September 20, 2024
  • September 20, 2024
Breaking News
March 19, 2018

அமேசான் படங்களை வாங்குவதில் மாற்றம் வருகிறது

By 0 1522 Views

அவ்வப்போது ஏற்படும் அறிவியல் முன்னேற்றங்கள் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களும் திரைப்படத் துறைக்கு ஒரு வகையில் லாபமாக இருந்து வருகின்றன எனலாம். அந்த வகையில் படங்களுக்கு இருந்து வந்த வழக்கமான ஏரியா விற்பனைகளைத் தாண்டி இடையே வந்த சேனல்களில் ஒளிபரப்பு உரிமை ஒரு நல்ல வருமானத்தைத் தந்து வந்தது.

இப்போதையை நிலையில் எல்லா சேனல்களும் எல்லாப் படங்களையும் வாங்கும் நிலை மாறி நிறைய கட்டுப்பாடுகள் வந்துவிட, அந்த வருமானம் அடைபட்டுப் போகும் நிலையில் புதிதாக உள்ளே வந்த ‘நெட்ப்ளிக்ஸ்’, அமேசான்’ நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் படங்களை நேரடியாகப் பார்வையாளர்களின் வீடுகளுக்குச் சென்று சேர்க்கும் வேலைகளைச் செய்து வருவது தொடங்கியிருக்கிறது. இதுவும் தயாரிப்பாளர்களுக்கு இன்னொரு லாபத்தைத் தரும் புதிய வழியாகி இருக்கிறது.

ஆனால், இதுவும் கூட எல்லா தயாரிப்பாளர்களின் படங்களையும் இந்த நிறுவனங்கள் பரிசீலிக்காமல் ஒருசில தயாரிப்பாளர்களின் படங்களை மட்டுமே ஒளிபரப்புவதாகவும், மற்றவர்களைக் கண்டுகொள்வதே இல்லை என்றும் ஒரு குற்றச்சாட்டு இருந்து வந்தது.

இதுபற்றி விசாரித்தபோது, முதலில் அந்த நிறுவனங்களிடம் வியாபாரப் பேச்சு வார்த்தை நடத்தச் சென்ற தயாரிப்பாளர்களே தங்கள் நிறுவனப் படங்களை முன்னிறுத்துவதுடன், அமேசான் வாங்கும் பிற தயாரிப்பாளர்களின் படங்களுக்கு மறைமுகமான ஏஜண்டுகள் போல் செயல்பட்டார்களாம். யார் அமேசானை அணுக வேண்டும் என்றாலும் இவர்கள் மூலமே அணுக வேண்டிய நிலை இருந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால், தற்போதைய நிலவரப்படி தமிழ்ப்படங்களை வாங்கும் அமேசான் நிறுவனத்திடம் தங்கள் படங்களை வாங்கிக்கொள்ளக் கேட்டு அவர்களிடம் நேரடியாகத் தொடர்பு கொண்டு நிலைமைகளை வேறு சில தயாரிப்பாளர்கள் விளக்கிச் சொல்ல அமேசானும் அவர்கள் கோரிக்கைகளைப் பரிசீலிப்பதாகக் கூறியிருக்கிறதாம். தமிழ்ப்பட வியாபாரத்துக்காக நியமிக்கப்பட்டிருந்த அதிகாரியையும் அமேசான் மாற்றியிருப்பதாகக் கேள்வி.

இனி அமேசானின் விதிமுறைகளுக்குட்பட்டு எந்த ஒரு தயாரிப்பாளரும் அவர்களிடம் நேரடியாகப் பட ஒளிபரப்பு உரிமையைக் கொடுத்து பலன் பெற முடியும் என்று நம்பப்படுகிறது. இது உண்மைதானா என்பதை  இனி வரும் அனுபவங்கள்தான் உறுதிப்படுத்த வேண்டும்.

திரையுலக வேலைநிறுத்தம் நல்லமுறையில் முடிவுக்கு வந்து இப்படியான வியாபாரக் கதவுகளும் வெளிப்படையாகத் திறந்தால் தயாரிப்பாளர்களுக்கு நல்லதுதான்..!