April 29, 2024
  • April 29, 2024
Breaking News
September 8, 2022

கேப்டன் திரைப்பட விமர்சனம்

By 0 335 Views

இதுவரை வந்திருக்கும் ராணுவம் சம்பந்தப்பட்ட படங்கள் பெரும்பாலும் எதிரி நாட்டிடம் இருந்து நம் நாட்டைக் காப்பாற்றுவதாக இருக்கும்.

ஆனால் இந்தப் படத்தில் உள்நாட்டுக்குள்ளேயே அச்சுறுத்தலுக்கு ஆளாக்கும் அசாதாரண சூழ்நிலையை ராணுவம் சம்பந்தப்பட்டு தீர்க்கும் கதையை சொல்லி இருக்கிறார் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன்.

தமிழ் படங்களில் ஹாலிவுட் படங்களைப் போன்ற கதையம்சம் கொண்ட ஜாம்பி, விண்வெளி சாகசம் உள்ளிட்ட கதைகளைத் தந்த அவர் இந்தப் படத்தில் ஏலியன் போன்ற வினோதமான மிருகம் ஒன்றை நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.

சிக்கிம் பகுதியில் கண்டறியப்படும் அந்த மிருகம் எப்படி உண்டானது, அதன் பின்னணி என்ன என்பது பற்றி எல்லாம் ஆராய்வதற்காக பாதுகாப்பு மந்திரி சுரேஷ் மேனன், அறிவியலாளர் சிம்ரன் தலைமையில் ஒரு குழுவை அனுப்பி வைக்க அவரோ ராணுவத்தின் துணை கொண்டு மட்டுமே அந்த ஆராய்ச்சியை வெற்றிகரமாக முடிக்க முடியும் என்று கூறுகிறார்.

ராணுவம் சம்பந்தப்பட்டு விட்டால் அது வெளிநாடுகளுக்கு தெரிந்து வேறு பிரச்சனைகளை உருவாக்கும் என்பதால் அதிரடி பயிற்சி பெற்ற ஒரே ஒரு ராணுவ குழுவை மட்டும் அந்த பணிக்கு அனுப்புகிறார் சுரேஷ் மேனன்.

ஏற்கனவே அந்தப் பகுதியில் நிலவும் அசாதாரணமான சூழ்நிலையில் அங்கு சென்ற ஒரு ராணுவ குழு பலியாகிறது. அதை ஆராய, நாயகன் ஆர்யா தலைமையில் இன்னொரு ராணுவ குழு அங்கே சென்றதில், ராணுவ வீரரான ஹரிஷ் உத்தமனை பறி கொடுக்க நேர, அதற்குப் பழிதீர்க்கவும், நண்பன் ஹரீஷ் உத்தமன் மீது ஏற்பட்டுவிட்ட களங்கத்தை போக்கி அவர் உண்மையில் ‘ உத்தமன் ‘தான் என்று உலகிற்கு உணர்த்தவும் இந்தப் பணியை மேற்கொள்கிறார் ஆர்யா.

அங்கே அவர்கள் சந்திக்கும் சவால்களும் அதை எதிர்கொண்டு தீர்க்க முடிகிறதா என்பதையும் ஒரு சயின்ஸ் பிக்ஷன் திரில்லராக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

ஆர்யா, ஹரீஷ் உத்தமன், பரத், அம்புலி கோகுல், காவியா ஷெட்டி என அந்த ராணுவ ஐவர் குழுவின் உடல்வாகும் உற்சாகமும் முதல் காட்சியிலேயே நம்மையும் பற்றிக் கொள்கிறது. அவர்களின் வீரமும் தீரமும் நிஜ ராணுவ நடவடிக்கைகள் போலவே அமைந்திருப்பது படத்தின் பலம்.

சிக்கிம் எபிசோட் வரும் வரை ராணுவ வீரர்களின் பணி எவ்வாறு இருக்கும் என்பதற்கான டெமோவாக நகரும் படமும் படமாக்கிய விதமும் உற்சாகமாகவே கடக்கிறது. மிருகம் உள்ளே வந்ததும்தான் கதை நேர்கோட்டுக்கு வருகிறது.

இந்தப் படத்தில் நாயகனாக நடிக்க ஒத்துக் கொண்டது மட்டுமல்லாமல் படத்தை தயாரிக்கவும் முன் வந்த ஆர்யாவை பாராட்ட வேண்டும். ஏற்கனவே நல்ல உடற்கட்டுடன் இருக்கும் அவர் இதில் ராணுவ வீரராக மிடுக்குடன் வருகிறார். 

காதலே இல்லாவிட்டால் படம் போர் அடித்து விடுமோ என்ற சந்தேகம் பற்றிக்கொள்ள அவர் ஐஸ்வர்யா லட்சுமியை சந்திக்கும் காட்சிகளை உள்ளே வைத்திருக்கிறார் இயக்குனர். அந்த காட்சிகள் இந்த ஆக்ஷன் ரெகுலர் கதைக்கு பெரிய பலம் சேர்க்கவில்லை.

ஆர்யாவும் அந்த வினோத மிருகமுமே படத்தை நிறைத்து விட, உடன் வருபவர்களுக்கு நடிப்பதில் பெரிய வேலை இல்லை. காட்சிக்கு அழகு சேர்ப்பதோடு அவர்கள் வேலை முடிந்து விடுகிறது.

வழக்கமாக இதைப் போன்ற ஹாலிவுட் படங்களில் எந்த மிருகம் தாக்குகிறதோ அந்த மிருகத்தை கிளைமாக்ஸ் வரும்போதுதான் காட்டுவார்கள். அதுவரை அந்த மிருகம் எப்படி இருக்கும் என்ற பதை பதைப்பிலேயே நாம் படத்தைப் பார்த்துக் கொண்டிருப்போம். ஆனால் இந்தப் படத்தில் மிருகத்தை முதலிலேயே காட்டு விடுவதால் அந்த மிருகத்தின் மேல் நமக்கு எந்த விதமான பயமும் ஏற்படவில்லை.

ஆனால் அந்த மிருகத்துக்கு மூளைப் பகுதி இல்லாததும், ரத்த ஓட்டம் இல்லை என்பதும் ஒரு உத்தரவுக்கு கீழ்ப்படிந்து அவை ரேடியோ அலைகள் மூலம் இயங்குவதையும் சொல்லி இருப்பதில் அந்த மிருகத்துக்கு தனித்தன்மை வந்துவிடுகிறது.

அதன் மூளையாக இன்னொரு ராட்சத மிருகம் செயல்படுவதைச் சொல்லி அதை அழிக்க ஆர்யா டீம் பயணப்படுவதும் அந்த கிளைமாக்சும் விறுவிறுப்பு.

அதில் சுற்றுச்சூழல் சீர்கெடும் செய்தியையும் உள்ளே வைத்திருப்பது சிறப்பு.

எஸ்.யுவாவின் ஒளிப்பதிவில் எது நேரடிக் காட்சி, எது சிஜி காட்சி என்றே கண்டுபிடிக்க முடியாத அளவில் தொழில்நுட்பம் நேர்த்தியாக கையாளப்பட்டுள்ளது. 

இசையமைப்பாளர் இமானுக்கும் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜனுக்கும் என்ன புரிதல் இருக்கிறதோ தெரியவில்லை. இவர்கள் இணையும் ஒவ்வொரு படத்திலும் பாடல்கள் வித்தியாசமாக ஒலிக்கின்றன. இந்த படத்திலும் பாடல்கள் மட்டுமல்லாது பின்னணி இசையும் அப்படியே.

வினோத மிருகத்தின் ஒலிகளை பதிவு செய்திருப்பதும் சரி, ஒட்டுமொத்த படத்தின் ஒலிப்பதிவு மற்றும் பின்னணி இசை எல்லாவற்றையும் கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் ஒரு ஹாலிவுட் படம் தரும் அனுபவத்தையே தருகிறது.

அதே நேர்த்தியை ஸ்கிரிப்டிலும் கொண்டு வந்திருந்தால் ஒட்டுமொத்த படமும் ஹாலிவுட் தரத்தில் இருந்திருக்கும். 

கேப்டன் – நவீன தொழில்நுட்ப அணிவகுப்பு..!