அருள்நிதி நடிக்க ஒத்துக் கொள்ளும் படங்கள் என்றாலே அது பட்ஜெட் மீறாமல் பதைபதைப்புக்கும் குறைவில்லாமல் ஒரு மினிமம் கேரண்டி படமாக இருக்கும் என்பது நமக்குத் தெரிந்த விஷயம்தான். அந்த வரிசையிலேயே அமைகிறது இந்த டி பிளாக் படமும்.
வனப்பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் ஒரு கல்லூரியில் படிக்கிறார்கள் அருள்நிதியும், நாயகி அவந்திகா மிஸ்ராவும். அதே கல்லூரியைச் சேர்ந்த பெண்கள் ஹாஸ்டலில் டி பிளாக் பகுதியில் ஒவ்வொரு மாணவியாக மர்மமான முறையில் இறந்து கொண்டிருக்க, அதன் உண்மைத்தன்மை என்ன என்று அருள்நிதி கண்டுபிடிப்பது தான் கதை.
அந்த லேடிஸ் ஹாஸ்டலில் ஆரம்பிக்கும் மர்மம் இது ஒரு ஆவி கதையாக இருக்க கூடுமோ என்கிற ஐயத்தை ஏற்படுத்துவது நிஜம். ஆனால் ஒரு கட்டத்தில் பயமுறுத்தும் உருவம் ஒரு மனிதனுடையதாக இருக்க இது வேறு பிரச்சனை என்பது தெரிய வருகிறது.
இதுபோன்ற கதைகளில் கொலையாளி யார் என்கிற சஸ்பென்ஸ் உடைந்து விட்டாலே அதற்குப் பிறகு படத்தில் சுவாரஸ்யம் குறைந்து போகும். ஆனால் இடைவேளையில் கொலையாளியின் முகம் நமக்கு தெரிந்துவிட… இருந்தாலும் இடைவேளைக்கு பின்னும் அந்த கதையின் சஸ்பென்ஸ் குறையாமல் கொண்டு சென்று இருப்பது இயக்குனர் ‘ எரும சாணி விஜய்’யின் திறமைக்கு சான்று.
அவரும் ஒரு கேரக்டர் ஏற்று அருள்நிதியின் நண்பனாக வந்து போகும் போது ” இவர்தானா இயக்குனர்..?” என்று நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
அருள்நிதிக்கு இதில் மென்மையான கல்லூரி மாணவன் வேடம். அதை நியாயப்படுத்த உடல் எடை குறைத்து, முகத்தில் மினுமினுப்பு கூட்டி அந்த வயதுக்கு உரிய பக்குவத்துடன் நடித்திருப்பது சிறப்பு.
அவரது சக மாணவியாகவும் காதலியாகவும் நடித்திருக்கும் அவந்திகா மிஸ்ராவுக்கு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பெரிய வாய்ப்புகள் இல்லை என்றாலும் நாயகி இடத்தை அவர் நேர் செய்கிறார். அவரைவிட அடுத்தடுத்து இறக்கும் பெண்கள் முகம் தெரியாவிட்டாலும் அதிகமாக ஸ்கோர் செய்கிறார்கள்.
அருள்நிதியின் நண்பன் ஆதித்யா கதிர், பிரின்சிபால் தலைவாசல் விஜய், வாட்ச்மேன் ரமேஷ் கண்ணா என அனைவரும் தங்கள் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
மகா முரட்டு வில்லனாக நடித்திருக்கும் சரண்தீப் தோற்றத்திலேயே மிரட்டுகிறார்.
கல்லூரி உரிமையாளராக வரும் கரு.பழனியப்பன், சாமியார்களை கலாய்த்து கைதட்டல் பெறுகிறார்.
அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவு, இசையமைப்பாளர் ரோன் எத்தன் யோஹனின் பாடல்கள் மற்றும் கெளசிக் கிரிஷின் பின்னணி இசை படத்தின் தகுதிக்கு நியாயம் சேர்த்திருக்கிறது.
டி பிளாக் – பி அண்டு சி ட்ரீட்..!