சமீப கால வெளியீடுகளில் மூன்றாவது வாரமாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘ஓ மை கடவுளே’. அதற்குக் காரணம் படம் நன்றாக இருந்தது மட்டுமன்றி அதற்கான புரமோஷன் அற்புதமாக அமைந்ததும்தான்.
அசோக் செல்வன் ஹீரோவாகவும், ரித்திகா சிங் மற்றும் வாணி போஜன் கதாநாயகிகளாக நடித்திருந்த படம் நேர்த்தியான முறையில் யார் மனதும் புண்படாதவாறு தயாரிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், அவர்களை அறியாமல் ஒருவரின் மனது புண்பட்டிருக்கிறது.
படத்தில் வாணிபோஜன் பயன்படுத்தும் எண்ணாக ஒரு எண் சொல்லப்படுகிறது. உண்மையில் அது சென்னையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் பூபாலன் என்பவரின் எண்ணாம்.
படம் பார்த்து விட்டு அவருக்கு தினமும் போன் செய்து “வாணி போஜன் இல்லையா..?” என்று போன் கால்கள் வந்தவண்ணம் இருக்க, நொந்து போயிருக்கிறார் அவர். ரியல் எஸ்டேட் தொழிலுக்கு போந்தான் மூலம் என்றிருக்க, வருகிற போன் எல்லாம் வாணி போஜனைக் கேட்டு வந்து கொண்டிருக்க, நேரே இன்று போலீஸ் கமிஷனர் அலுவலகம் சென்று படத்தில் தன் எண்ணை நீக்கக் கேட்டு புகார் ஒன்றை அளித்திருக்கிறார்.
அந்த எண்ணை நீக்கம் செய்வார்களா படக்குழு என்று பார்க்கலாம். எப்படியோ அவரால் படத்துக்கும், படத்தால் அவருக்கும் பப்ளிசிட்டிதான்..!