April 27, 2024
  • April 27, 2024
Breaking News
April 21, 2023

தெய்வ மச்சான் திரைப்பட விமர்சனம்

By 0 375 Views

படத்தின் தலைப்பைப் பார்த்தாலே தெரிந்து விடும் இது ஒரு காமெடி படம் என்று. ஆனால் வெறும் காமெடியோடு நிற்காமல் அதற்குள் ஒரு அழகான லைனை வைத்திருக்கிறார் இயக்குனர் மார்ட்டின் நிர்மல் குமார்.

நாயகன் விமல். அவருக்கு அடிக்கடி வித்தியாசமான கனவு ஒன்று தோன்றுகிறது. அதில் வெள்ளைக் குதிரையில் வரும் ஒரு சாட்டைக்காரர் விமலின் வாழ்க்கையில் யார் யார் இறக்கப் போகிறார்கள் என்பதை சொல்லி விட்டுப் போகிறார்.

அவர் சொன்னது போலவே அடுத்த நாள் அவர்கள் இறந்து விடுகிறார்கள். அப்படித்தான் விமலின் அம்மாவும் ஊர்க்காரர் ஒருவரும் இறந்து போக, அந்தக் கனவு வராமல் இருக்க வேண்டுமே என்று அச்சத்தில் இருக்கிறார் விமல்.

இந்நிலையில் விமலின் தங்கை அனிதா சம்பத்துக்கு வரன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பெண் பார்க்க வரும்போது அந்த மாப்பிள்ளை குடும்பத்துக்கு ஏதாவது ஒரு பிரச்சினை நேர்ந்து விட திருமணம் தடைப்பட்டுக் கொண்டே போகிறது.

இந்நிலையில் பக்கத்து ஊர் ஜமீன், குடும்பத்துடன் அனிதாவை பெண் பார்த்துவிட்டு அவளை ஜமீனின் தம்பிக்கு திருமணம் செய்து வைக்க நினைக்கிறார். அந்தத் தம்பியோ அரைக் கிழவனாக இருக்க மனம் நொந்து போன அனிதா சம்பத் இனிமேல் தனக்கு திருமணமே வேண்டாம் என்று கூறி விடுகிறார். 

அத்துடன் விமலும், விமலின் நண்பர் பால சரவணனும் சேர்ந்து அந்த ஜமீன் குடும்பத்தை அசிங்கப்படுத்தி அனுப்பிவிட, அனிதா சம்பத்தின் திருமணத்திற்கு அவர்களே வில்லன்கள் ஆகிறார்கள்.

கடைசியாக ஒரு மாப்பிள்ளை பார்க்க விமல் முடிவு எடுக்க, அந்த மாப்பிள்ளையை அனைவருக்கும் பிடித்து போக அவர்களுக்கு எந்த துன்ப சம்பவமும் நேராமல் அனிதாவை திருமணம் செய்ய சம்மதிக்கின்றனர்.

அது முடிந்ததா – ஜமீன் குடும்பம் அவர்களுக்கு எந்தெந்த விதத்தில் தொல்லை கொடுத்தனர் – விமலின் கனவில் வந்த சட்டைக்காரர் அடுத்து யார் இறப்பதைத் தெரிவித்தார்… என்பதை எல்லாம் நகைச்சுவையாக சொல்லி படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர்.

விமலுக்கு வேட்டி கட்டினால் எப்போதும் நன்றாகத்தான் இருக்கும். இது கிராமத்து பின்னணியில் அமைந்த படம் என்பதால் படம் முழுவதும் அவர் வேட்டி சட்டையுடன் அமர்க்களமாக வருகிறார். ‘தபால் கார்த்தி’ என்ற இந்தப் பாத்திரமும் இலகுவாக இருக்க அதைப் போகிற போக்கில் செய்து விட்டுப் போகிறார்.

அவர் தங்கையாக வரும் அனிதா சம்பத்துக்கு திருமணம் ஆகாத நிலையில் கண்களை கசக்கி கொண்டிருக்கும் வேடம். ஆனால் கடைசியாக பார்த்த மாப்பிள்ளை அவருக்கு பிடித்துப் போக அதற்குப்பின் அண்ணனாவது ஒண்ணாவது என்று கல்யாணத்திலேயே அவர் குறியாக இருப்பது அட்டகாசம்.

ஜமீனாக வரும் ஆடுகளம் நரேனும் அவர் தம்பியும் அதகளப்படுத்தி இருக்கிறார்கள். அதிலும் அந்த தம்பி கிளைமாக்சில் விமலைக் கொல்ல நினைக்கும் போது என்ன ஆகிறது என்பதில் ஒரு வெடிச்சிரிப்பு தியேட்டரில் பரவுகிறது.

விமலின் அப்பாவாக வரும் பாண்டியராஜனை இன்னும் அதிகமாக நகைச்சுவைக்கு பயன்படுத்தி இருக்கலாம். அந்த ‘தபால் கார்த்தி’ காமெடி படம் முழுவதும் நன்றாக எடுபட்டிருக்கிறது.

விமலின் அத்தையாக வரும் தீபா சங்கர் வரும் காட்சிகள் எல்லாம் கலகலப்பானவை.

விமல் சரக்கு அடிக்கும் போதெல்லாம் சாட்டைக்காரர் வருவது புது ஐட்டம். அந்த கனவு சாட்டைக்காரராக வேலராமமூர்த்தி வந்து போகிறார்.

விமலின் மாப்பிள்ளையாக வரும் வாட்சன் வீரமணிதான் படத்தின் திரைக்கதையையும் இயக்குனருடன் சேர்ந்து எழுதி இருக்கிறார் என்பது அதிசயமான விஷயம். அவருக்கு நடிக்கவும் வருவதில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்திருக்கிறார்.

கிராமத்துப் பின்னணியில் 90களில் படம் பார்த்த திருப்தியை தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கேமில் ஜே அலெக்ஸ். இசையமைப்பாளர் காட்வின் ஜே கோடனின் இசையும் ஓகே.

தெய்வ மச்சான் – சிரிக்க வச்சான்..!