November 22, 2024
  • November 22, 2024
Breaking News
May 4, 2019

தேவராட்டம் திரைப்பட விமர்சனம்

By 0 2032 Views

வழக்கமாக ஆக்‌ஷன் படங்கள் ஹீரோவின் சாகசத்திலிருந்து தொடங்கும். ஆனால், இந்தப்படம் வில்லனின் பின்புலத்திலிருந்து தொடங்குகிறது.

வில்லனுக்கு எத்தனை ஆற்றலோ அதைவிட ஹீரோவுக்கு அதிக ஆற்றல் இருக்க வேண்டுமென்பது ஆக்‌ஷன் ஆகம விதி. அதற்கேற்றாற்போல் வில்லன் பெப்ஸி விஜயன் அறிமுகத்திலிருந்து தொடங்கும் கதையில் அவர் டைட்டில் போடுவதற்குள் நான்கைந்து கொலைகள் செய்து முடிக்கிறார்.

அப்படிப்பட்ட வில்லனுக்கு பிள்ளை இல்லை. கரும்புள்ளி செம்புள்ளி குத்திக்கொண்டு கோவில் வாசலில் பிச்சையெடுத்து நேர்த்திக் கடன் நிறைவேற்றி அவருக்கு பிள்ளை பாக்கியம் கிடைக்கிறது. ஊரே அஞ்சி நடுங்கும் ஒரு ஆள் தன்னை ஊருக்கு முன்னால் இவ்வளவு கேவலப்படுத்திக்கொண்டு செய்கிற காரியத்தில் கிடைக்கிற பிள்ளையை எப்படிக் கண்போல் வைத்துப் பாதுகாப்பார்..?

அப்படி வளர்க்கப்பட்ட பிள்ளையின் முன்னால் யாராவது கை உயர்த்தினாலே அவர்களுக்கு பெப்சி விஜயன் தருவது மரண தண்டனைதான் என்றிருக்க, நம்ம ஹீரோ கௌதம் கார்த்திக் அந்தப் பிள்ளையை மதுரை மாநகரின் நடு (!) சென்டரில் வைத்து கொத்துக்கறி போட்டுக் கொல்ல, அவருக்கு வில்லன் தண்டனை தர முடிகிறதா என்பதே கதை.

வில்லனுக்கே இப்படி பில்டப் என்றால் ஹீரோ கௌதம் கார்த்திக்குக்கு..? இருக்கிறது. ஆறு பெண்குழந்தைகள் பிறந்த வீட்டில் ஏழாவதாக வந்து பிறந்த தவப்புதல்வன் அவர். அதனாலேயே ஆறு அக்காமார்களும் அவரை மார்மீதும் தோள் மீதும் வைத்து வளர்த்திருக்கிறார்கள். அவரது அப்பாவும் சண்டியராக இருக்க, அவரையும் கௌதம் கார்த்திக்கின் குழந்தைப் பருவத்திலேயே பெப்ஸி விஜயன் போட்டுத்தள்ளி விடுகிறார்.

அதைச் சொல்லாமலேயே கௌதம் கார்த்திக்கை வளர்த்தாலும் ரத்தமும், விதியும் விட்டுவிடுமா..? கொண்டு வந்து சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்து பகை முடிக்கிறது.

கௌதம் கார்த்திக்கின் வயதுக்கும், வாளிப்புக்கும் வார்த்தெடுத்த வேடம். ஓட்டமென்ன, ஆட்டமென்ன, அடிதடியென்ன..? நிஜமான சண்டைக்காரர் போலவே எண்ண வைக்கின்றன. என்ன ஒன்று, ஜாக்கி சான் முகச்சாயல்தான் அவரை நம்ம பக்கத்து ஆளாக உணரவைக்க முடியவில்லை. ஆனால், அவை எல்லாவற்றையும் தன் அர்ப்பணிப்பால் சரி செய்து விடுகிறார் கௌதம்.

நாயகியாக மஞ்சிமா மோகன். இதில் ‘கொஞ்சமா மோகனா’க கொஞ்சமே கொஞ்சம் வருகிறார். பெரிய வேலையில்லாமல் கௌதம் கார்த்திக்கை காதலித்துவிட்டுப் போகிறார். சட்டத்தை நம்பும் வழக்கறிஞரான அவராவது கௌதமை அமைதியின் பக்கம் கொண்டு வருவாரென்று பார்த்தால், அவர்தான் அதிரடி கிளைமாக்ஸுகே அடித்தளம் அமைத்துக் கொடுக்கிறார்.

பெப்ஸி விஜயனைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது. அந்த முழியும், முறைப்பும்… டெரர்..! கௌதமின் அப்பாவாக வரும் வேல ராமமூர்த்தியை ஆரம்பத்திலேயே போட்டுத்தள்ளிவிடுவதால் அவரது முறைப்பு கொஞ்சம் குறைவாகவே இருக்கிறது.

கௌதமின் அப்பா, அம்மா ஸ்தானத்தில் இருந்து அவரை வளர்க்கும் அக்கா, மாமனான வினோதினியும், போஸ் வெங்கட்டும் நெகிழ வைக்கிறார்கள். படத்தில் சட்டத்துக்கு வேலையே இல்லாததால் ஒரே காட்சியில் வரும் வழக்கறிஞர் ஞானசம்பந்தத்தை அதற்குப்பின் காணவே இல்லை.

வில்லனால் கொடுமைக்குள்ளாகும் பெண்ணும், அவளது பெற்றோரும் மனம் கலங்க வைக்கிறார்கள். அந்த எபிசோட்தான் படத்தின் முதுகெலும்பே என்பதால் அதில் இயக்குநர் முத்தையா முத்திரை பதிக்கிறார்.

காதலி நடத்தும் ரத்த சேகரிப்பு முகாமில் ரத்தம் கொடுக்க கௌதம் கார்த்திக் முடிவெடுப்பதும், அவர் சொல்லி அவரது குடும்பமே வந்து ரத்தம் கொடுப்பதும் லந்தான காட்சி.

பெண்ணினத்துக்கு துரோகம் இழைப்பவர்களைக் கருவறுக்க வேண்டும் என்பதுதான் படம் சொல்லும் செய்தி. நல்ல செய்திதான் என்றாலும் அந்தச் செய்தி இடைச்செருலாக மட்டுமே இருக்கிறது. அதைத் தாண்டிய வன்முறைகள் கதையுடன் ஒட்டாமல் இருக்கிறது.

தவமாய் தவமிருந்து அவமானப்பட்டுக் கிடைத்த வாரிசை நல்லவிதமாக… வன்முறை வாசம் படாமல் வளர்க்க நினைக்காமல் தன் கட்டப்பஞ்சாயத்து தொழிலுக்குள்ளேயே வைத்து வளர்ப்பாரா பெப்ஸி விஜயன்..? லாஜிக்கில்லாத கதையம்சம். அதேபோல், அப்பா வன்முறையால் வீழ்ந்தார் எனும்போது கௌதம் கார்த்திக்கையும் வன்முறையின் பக்கம் விடாமலேயேதானே வளர்த்திருப்பார்கள் அக்காமர்கள். ஆனால், அவர் சட்டம் படித்திருந்தும் தினம் ஒரு சண்டை, பொழுதோரு வம்புமாகவே வளர்ந்திருப்பது ஏப்படி..?

“கத்திக்குத்து எங்களுக்கு காதுகுத்து போல…” என்றொரு குலப்பெருமை பேசும் வசனம் மிரட்டல் விடுக்கிறது. அதேபோல் ஹீரோவின் வீட்டில் நல்லகண்ணு அய்யா, நேதாஜி, ஜீவா படங்களைக் காட்டிவிட்டு “நேதாஜி, நல்லகண்ணு படங்களை மாட்டி வச்சுதான் இவன் இப்படி ஆனான்…” என்று கௌதமின் வன்முறைக்கு விளக்கம் சொல்கிறார்கள். நல்ல கண்ணு அய்யாவுக்கு இப்படி ஒரு இழுக்கா..? முத்தையா… ரொம்ப தப்பையா..!

இப்படி லாஜிக் மீறல்களை மீறி ஒரு ஆக்‌ஷன் படமாக அனல் தெறிக்கிறது படம். குறைகளைக் கண்டுபிடித்துச் சொன்னால்தான் உண்டு என்கிற அளவில் திரைக்கதை ஜெட் வேகத்தில் பறக்கிறது. காட்சிகளில் ரசிக்க வைத்துக் கவனம் ஈர்ப்பதால் சினிமா ரசிகனுக்கு எந்தக் குறையும் வைக்காது.

இசையும், ஒளிப்பதிவும் அரட்டல்..!

தேவராட்டம் – மிரட்டல்..!