில் இருந்தோ, போலீஸில் இருந்தோ யாரையும் வேண்டாமல் திருக்கை என்கிற லோக்கல் பார்ட்டியைத்தான் தேர்வு செய்து கொள்கிறார் நட்டி.

நட்டியின் வழக்குகளில் அவருக்கு உதவி செய்யும் பாத்திரத்தில் வருகிறார் பொது மருத்துவமனை மருத்துவரான வித்யா பிரதீப்.

வித்யா பிரதீப்புக்கும் அழுத்தமான வேடம்தான். ஆனால் பொது மருத்துவமனையைப் பொருத்த அளவில் பொதுவாக ஒரு மருத்துவர் மட்டுமே இருப்பார் என்பதாக போஸ்ட்மார்ட்டம் ஆனாலும் சரி… சிகிச்சை அளிப்பதானாலும் சரி… வெளியில் ஏதோ பிரச்சினை என்றாலும் சரி… இந்த ஒரு மருத்துவரை நம்பியே எல்லா காரியங்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

வழக்கமாக படங்களில் தன்னுடைய இருப்பை நகைச்சுவை மூலம் உறுதிப்படுத்தி விடும் முனிஷ்காந்த் ராமதாஸ் இந்தப் படத்தில் நம்மை சிரிக்க வைக்க ரொம்பவே மெனக்கெடுகிறார்.

நட்டிக்கு உதவும் திருக்கையாக முருகானந்தம் வருகிறார். விலாவில் குண்டு பாய்ந்த நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அவர் சில நாட்களில் சர்வ சாதாரணமாக ஒரு கட்டு கூட போடாமல் நட்டியுடன் சுற்றிக் கொண்டிருப்பது நகைப்பைத்தான் வரவழைக்கிறது.

முதல் பாதி வரை பரபரப்பாகவே கடக்கும் திரைக்கதை இரண்டாவது பாதியில் ரொம்பவும் நொண்டி அடித்து விடுகிறது. புதிது புதிதாக பாத்திரங்களை உருவாக்கி அவர்கள் தான் இதற்கெல்லாம் காரணம் என்பது போல கொஞ்சம் ஓல்ட் ஸ்கூல் உத்திகளையே பயன்படுத்தி இருக்கிறார் இயக்குனர்.

ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து குழந்தைகளை ஒரு சமூக விரோத செயலுக்காகக் கடத்துவதெல்லாம் சரி… ஆனால் அதற்காக அந்த குழந்தைகளை அப்படியா சுத்தியலால் அடித்து கொலை செய்ய ஒருவருக்கு மனம் வரும்..? இதற்கும் அவர் சைக்கோவும் இல்லை.

படம் பார்ப்பவர்களை பதைபதைப்புக்கு உள்ளாக்க வேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற குரூர காட்சிகளை வைத்திருப்பதை கண்டிப்பாகத் தவிர்த்து இருக்க வேண்டும்.

கிட்டத்தட்ட எல்லா கொலைகளின் பின்னணியும் முடிச்சுகளும் அவிழ்ந்து விட்டன என்று நாம் நினைக்கும் போது ” இல்லை இந்த விஷயங்கள் எல்லாம் இன்னும் முற்றுப்பெறவில்லை..” என்பதாக புதிதாக ஒரு தாதா கேரக்டரை அறிமுகப்படுத்துகிறார்கள்.

அவர்தான் எல்லா சதிச் செயலுக்கும் மூளையாக செயல்படுபவர் என்று நமக்குப் புரிய வைத்துவிட்டு அவரை தேடி நட்டி நடராஜன் வரப்போகிறார் என்று சொல்லி இரண்டாவது பாகத்துக்கான பிள்ளையார் சுழியைப் போடும் இயக்குனர் அந்த தாதா கேரக்டரிலும் நடித்திருப்பது எந்த விதமான எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தவில்லை.

இசையமைப்பாளர் பாலசுப்பிரமணியன். ஜிக்கு முதல் காட்சியில் இருந்தே கிளைமாக்ஸ் தான் என்று சொல்லிவிட்டார்கள் போலிருக்கிறது. பட ஆரம்பத்திலிருந்து கிளைமாக்சுக்கு உண்டான டெம்போவிலேயே பின்னணி இசை அமைத்திருக்கிறார்.

நட்டி நடராஜன் இந்தியாவின் தலைசிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் என்று இருந்தும் கூட இந்தப் பட ஒளிப்பதிவாளர் சரவணன் ஶ்ரீ அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இந்த பட்ஜெட்டுக்கு இவ்வளவுதான் முடியும் என்பதாகப் பணிபுரிந்து இருக்கிறார்.

அடுத்து வரப்போவதாக பயமுறுத்தும் அடுத்த பாகம் வெளிவந்தாலும் அதுவும் முடிவற்றதாகவே இருக்கும் என்று தோன்றுகிறது.

காரணம் படத்தின் தலைப்பு.

இன்ஃபினிட்டி என்றால் முடிவற்றது என்று அர்த்தம். ஆக… இந்தக் கதையும் முடியவில்லை – நமக்கும் ஓரளவுக்கு மேல் முடியவில்லை..!