May 2, 2024
  • May 2, 2024
Breaking News
December 9, 2022

குருமூர்த்தி திரைப்பட விமர்சனம்

By 0 812 Views

நாம் அறிந்த திருடன் போலீஸ் கதையை கமர்சியல் கலந்து மசாலா வேர்க்கடலை சுவையில் படமாகக் கொடுக்க முயன்றுள்ளார் இயக்குநர் கே.பி.தனசேகரன். .

இதில் போலீஸ் யார் என்பது நமக்குத் தெரிகிறது. அது நட்ராஜ் என்கிற நட்டி. அவர்தான் குருமூர்த்தி.

கதை இதுதான்.

ராம்கி ஒரு பெரிய பணக்காரர். அவர் ஒரு வீடு வாங்குவதற்காக ஐந்து கோடி ரூபாயைக் காரில் எடுத்துச் செல்லும்போது, அவசரமாக ஒரு மாத்திரை சாப்பிட வேண்டும் என்று ஒரு பெட்டிக் கடையில் நிறுத்தி தண்ணீர் கேட்கிறார்.

அங்கே சிறு பிரச்சினை வர அந்த நேரம்  காரில் உள்ள பணப்பெட்டி காணாமல் போக பதற்றமடைகிறார்.

அதை ஒரு மூன்றுபேர் திருட்டுக் கும்பல் எடுத்துச் சென்று விடுகிறது. அந்தப் பெட்டி வெவ்வேறு ஆட்களுக்குக் கைமாறுகிறது.

இந்நிலையில் ராம்கி போலீசில் புகார் செய்ய இன்ஸ்பெக்டர் நட்டி தலைமையிலான போலீஸ் படையும் தேடுகிறது. பணப்பெட்டி யாரிடம் சென்றது? மாறிமாறிக் கடைசியில் யாரிடம் போய்ச் சேருகிறது என்பது மீதிக் கதை 

இதனுடன் காவல் துறை அதிகாரியான நட்டியின் குடும்பக் கதையும் இணைந்து கொள்கிறது.

பிரசவம் எந்நேரமும் நடக்கலாம் என்ற நிலையில் மனைவியுடன் இருக்க முடியாமல் தன் மன நெருக்கடியை மறைத்துக் கொண்டு கடமையையே கண்ணாக எண்ணி நடக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தியாகவே தெரிகிறார் நட்டி. படத்தில் பெரும்பாலும் ஜீப்பில் சுற்றிக் கொண்டிருப்பவர் தன்னால் முடிந்த வகையில் அந்தப் பாத்திரத்திற்கு நியாயம் செய்துள்ளார். 

தமிழரசி என்கிற பெயரில் நாயகியாக நீண்ட இடைவெளிக்குப் பின் பூனம் பாஜ்வா. தோற்றத்தில் சற்று மாற்றம் தெரிந்தாலும் குறை வைக்காத கிளாமரையும், நடிப்பையும் காட்டியுள்ளார்.

காதல் காட்சிகளில் நெருக்கம் காட்டித் தாராளமாக மனம் திறந்துள்ளார். மருத்துவமனையில் பிரசவ வலியில் கணவனைப் பார்க்கத் துடிக்கும் காட்சிகளில் நல்ல நடிப்பையும் காட்டி உள்ளார் பூனம். 

ஒரு இடைவெளிக்குப் பின் கந்தசாமி என்கிற பாத்திரத்தில் ராம்கி நடித்துள்ளார். தொண்ணூறுகளில் பார்த்த அதே தோற்றம் என்பது நிறை பெரிதாக அவர் பயன்படுத்தப்படவில்லை என்பது குறை. அவரது பிளாஷ்பேக் காட்சிகள் கதையில் ஒரு சிறு ஆச்சரியம் வர உதவி இருக்கின்றன.

போலீஸ் டிரைவராக ரவிமரியாவும், ஏட்டாக மனோபாலாவும் வருகிறார்கள். ஆனால் காமெடி பெரிதாக எடுபடவில்லை. யானை லத்தி காமெடி அருவெறுப்பானது.

பாடல்களில் தெரியும் நேர்த்தி பிற காட்சிகளில் இல்லை என்பது பட்ஜெட் குறைபாட்டால் இருக்கலாம்.

மொட்டை ராஜேந்திரன் வரும் காட்சிகளில் சிரிப்பூட்டுகிறார். அவருடன்
சஞ்சனா சிங் , அஸ்மிதா தோன்றும்
‘செக்கசெவந்த சுந்தரி சேரநாட்டு முந்திரி’ கிளாமர் பாடல் எண்பதுகளில் பார்த்த  சமாச்சாரம்.

கண்களுக்கு குளிர்ச்சியான ஒளிப்பதிவுக்குக் காரணமான தேவராஜ் படம் முழுதும் அதைக் கடைப்பிடிக்க இயலவில்லை.

படத்தின் இரண்டாவது பாதியில் வரும் ‘தாரகையே தாயும் நீயே’ பாடல் ஒரு ஸ்பீட் பிரேக்கர்.

இனிமையான பாடல்கள் கொடுத்த இசையமைப்பாளர் சத்யதேவ் உதய சங்கர், பின்னணி இசையில் ஓகே என்ற அளவுக்குதான் கூறும்படி இசைத்திருக்கிறார்.

பிரண்ட்ஸ் டாக்கீஸ் சார்பில் சிவசலபதி மற்றும் சாய் சரவணன் தயாரித்துள்ளனர்.

குருமூர்த்தி – பட்ஜெட் சிறிது… மசாலா பெரிது..!