April 29, 2024
  • April 29, 2024
Breaking News
March 13, 2024

காமி (Gaami) தெலுங்குப்பட விமர்சனம்

By 0 65 Views

பட ஆரம்பத்தில் இருந்து மூன்று கதைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

முதல் கதையில் அகோரி குழுவில் வளரும் நாயகன் விஸ்வக் சென்னை, அந்த அகோரி  குழுவினர் வெளியேறச் சொல்கின்றனர். காரணம், அவருக்கு மனிதர்கள் தொட்டால் சிலிர்த்து மயக்கம் வரும் வினோதமான உடல் தன்மை இருக்க, அது தெய்வத்தின் சாபம் என்பதால் அவரை அகோரிகள் விரட்டுகின்றனர்.

அங்கு இருக்கும் நல்ல மனம் கொண்ட அகோரி ஒருவர், வாரணாசி சென்று அவரை அங்கு விட்டுச் சென்ற பாபாவை சந்தித்தால் இந்த சாபத்தின் விமோசனம் கிடைக்கலாம் என்று கூற பாபாவைத் தேடி பயணப் படுகிறார் நாயகன் விஸ்வக் சென்.

இரண்டாவது கதையில் மர்மமான ஒரு ஆராய்ச்சிக் கூடம் இயங்கிக் கொண்டிருக்க, அங்கே விசித்திரமான மனிதர்களின் வினோதத் தன்மையை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள் – அதுவும் கொடூரமான முறையில் மின்சார ஷாக் எல்லாம் கொடுத்து.

அதில் சிக்கிக் கொண்ட முகம்மது சமத், அங்கிருந்து தப்ப பலவகையிலும் முயற்சி செய்தும் முடியாமல் போக, தற்கொலை செய்து கொள்ள முயலும் நேரத்தில் அவருக்கு ஒரு துணை கிடைத்து, அங்கே இருந்து தப்ப நினைக்கிறார்.

மூன்றாவது கதையில் தேவதாசி ஆக்கப்பட்ட அபிநயாவுக்கு ஒரு கட்டத்தில் உடல்நலம் குன்ற தேவதாசி தொழிலில் இருந்து விலகிக் கொள்ள முடிவெடுக்கிறார். ஆனால் அவர் எந்த தொழிலை வெறுத்து வெளியே வந்தாரோ அதே தொழிலில் ஈடுபடுத்த அவரது சிறு வயது மகள் ஹரிகா பெட்டாவை சில ஆதிக்க சக்திகள் வற்புறுத்துகிறார்கள். அவர்களிடமிருந்து தன் பெண் குழந்தையை காப்பாற்ற நினைக்கிறார் அபிநயா.

இந்த மூன்று கதைகளுக்கும் யாதொரு தொடர்பு இல்லாமல் இருக்க, இவற்றுக்கு இடையில் தொடர்பு உள்ளதா… இந்த மூவரின் பிரச்சினைகளும் தீர்ந்தனவா என்பதை இரண்டாவது பாதி மட்டுமல்ல, படம் முழுமையும் பார்த்தால் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும்.

ஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லராகச் செல்லும் இந்தப் படத்தின் இயக்குனர் வித்யாதர் காகிடா, நிறைய உழைத்திருக்கிறார். அதுவும் இந்தியாவின் பல்வேறு லொகேஷன்களில் படமாக்கப்பட்டிருக்கும் இந்த படக் குழுவினரின் அர்ப்பணிப்பை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது.

அதுவும் இமயமலையில் பல இடங்களில் பனிக்கிடையில் பயணப்பட்டு எடுத்திருக்கிறார்கள். எதெல்லாம் உண்மை, எதெல்லாம் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் என்று தெரியாத வகையில் தொழில்நுட்ப ரீதியாகவும் நிறைய மெனக்கடல் இருக்கிறது.

நாயகனாக நடித்திருக்கும் விஸ்வக் சென் முகத்தை நம்மால் ஓரளவுக்கு மட்டுமே பார்க்க முடிகிறது. முழுவதும் ஒரு கருப்புப் போர்வையை போட்டு மூடிக்கொண்டு படம் முழுவதும் வந்திருக்கிறார் அதனால் ஓரளவு தெரியும் அவர் முகத்தில் நடிப்பை ஓரளவு மட்டுமே புரிந்து கொள்ள முடிகிறது.

அவருடன் தன்னுடைய ஆராய்ச்சிக்காக பயணம் மேற்கொள்ளும் நாயகி சாந்தினி சவுத்ரியும் தன் பங்களிப்பை சரியாகவே செய்திருக்கிறார். இமயத்தில் பல்லாயிரம் அடி உயரத்தில் இருந்து விழுந்த அவரைக் காப்பாற்ற முடியவில்லை என்று ஒரு புத்தபிச்சு சொன்னாலும் நம்மால் அதை நம்ப முடியவில்லை.

ஆராய்ச்சிக் கூடத்தில் மாட்டிக்கொண்ட முஹம்மத் சமத்தின் நடிப்புதான் படத்தின் ஹைலைட். எந்த நேரத்தில் எந்த மாதிரி துன்புறுத்துவார்களோ என்று தெரியாத நிலையில் அவர் அங்கிருந்து தப்பிக்க மாட்டாரா என்று நம்மையே பதை பதைக்க வைத்து விடுகிறார்.

அதேபோல் தேவதாசியாக நடிக்கும் அபிநயாவும் தன் மகளையாவது இந்தப் படுகுழியில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கும் போது நெகிழ வைக்கிறார்.

அவரது மகளாக நடித்திருக்கும் குழந்தை ஹரிகா பெட்டாவுக்கு அழகான, களையான முகம். அவளை அடித்துத் துன்புறுத்தி தேவதாசி தொழிலில் ஈடுபடுத்தும் போது நமக்கே திரையைக் கிழித்து விட, ஆத்திரம் பொங்குகிறது.

கடைசியில் எல்லாவற்றுக்கும் ஒரு தீர்வை சொல்லும்போது இயக்குனரின் மூளையே ஒரு ஆராய்ச்சிக்குரியது என்று நமக்கு புரிகிறது.

விஸ்வநாத் ரெட்டியின் ஒளிப்பதிவு அற்புதமாக இருக்கிறது. மூன்று கதைகளுக்கும் உறுத்தாத மூன்று வித வண்ணங்களில் கிரேடிங் கொடுத்து நம்மை சிலிர்ப்புடன் வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

அதேபோல் இசையும் ஒரு பயணக் கதைக்கு ஏதுவாக பயணப்பட்டு இருக்கிறது.

இது அறிவியல் கதையா, ஆன்மீகக் கதையா என்பது ஒரு புறம் குழப்புகிறது. அதேபோல் அத்தனை பாவம் புரிபவர்களுக்கும் எந்த விதமான தண்டனையும் கிடைக்காமல் இருப்பதும் உறுத்துகிறது.

சாதாரண மனிதர்களுக்குப் புரியாத அளவில்  நிறைய குழப்பங்கள் இருந்தாலும் இந்தப்படத்தை ஒரு வித்தியாச அனுபவத்திற்காகவும், தொழில்நுட்ப நேர்த்திக்காகவும் பார்க்கலாம்.

காமி – மறக்க முடியாத அனுபவம் சாமி..!