பலவிதமான காதல் கதைகளைப் பார்த்து சலித்து விட்ட இந்திய சினிமாவில், அடுத்து என்ன என்று யோசித்து இருப்பார் போலிருக்கிறது இந்தப் பட இயக்குனர் அருண் சந்து.
எனவே பூமியில் இருக்கும் இளைஞனுக்கும் வெளிகிரகத்திலிருந்து வந்த பெண்ணுக்கும் ஒரு காதல் இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து இருக்கிறார். அதிலும் காதலன் வயது 25. காதலியின் வயது 250.
எப்படி இருக்கிறது பாருங்கள் கற்பனை… காமெடியாக இல்லை..? படமும் காமெடியானது தான்.
படத்தின் கதை இன்னும் 20, 30 வருடங்கள் கழித்து நடக்கிறது. அப்போது மிகப்பெரிய பிரளயம் வந்து பூமியே வெள்ளக்காடாகக் கிடக்க… பெட்ரோலுக்குக் கடும் தட்டுப்பாடும் , தடையும் வந்து கிட்டத்தட்ட போர் அளவுக்குக் கலவரங்கள் வெடித்து ஓய்ந்திருக்கிறது… இதெல்லாம் போதாது என்று வெளி கிரகத்திலிருந்து வரும் ஏலியன்களால் பூமிக்கு ஆபத்தும் இருக்கிறது.
இந்நிலையில் அங்கங்கே மனிதர்கள் தப்பிப் பிழைத்திருக்க, கடுமையான கட்டுப்பாடுகளுடன் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். எல்லோரையும் தனியார் போலீஸ் ஒரு பக்கம் கண்காணித்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் கேப்டன் கணேஷ் குமார், தன் உறவினர்கள் மற்றும் உதவியாளர்களான கோகுல் சுரேஷ், அஜு வர்கீஸ் உடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் ஏலியனை எதிர்த்துப் போரிட்டவர் என்பதால் அவரைப் பற்றி ஒரு டாக்குமெண்டரி படம் தயாரிப்பதற்காக இளைஞர்கள் வருகின்றனர்.
படம் முழுவதுமே ஒரு டாகுமெண்டரி போலவே விரிய இவர்கள் அங்கு சென்ற நேரம் பார்த்து இன்னொரு ஏலியனான அனார்கலி மரிக்கர் அங்கு வந்து சேர, அவரை கோகுல் சுரேஷ் காதலிக்க, பிரைவேட் போலீஸ் இவர்களை உற்று கவனிக்க… என்ன ஆகிறது என்பது கிளைமாக்ஸ்.
படத்தில் முதலில் கவனத்தைக் கவர்வது ஏலியனாக வரும் அனார்கலி மரிக்கர்தான். நாம் பேசுவதைப் போல் பேசத் தெரியாதவராக வருவதால் அதற்கான உணர்ச்சிகளையும் அவரால் முகத்தில் காட்ட முடியாத நிலையில்… நடிக்காமல் அற்புதமாக நடித்திருக்கிறார்.
ஒரு கட்டத்தில் அவர் சிரிக்க ஆரம்பிப்பதே படத்தின் பாத்திரங்களுக்கும் நமக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
அவர் வயதானவர் என்று தெரிந்ததும் அவரை மற்ற பாத்திரங்கள் “ஏலியம்மா.!” என்று அழைப்பது செம காமெடி
அவரைக் காதலிக்கும் கோகுல் சுரேஷும் அனாயசமாக நடித்திருக்கிறார். அங்கங்கே அவரது அப்பாவை இளைஞராகப் பார்த்தது போல் இருக்கிறது. என்ன ஒன்று, உடம்பைக் கொஞ்சம் இளைத்தால் தேவலாம்.
கேப்டனாக கணேஷ்குமாரும் ஒரு ஹீரோவாகி இருக்கிறார். அவரது பிரதாபங்கள்தான் படம் நெடுக.
டைனோசர் பொம்மையுடன் சுற்றிக் கொண்டிருக்கும் அஜு வர்கீஸ், இடையே கொஞ்சம் மூளை குழம்பியவரைப் போல் நடித்து சிரிக்க வைக்கிறார்.
இவர்களைக் கண்காணிக்கும் அந்த இரண்டு போலீசும் கூட அங்கங்கே கொஞ்சமாக சிரிக்க வைக்கிறார்கள்.
இது ஒரு டாகுமென்டரி சம்பந்தப்பட்ட படம் என்பதால் படம் நெடுகவே டாக்குமென்டரி ஷூட் போலவே எடுத்து இருக்கிறார்கள். எனவே ஒளிப்பதிவும் கூட ஒரு டாக்குமென்டரி என்ற அளவிலேயே இருக்கிறது.
இசையில் வித்தியாசப்படுத்தி இருக்கிறார் சங்கர் சர்மா. படத்தொகுப்பாளர் சீஜே அச்சு, கலை இயக்குநர் எம்.பாவா, வி.எஃப் .எக்ஸ் காட்சிகளை அமைத்திருக்கும் மெராகி உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் அற்புதமாக பணியாற்றி இருக்கிறார்கள்.
படம் நெடுகவே டாக்குமென்டரி போலவே நகர்வதால் கொஞ்சம் சுவாரஸ்யக் குறைவு ஏற்படுகிறது. அத்துடன் நகைச்சுவையிலும் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.
ஆனால் வித்தியாசமான இப்படிப்பட்ட முயற்சிகளை மலையாளத் திரை உலகம்தான் தொடர்ந்து செய்து வருகிறது. அந்த முயற்சிக்குப் பாராட்டுகளை அள்ளி வீசலாம்.
ககனச்சாரி – கவனம் கவர்ந்த ஏலி..!