April 27, 2024
  • April 27, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • அப்பா அம்மாவுக்கு விழா எடுக்கும் ஜெயம் ரவி மோகன் ராஜா
November 25, 2019

அப்பா அம்மாவுக்கு விழா எடுக்கும் ஜெயம் ரவி மோகன் ராஜா

By 0 1079 Views

தமிழ் சினிமாவின் பிரபல எடிட்டர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பன்முகம் கொண்ட எடிட்டர் A.மோகன் தன் வாழ்க்கை பயணம் குறித்து தனது அனுபவங்களை தொகுத்து “தனிமனிதன்” எனும் புத்தகம் எழுதியுள்ளார். அவரது துணைவியார் திருமதி வரலட்சுமி மோகன் திருக்குறள் போதிக்கும் அறம் மற்ற அனைத்து இலக்கியங்களிலும் நிறைந்திருப்பதை ஆராய்ந்து இன்றைய தலைமுறைக்கு பயன் தரும் “வேலியற்ற வேதம்” எனும் நூல் ஒன்றை எழுதியுள்ளார். வரும் டிசம்பர் 3 ஆம் தேதி இவ்விரு புத்தகங்களும் பிரபலங்கள் முன்னிலையில் வெளியிடப்படவுள்ளது.

இது குறித்து நடிகர், இயக்குநர் மோகன் ராஜா கூறியதாவது…

எனது குடும்பத்தின் முக்கிய நிகழ்வு. மிகுந்த மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கிறேன். இருவரும் தங்களது வாழ்க்கை அனுபவங்களை புத்தகமாக எழுதியிருக்கிறார்கள். அம்மாவை பொறுத்தவரை அப்பாவை பற்றி பேசினாலே அம்மாவின் வாழ்க்கை முழுமையானதாக சொல்வார்கள். அதனால் அவரது அறிவுப் பக்கத்தை நூலாக பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவர் எளிமையான குடும்பத்தில் பிறந்தவர். சிறு வயது முதலே இலக்கியங்களில் அதிக ஆர்வம் கொண்டவர். பள்ளியில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் அதிக குறளை ஒப்புவித்து தேர்ச்சி பெற்றவர். கல்யாணம் முடிந்தவுடன் அப்பாவின் ஆதரவில் கல்லூரி படித்தார். தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் எம். ஏ முடித்தவர். திருக்குறள் மீது அதிக காதல் கொண்டவர். திருக்குறளில் இருக்கும் கருத்துக்கள் மற்ற இலக்கியங்களிலும் சொல்லப்பட்டிருப்பதை கண்டு வியந்து அதை தொகுத்திருக்கிறார். இரண்டு ஆண்டுகளாக அவரை எந்த நேரத்தில் சந்தித்தாலும் இந்த புத்தக வேலையாகவே தான் இருந்தார். திருக்குறளின் அறம் அனைத்து இலக்கியங்களிலும் நிறைந்திருப்பதை தொகுத்த புத்தகமாக உருவாக்கியிருக்கிறார். இன்றைய இளைய தலைமுறைக்கு பயன்படும் ஒரு புத்தகமாக இது இருக்கும்.

அப்பாவை பொருத்தவரை அவர் தான் என் ஹீரோ. அவரிடம் சினிமா கற்றுக்கொண்டேன். சினிமா கருப்பு வெள்ளை காலத்திலிருந்தே அப்பாவுக்கு தெரியும் அவரது அனுபவம் பெரிது. நடந்தே சென்னை வந்துசேர்ந்து, சின்ன சின்ன வேலைகள் செய்து பெரிய நிலைக்கு உயர்ந்தவர். பிரபல குணசித்திர, காமடி நடிகர் டணால் தங்கவேல் அவர்களின் வளர்ப்பு மகனாக வளரும் பாக்கியம் பெற்றார். அப்போது அங்கு தியாகராஜா பாகவதர் முதல் சின்னப்ப தேவர் வரை எல்லோரும் வந்து போகும் இடமாக இருந்தது. அதன் மூலம் சினிமா கற்றுக்கொண்டு உயர்ந்தவர். தன் அனுபவங்கள் அனைத்தையும் புத்தகமாக உருவாக்கியிருக்கிறார். நாங்கள் ஏன் அவரை கொண்டாடுகிறோம் என்பதற்கு பதில் இந்த புத்தகத்தில் இருக்கிறது. வாழ்க்கையில் வெற்றி எனும் ஒரு வழிப்பாதையை நோக்கமாக கொண்டு செயல்பட்டவர். சினிமாவில் டெக்னீஷியன்களில் சூப்பர் ஸ்டார் என என் அப்பாவை சொல்வேன். அவரது வாழ்க்கை பிரமிப்பானது. அவரிடம் தான் சினிமாவின் அனைத்து துறைகளையும் கற்றுக் கொண்டேன். 12 ஆண்டுகாலம் தெலுங்கில் 10 சிலவர் ஜூப்ளி படம் தயாரித்திருக்கிறார். 100க்கும் மேற்பட்ட படங்கள் எடிட்டராக பணியாற்றியிருக்கிறார். 50 க்கும் மேற்பட்ட மொழி மாற்ற படங்கள் செய்துள்ளார். சினிமா சங்கங்களில் பதவியில் இருந்துள்ளார். அவரது அனுபவம் எல்லோருக்கும் தெரிய வேண்டியது புத்தகமாக வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றார்.

அப்பா அம்மாவை குறித்து
ஜெயம் ரவி கூறியதாவது …

நான் நடிகனாக, இயக்குநராக வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு வந்தேன். ஆனால் எடிட்டர் ஆகி விட்டேன். அதனால், நீங்கள் இருவரும் எனது கனவான டைரக்டராகவும் .. நடிகனாகவும் ஆனதே எனக்கு போதும் என்பார்,அப்பா. ரிலே ரேஸில் நாலு சுற்று ஓடினால் தான் வெற்றி கிடைக்கும். ஆனால் அந்த நாலில் மூன்று சுற்றை அவரே கஷ்டப்பட்டு ஓடிவிட்டு.. ஜெயிக்கிற இறுதிசுற்றை மட்டும் தான் எங்களிடம் தந்துள்ளார். அதை நாங்கள் பொறுப்பாக செய்ய வேண்டும் என்பது தான் எங்கள் ஆசை. மற்றவர்களும் அவரது இந்த அனுபவங்களை தெரிந்து கொள்ளும்போது இந்த அனுபவம் அவர்களுக்கு உதவியாக இருக்கும். அம்மாவை பொறுத்தவரை காந்திகிராமத்தில் படித்தவர்.அம்மாவைப் பார்க்கும் போது காந்தியை பார்த்த மாதிரியே இருக்கும். காந்தியின் நல்ல குணங்கள் அனைத்தையும் அம்மாவிடம் பார்த்து வளர்ந்திருக்கிறேன். அதை எங்களுக்கு சொல்லிக்கொடுத்து வளர்த்திருக்கிறார். அம்மா வெகுளி நிறைய பேரிடம் ஏமாந்து போயிருக்கிறார். ஏம்மா இப்படி ஏமாந்து போறிங்கன்னு அம்மாகிட்ட கேட்பேன். மூணு பேர் ஏமாற்றினாலும் நாலு பேருக்கு நன்மை நடக்கும்ல என்று சொல்லக்கூடியவர் அம்மா. இப்படிபட்ட குடும்பத்தில் பிறந்தது வளர்ந்தது மிகப்பெரிய வரப்பிரசாதம். அவங்களுக்கு கைமாறு எதுவும் செய்ய முடியாது. அப்படி சொன்னால் அது பொய். அப்படிபட்டவங்களுக்கு இப்படி ஒரு விழா எடுக்குறது எங்க வாழ்வில் மறக்க முடியாத நாளா இருக்கும் என்றார் ஜெயம் ரவி.

எடிட்டர் மோகன் “தனிமனிதன்” புத்தகம் மற்றும் திருமதி வரலட்சுமி மோகன் அவர்களின் “வேலியற்ற வேதம்” ஆகிய இரு புத்தகங்களின் வெளியீடும்
வரும் டிசம்பர் 3 ந்தேதி வாணிமஹாலில் மாலை 6 மணிக்கு பிரபலங்கள் முன்னிலையில் நடைபெறுகிறது.