சூப்பர் ஸ்டார் ரஜினியின் பரம ரசிகராக இருக்கும் ஹீரோ விஜய் சத்யாவின் பெயரும் இந்த படத்தில் ரஜினிதான். படத்தை இயக்கி இருப்பது மட்டுமல்லாமல் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்தும் இருக்கிறார் பிரபல இயக்குனர் ஏ.வெங்கடேஷ்.
கட்டுமான கம்பெனி ஒன்றில் பணிபுரியும் கட்டுமஸ்தான விஜய் சத்யா, கார்கள் மீது கொண்ட காதலால் தனியாக கேரேஜ் வைத்திருக்கிறார். மனைவி ஷெரின் மற்றும் பெண் குழந்தையுடன் சந்தோஷமாக வாழ்க்கை நடத்தி வருபவருக்கு திடீரென்று ஒரு பிரச்சனை வருகிறது.
அமைச்சரின் மகன் கொலை வழக்கில் அவர் சம்பந்தப்பட்டிருப்பதாக போலீஸ் மோப்பம் பிடித்து அவரைத் துரத்த உண்மையில் நடந்தது என்ன, அதில் இருந்து விஜய் சத்யாவும் அவர் குடும்பத்தினரும் தப்பித்தார்களா என்பதே மீதிக் கதை.
தமிழ் சினிமாவிலேயே… ஏன் இந்திய சினிமாவிலேயே என்று கூட சொல்லலாம் – விஜய் சத்யா அளவுக்கு உடற்பயிற்சிகள் செய்து உடம்பை இப்படி திண்ணென்று வைத்திருக்கும் ஹீரோக்கள் யாரும் கிடையாது. பாலிவுட் கட்டழகன் சல்மான் கான் பார்த்தால் கூட சபாஷ் போடுவார்.
உடலைப் பேணி பாதுகாத்து வளர்த்திருப்பதைப் போலவே நடிப்பிலும் வளர்ச்சி பெற்றிருந்தால் விஜய் சத்யாவை முழுதாகப் பாராட்டி இருக்கலாம். ஒரே விதமான முக பாவத்துடன் மட்டுமே அவரால் நடிக்க வருகிறது நடிப்பைக் கற்றுக் கொண்டால் அவரது எதிர்காலத்திற்கு நல்லது.
பரோட்டாவுக்கு பிசைந்து வைத்த மாவு போல் இருக்கும் கதாநாயகியான ஷெரினுக்கு சற்று வயதாகிவிட்டது அவர்களுக்கே தெரிவதால் திருமணம் ஆகி ஏழு வயதுப் பெண் குழந்தைக்குத் தாயாக ஆக்கி இருக்கிறார்கள். இருந்தாலும் கிளாமராக அவருக்கு நடனம் எல்லாம் இருக்கிறது.
ஷெரினை விட விஜய் சத்யாவைத் தேடிக் கொண்டிருக்கும் போலீஸ் அதிகாரி சம்யுக்தா அதிகமாக கவனத்தைக் கவர்கிறார். நியாயப்படி பார்த்தால் விஜய் சத்யாவின் கட்டான உடலுக்கு சம்யுக்தாவின் வளைவு நெளிவுகள்தான் பொருத்தமாக இருக்கின்றன.
நடிகருமான ஏ வெங்கடேஷ் பிற இயக்குனர்களின் படங்களில் நடித்ததை விட இதில் குறைவாகததான் நடித்திருக்கிறார். இறுக்கமாக முகத்தை வைத்துக் கொண்டிருப்பதில் விஜய் சத்யாவிற்கும் இவருக்கும் போட்டியே வைக்கலாம்.
அமைச்சராக வரும் அவர் மகன் எவ்வளவு பொறுக்கியாக இருக்கிறான் என்பதை நமக்கு சொல்லிவிட்ட அளவுக்கு அவருக்கு அதைத் தெரிவிக்கவில்லை. படத்தின் திரைக் கதையையும் எழுதி இருக்கும் அவர் இதை எப்படி கவனிக்காமல் விட்டார் என்று தெரியவில்லை.
அவரது மனைவியாக வனிதா விஜயகுமார் வந்தாலும் அவருக்கு ஏற்ற அளவில் பாத்திரப் படைப்பு இல்லாமல் அமைதியாகவே வந்து போகிறார்.
ரஜினியின் ரசிகர் மன்றத்தில் உறுப்பினராக இருக்கும் இமான் அண்ணாச்சியைக் காமெடிக்கு என்று போட்டு இருக்கிறார்கள். ஆனால் அவருக்கான காமெடியை நல்ல நகைச்சுவை எழுத்தாளரை வைத்து எழுதி இருக்கலாம். அல்லது அவரை சொந்தமாக பேச விட்டிருந்தாலே அசத்தியிருப்பார்.
இவர்களுடன் கராத்தே ராஜா, விஜய் டிவி பாலா, ஞானசம்பந்தம், அம்மு, லொள்ளு சபா மனோகர், வெனீஸ், ரங்கநாதன், மூக்குத்தி முருகன், தணிகைவேல் உள்ளிட்டோர நடித்திருந்தாலும் இவர்களுக்குப் பெரிய வேலை எதுவும் இல்லை.
மனோ வி.நாராயணா ஒளிப்பதிவு நியாயமாக இருக்கிறது. இந்த கமர்சியல் படத்துக்கு அமரீஷின் இசை பெரிய அளவில் உதவுகிறது. படம் முடிந்ததும் வரும் “சாங்கு இருக்கு… பைட்டு இருக்கு…” கவர் பாடலைப் படத்துக்கு இடையிலேயே வைத்திருந்தால் இன்னும் மைலேஜ் கூடியிருக்கும்.
பரபரப்புடன் இருந்தாலும் பட ஆரம்பத்தில் இருந்து புதிய விஷயங்கள் எதுவும் இல்லாமல் நகரும் திரைக்கதை கிளைமாக்ஸ் நெருங்க நெருங்க சூடு பிடித்துக் கொள்கிறது. அதிலும் விஜய் சத்யாவை கொல்வதற்காக ஏ.வெங்கடேஷ் அனுப்பும் கொலையாளிகள், இயல்பாக தெருவில் கடக்கும் தொழிலாளிகள், கல்யாண கோஷ்டி உள்ளிட்ட வேடங்களில் வந்து தாக்குவது சுவாரசியம்.
அதேபோல் ரஜினி ரசிகர்கள் ரஜினி மாஸ்க் உடன் கூட்டமாக வந்து விஜய் சத்யாவை காப்பாற்றுவதும் ரசிக்கும்படி இருக்கிறது.
இதே கவனம் படம் நெடுக இருந்தால் இன்னும் கூட படத்தை ரசித்திருக்க முடியும்.
ஒன்றே முக்கால் மணி நேரம்தான் படம் ஓடியது என்பதை நம்ப முடியாத அளவுக்கு ஒரு பெரிய படம் பார்த்த திருப்தியைத தந்திருப்பதில் ஏ.வெங்கடேஷின் திறமை பளிச்சிடுகிறது.
தில் ராஜா – ரஜினி ரசிகன்..!