தமிழகத்தின் நாட்டார் கலை வடிவங்களில் ஒன்றான டப்பாங்குத்து, பாடல்கள் வடிவில் நிறைய திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
ஆனால், அந்தக் கலையை வைத்து முழுமையாக எடுக்கப்பட்ட படம் என்ற பெருமையைப் பெறுகிறது இந்தப் படம்.
மேடையோ, தனியாக ஆடை அலங்காரங்களோ இல்லாமல் இருக்கிற வசதியை வைத்துக்கொண்டு, கதை, பாடல்களை இயற்றி சிறிய இசைக்குழுவுடன் மக்கள் கூட்டத்துக்கு நடுவில் நடத்தப்படும் இதுபோன்ற டப்பாங்குத்து அழிந்து வரும் கலை வடிவங்களில் ஒன்றாக இருக்கிறது.
இதைப் போன்ற கலை வடிவங்களை படமாக ஆக்கும்போது பெரும்பாலும் சம்பந்தப்பட்ட கலைஞர்கள் படும் இன்னல்களைத்தான் கூறுவது வழக்கமாக இருந்து வருகிறது. அதை மாற்றி அவர்களின் வாழ்க்கை இன்னல்களுக்கு இடையே மனிதர்களின் சுயநலமும், நயவஞ்சகமும் எப்படி பின்னிப்பிணைந்து இடையோடுகிறது என்று ஒரு நெஞ்சைத் தொடும் கதையை சொல்ல முயற்சித்து இருக்கிறார் இயக்குனர் முத்து வீரா.
குறிப்பாக டப்பாங்குத்தில் நடனமாட வரும் பெண்களின் நிலை பரிதாபகரமானது. பொதுவில் வைத்து அவர்கள் ஆடையில் பணத்தைக் குத்தும் வழக்கம் ஒருபுறம் இருக்க, நயவஞ்சக இடைத்தரகர்கள் மூலம் அந்தப் பெண்களின் வாழ்க்கை திக்கு தெரியாமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது.
இந்த விஷயத்தை விரசமாகவோ, விவாதப் பொருளாகவோ ஆக்காமல், உள்ளது உள்ளபடி அவர்களின் கண்ணீரையும் பதிவு செய்து இருக்கிறார் இயக்குனர்.
இதற்கு மிகவும் பக்கபலமாக இருக்கிறது கதை, திரைக்கதை, வசனம் எழுதி இருக்கும் எஸ்.டி. குணசேகரனின் பங்களிப்பு.
நாயகனாக வரும் சங்கரபாண்டியன் சொந்தமாக ஒரு டப்பாங்குத்துக் குழுவை வைத்துக்கொண்டு ஊர் ஊராகச் சென்று நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். தன் தந்தையைப் போலவே மகனும் கூத்துக் கலைஞனாக இருப்பதில் அவரது அம்மாவுக்கு பெருமையாக இருக்கிறது
அவர் குழுவில் நடனமாட ஆசைப்பட்டு இணைகிறார் நாயகி தீப்திராஜ். ஆனால், தீப்தியின் மாமா ஆண்ட்ரூஸ், அதில் விருப்பமில்லாமல் இருக்கிறார்.
தன் தாய் யார் என்றே தெரியாமல் வளரும் தீப்தியின் பிறப்பு ரகசியம் ஆண்ட்ரூசுக்கு மட்டுமே தெரியும் என்கிற நிலைமையில் தீப்தியை வைத்துப் பல கோடிகளை அடைய திட்டமிடுகிறார் அவர்.
தீப்தியைப் போலவே சங்கர பாண்டியன் குழுவில் நடனமாடும் இன்னொரு பெண்ணான துர்காவுக்கும் தன் தாய் பற்றிய ரகசியம் என்னவென்று தெரியவில்லை.
சங்கரபாண்டியனைக் காதலிக்கும் தீப்தி, தாயைப் பற்றிய ரகசியம் அவிழ்ந்து தன் தாய் உத்தமிதான் என்று தெரிந்து தன் மேல் உள்ள பழியைத் துடைத்துக் கொண்டு திருமணம் செய்ய நினைக்கிறார்.
அது தீப்தியால் முடிந்ததா… இதற்கிடையில் உள்ளே போகும் ஆண்ட்ரூஸ் தனது திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டாரா… என்பதெல்லாம் மீதிக் கதை.
தொலைக்காட்சித் தொடர்கள் மூலம் அறியப்பட்ட சங்கர பாண்டியன், இதில் அப்பட்டமான டப்பாங்குத்து கலைஞராகவே தெரிகிறார். இவரால் நடனமாட முடியுமா என்ற கேள்வி நமக்கு இருந்தாலும் ஒவ்வொரு நடனத்தையும் அதற்குரிய உடல் மொழியில் ஆடித் தீர்த்து இருக்கிறார்.
அதேபோலத்தான் தீப்தியும். பார்வைக்கு மேல் தட்டுப் பெண்ணைப் போல் கொழுக் மொழுக் என்று இருக்கும் அவர் பாத்திரப்படி மிகப் பொருத்தமாக இருக்கிறார். அவரது ஆட்டம் தான் படத்தைத் தொய்வில்லாமல் நடத்திச் செல்லும் காரணியாக இருக்கிறது.
கடைசிக் காட்சியில் அளப்பரிய தியாகம் ஒன்றைச் செய்து நெகிழ வைத்து உயர்ந்து விடுகிறார் தீப்தி
அவருக்கு ஈடாக அழகிலும் நடனத்திலும் பெயர் வாங்கி விடுகிறார் இன்னொரு நடனக்காரியாக வரும் துர்கா.
டப்பாங்குத்துக்கு கோமாளி கண்டிப்பாக வேண்டும் என்ற அளவையும் மிஞ்சி இரண்டாவது நாயகனாகவே வருகிறார் காதல் சுகுமார். அவரும் ஆடி அசத்தியிருப்பது ஆச்சரியமான விஷயம்.
படம் முழுவதும் வியாபித்திருப்பது வில்லன் ஆண்ட்ரூஸ் தான். படம் தொடங்குவதும் அவரிலிருந்துதான். முடிவதும் அவரின் தில்லாலங்கடி வேலை முடிவுக்கு வரும்போதுதான். பார்வைக்குப் பழம்பெரும் நடிகர் கே. பாலாஜி போல் தோற்றமளிக்கும் அவர், சளைக்காமல் வில்லத்தனம் செய்து இருக்கிறார்.
இவர்களுடன் கோடீஸ்வரர் பூபதி, நாயகனின் அம்மா, அவரது தோழி ஜோதி மணியாக வரும் திருநங்கை, நாயகியின் வளர்ப்புத் தாய் என்று பிரவேடங்களில் நடித்திருப்பவர்களும் தங்கள் பங்கைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் சரவணனுக்குதான் முழு வேலையே. இரண்டு வசனம் வந்தால் இரண்டு பாடல்கள் என்ற அளவில் அதுவும் முழுக்க முழுக்க டப்பாங்குத்து இசையிலேயே அமைத்திருப்பது பெரிய விஷயம்.
அதிலும் தமிழ்நாட்டில் ஓடும் 45 ஆறுகளைக் கொண்டு வரும் ஒரு பாடலில் அத்தனை ஆறுகளுக்கும் சென்று படமாக்கி இருப்பதில் பாடலாசிரியர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், இயக்குனர் என அத்தனை பேரையும் பாராட்டியாக வேண்டும்.
படத்தின் ஹைலைட்டே இந்தப் பாடல் தான். இதைத் தவிர முழுக்க உடுக்கையை மட்டுமே வைத்து ஒரு பாடலையும் இசைத்திருக்கிறார் சரவணன்.
ஒரு படம் பார்க்கிறோம் என்ற நினைவே வராமல் முழுக்க டப்பாங்குத்து பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தி இருப்பதில் பெரும்பங்கு ராஜா கே.பக்தவச்சலத்தின் ஒளிப்பதிவுக்குதான் உள்ளது.
படம் முழுவதும் பாடலும், நடனமும்தான் என்கிற அளவில் தீனா மாஸ்டர் நடனங்களுக்கும் பெரும்பங்கு இருக்கிறது.
தொடர்ந்து டப்பாங்குத்து பாடல்களே வந்து கொண்டிருப்பது சற்று அலுப்பு தட்ட வைத்தாலும், பின் பாதிக்கதை ரசிக்க வைக்கும்படி இருக்கிறது.
பட்ஜெட் பற்றாக்குறையும் படத்தில் தெரிகிறது. என்றாலும் அழிந்து வரும் ஒரு கலையை முன்னிலைப்படுத்தி எடுத்த இயக்குனரையும் தயாரிப்பாளரையும் விருதுகள் கொடுத்துப் பாராட்ட வேண்டும்.
டப்பாங்குத்து – தப்பாத குத்து..!
– வேணுஜி