May 4, 2024
  • May 4, 2024
Breaking News
July 8, 2022

கிராண்மா திரைப்பட விமர்சனம்

By 0 332 Views

வழக்கமாக தன்னுடைய டீச்சரை பார்த்தால்தான் எல்லோருக்கும் பயம் வரும். ஆனால் ஒரு டீச்சரே பயப்படுகிறார் என்றால் அது ஆவியை தவிர வேறு யாரால் முடியும்..?

மலைப்பாங்கான இடத்தில் மிக அழகான, பசுமையான மரங்கள் அடர்ந்திருக்கும் தன்னந்தனியான ஒரு வீட்டில் வக்கீல் பிரியாவாக நடித்திருக்கும் விமலா ராமன் தன் ஆறு வயது மகள் நிக்கியுடன் வசிக்கிறார்.

பிடிவாத குணம் கொண்ட பெண் நிக்கி.. (அந்த கேரக்டரில் தயாரிப்பாளர் ஜெயராஜின் மகள் பௌர்ணமி ராஜ் நடித்திருக்கிறாள்.) அவளுக்கு வீட்டிலேயே பாடம் சொல்லிக் கொடுக்கும் டீச்சராக, ‘திரிஷா ‘ என்ற கேரக்டரில் சோனியா அகர்வால் வருகிறார். பிடிவாத குணம் கொண்ட குழந்தையை நல்வழிப்படுத்துவதாக, அதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு வேலைக்கு வருகிறார் சோனியா.

சிறுமி நிக்கி மனதில், இறந்து போன அவளது கிராண்மா (பாட்டி) இருப்பது மட்டுமல்லாமல், அவ்வப்போது ஆவியாக வந்து நிக்கியுடன் உரையாடுகிறார். அதைப் பார்த்த பிறகு, பீதியில் வேலையை விட்டுப் போக முடிவெடுக்கிறார் சோனியா அகர்வால்.

ஆனால் கிராண்மாவின் ஆவி சோனியா அகர்வாலை போக விட்டதா..? வக்கீல் பிரியாவிற்கு அடுத்தடுத்து வரும் பிரச்சினைகள்.. சோதனைகள்… அதில் சோனியா அகர்வாலின் பங்கு என்று டைரக்டர் சிஜின்லால் எஸ். எஸ். திரில்லிங்காக ஒரு கதையை சொல்லி இருக்கிறார்.

படத்தில் ரசிகத்தக்க முக்கிய அம்சம் அழகியல். கதை நடக்கும் இடம் சரி அதன் சுற்றுப்புறமும் சரி படத்துக்குள் வரும் நடிக, நடிகைகளும் சரி அவ்வளவு அழகாக கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறார்கள். அட ஆவியாக வரும் கிராண்மா சார்மிளாவும் கூட இளமையாக அழகாகத்தான் தோன்றுகிறார்.

அமைதியாக ஆரம்பித்து கோபம் பயம் என்று பலவித உணர்ச்சிகளை காட்டி கடைசியில் வீரமங்கையாக நடித்து முடிக்கிறார் சோனியா அகர்வால்.

தன் பணிச் சுமை காரணமாக அம்மாவையும் சரியாக கவனிக்காமல், தன் பெண் குழந்தையையும் சரியாக கவனிக்க முடியாமல் இருக்கும் வக்கீல் விமலா ராமனின் சூழ்நிலை பதட்டமாக தான் இருக்கிறது. ஆனாலும் கூலாக நிலைமைகளை எதிர் கொள்கிறார் அவர். உயிரே போனாலும் நீதிக்கு புறம்பாக நடக்க மாட்டேன் என்கிற அவரது கேரக்டர் நின்று விடுகிறது.

ஒரே லொகேஷனில் கதை நகர்ந்தாலும் இருக்கிற அழகியல் காட்சிகளை எதையும் தவறவிடாமல் பதிவு செய்து ரசிக்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர் யஸ்வந்த் பாலாஜி.

அதிரடி இசை தந்து தியேட்டரை அதிர வைக்கிறார் சங்கர் ஷர்மா. குறிப்பிடத்தக்க இன்னொரு அம்சம் ஒலிப்பதிவு மற்றும் சவுண்ட் எபெக்ட்.

கிரான்மா சார்மிளா, வில்லனாக வரும் ஹேமந்த் மேனன், குழந்தை நட்சத்திரம் நிக்கியாக பௌர்ணமி ராஜ் தங்கள் பங்கில் சிறப்பாக நடித்திருக்கின்றனர்.

யாருமே எதிர்பார்க்காத கிளைமேக்ஸ். ஒரு ஆவி வீட்டுக்குள் இருக்க பதட்டமான சூழ்நிலையில் அந்த ஆவி உள்ளே வந்து வில்லன் நிலை துவம்சம் செய்யும் என்றுதான் நாம் இதுவரை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் ஆவிக்கும் சட்ட திட்டங்கள் வைத்து அதனால் என்ன செய்ய முடியும் என்ன செய்ய முடியாது என்ற வரையறைக்குள் வைத்து அதன் கைகளை கட்டி போட்டு இருக்கிறார் இயக்குனர்.

விமலா ராமனின் கணவர் மற்றும் சோனியா அகர்வாலின் கணவர் கேரக்டர்கள் பற்றி படம் முழுக்க ஒன்றும் சொல்லாதது ஏன்..? குற்ற வழக்கில் ஆஜராகும் வக்கீலான விமலா ராமன் பெண்கள் மட்டுமே தங்கி இருக்கும் அப்படி ஒரு தன்னந்தனி வீட்டில் எதற்காக வசிக்க வேண்டும்..? அந்த வீட்டில் லோக்கல் திருடர்கள் புகுந்தால் கூட அவர்களால் எதிர்க்க முடியாது என்பதுதான் உண்மை.

இதைப் போன்ற சில லாஜிக் குறைபாடுகள் இருந்தாலும் கண்ணுக்கு குளிர்ச்சியான ஒளிப்பதிவில் தொழில்நுட்ப குறைவில்லாமல் அழகான பாத்திரங்களுடன் ஒரு திரில்லர் படத்தை பார்த்த திருப்தி ஏற்படுவது நிஜம்

‘ கிராண்மா ‘ – பேயானாலும் தாய்..!