May 17, 2024
  • May 17, 2024
Breaking News
October 10, 2023

தில்லு இருந்தா போராடு படத்தின் விமர்சனம்

By 0 289 Views

பெரிய ஹீரோக்கள் – பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்களை விட சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் சின்ன ஹீரோக்களின் படங்கள்தான் பெரும்பாலும் சமூகத்துக்கு செய்தியைச் சொல்லக்கூடிய படங்களாக இருக்கின்றன.

அப்படி கார்த்திக் தாசை ஹீரோவாகக் கொண்டு எஸ்.கே.முரளிதரன் இயக்கியிருக்கும் படம்தான் இது.

அறிமுகக் காட்சியிலேயே நாயகன் கார்த்திக் தாஸ் ஒரு மரத்தடியில் வைத்து ஆதரவற்ற குழந்தைகளுக்குப் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார். அங்கிருந்து காட்சிகள் பின்னோக்கிப் போகின்றன.

ஏழைத் தம்பதிக்கு மகனாகப் பிறந்த கார்த்திக் தாஸ், ஒரு தங்கை இருந்தும், பொறுப்பின்றி தன் படிப்புக்கேற்ற வேலை கிடைக்கவில்லை என்று தேவையில்லாத தீய பழக்கங்களுடன் ஊரைச் சுற்றி வருகிறார். 

அப்படி அந்த ஊர் பணக்காரரின் மகள் அனு கிருஷ்ணாவை பார்த்ததும் காதல் கொண்டு அவர் பின்னாலேயே சுற்றிச் சுற்றி வருகிறார்.

அனு கிருஷ்ணா எவ்வளவு அவமானப் படுத்தியும் அவரது தந்தையிடம் சொல்லி விரட்டியும் கூட “நீ என்னை காதலிக்காவிட்டாலும் நான் உன்னைக் காதலித்துக் கொண்டுதான் இருப்பேன்…” என்று அனு கிருஷ்ணாவை நிம்மதி இல்லாமல் தவிக்க வைக்கிறார் கார்த்திக் தாஸ்.

இந்த விஷயம் அவரது பெற்றோருக்கு மிகப்பெரிய தலைவலியாக இருக்க ஒரு கட்டத்தில் விஷயம் போலீஸ் ஸ்டேஷன் போய் அங்கே அவருக்கு லாடம் கட்டும் வரை போகிறது. ஆனாலும் அசராத அவரது காதலைப் பார்த்து அனு கிருஷ்னாவே ஒரு கட்டத்தில் காதலிக்கத் தொடங்குகிறார்.

காதல் எபிசோட் முடிந்த பிறகு அனு கிருஷ்ணாவின் அறிவுரைப்படி வேலைக்குப் போக அவர் எடுத்த முயற்சி என்ன ஆனது என்பது மீதிக் கதை.

காதலில் எத்தனை அவமானங்கள் வந்தாலும் அதைத் துடைத்துப் போட்டுவிட்டு சிரித்த முகத்துடனே அனு கிருஷ்ணாவை கார்த்திக் தாஸ் சுற்றி வரும் போது நமக்கே ஒரு கட்டத்தில் எரிச்சலாகி விடுகிறது. ஆனால் படத்தின் பின் பாதி ஹீரோவின் இமேஜை முற்றிலும் மாற்றி விடுகிறது.

நாயகன் வேடத்தில் நடனம், சண்டை என்று அனைத்து விஷயங்களிலும் பாஸ் மார்க் எடுத்து விடுகிறார் கார்த்திக் தாஸ். 

நாயகி அனு கிருஷ்ணாவும் அப்படியே. ஆரம்பத்தில் கார்த்திக் மீது கோபம் கொண்டு பொங்குவதும், பின்னர் அவர் காதலைக் கண்டு மருகி, அந்தக் காதலுக்காக அப்பாவையே எதிர்த்து நிற்பதிலும் பரிமளிக்கிறார்.

கார்த்திக்கின் ஏழைத் தாயாக வரும் மீரா கிருஷ்ணாவுக்கு அழுத்தமான வேடம். மகன் மீது அன்பைக் கொட்டி வளர்த்திருந்தாலும் அவன் தறி கெட்டுப் போனதும் கடைசி வரை அவன் முகத்தில் விழிக்காமல் இருக்கும் அந்தத் தாயின் வீராப்பு ஆச்சரியப்பட வைக்கிறது.

நாயகியின் அப்பாவாக வரும் தென்னவன் தன் பங்கை சரியாகச் செய்திருக்கிறார்.

ஹீரோவுக்கு எப்போதெல்லாம் தொல்லை வருகிறதோ அப்போது பஞ்சாயத்து பரமேஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் வனிதா விஜயகுமார், புல்லட்டில் வந்து அவரைக் காப்பாற்றி விடுகிறார். ஆனால், அவர் யார், என்ன என்பதற்கான எந்த விளக்கமும் இல்லை.

யோகி பாபு சில காட்சிகள் வந்து சிரிக்க வைக்கிறார். சாம்ஸ், மனோபாலா, லொள்ளு சபா மனோகர், எம்.எஸ்.பாஸ்கர் என படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இருந்தும் குறிப்பிடத்தக்க நகைச்சுவை இல்லை. அவர்களை இன்னும் சரியாகப் பயன்படுத்தி இருக்கலாம்.

ஒளிப்பதிவாளர் விஜய் திருமூலமும், இசை அமைப்பாளர் ஜி.சாயீ தர்ஷனும் படத்தின் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு பயணித்திருக்கிறார்கள்.

இயக்குனர் எஸ்.கே.முரளிதரன், முதல் பாதியை இளைஞர்களுக்காகவும் பின் பாதியை சமுதாயத்துக்காகவும் என்று பிரித்து எழுதி இருக்கிறார்.

இந்தப் படத்துக்கு வந்துவிட்டால் கண்டிப்பாக அவர்களை ஏமாற்றாத படம். ஆனால் ரசிகர்களை தியேட்டருக்குள் வரவழைப்பதற்கான சாத்தியக் கூறுகள் மிகவும் குறைவாக இருக்கின்றன.

தில்லு இருந்தா போராடு – இந்த டீமுக்கும் இதே போராட்டம்தான்..!