சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டு இறந்த சின்னத்திரை நடிகை சித்ரா நடித்திருக்கும் முதல் படம் என்பதால் இந்தப் படத்திற்கு தனி கவனம் கிடைத்திருக்கிறது.
சென்னை கால் சென்டரில் பணியாற்றுகிறார் சித்ரா. வேலையை இழக்கும் அபாயம் ஒருபுறம், போனில் மிரட்டும் அனாமதேய குரல் இன்னொருபுறம் என்று ஏகப்பட்ட பதட்டத்தில் இருக்கிறார்.
அவருடன் பணியாற்றும் தேவதர்ஷினி அவருடன் பேச்சு கொடுக்கையில் சிறிய வயதில் தனக்கு நடந்த பாலியல் கொடுமைகள் பற்றி சொல்கிறார் சித்ரா.
இந்த ஒரு நாள் நிகழ்வுக்கு இடையில் பல இடங்களில் ஒரு நபர் யாருடைய கட்டளைப்படியோ சில நபர்களை தீர்த்துக் கட்டிக் கொண்டிருக்கிறார்.
இந்த எல்லா பிரச்சனகளுக்கும் தொடர்பு இருக்கிறதா அந்த பிரச்சனைகள் எப்படி தீர்க்கப்பட்டன என்பதே படத்தின் கதை.
நாயகியாக நடித்திருக்கும் விஜே சித்ராவைப் பார்க்கும்போதெல்லாம் பாவமாக இருக்கிறது. அத்துடன் அவருக்காகவே எழுதப்பட்ட வசனங்கள் போல் பிரச்சினைகளையே அவர் பேசிக் கொண்டிருப்பதும் நமக்கு நெகிழ்வை ஏற்படுத்துகிறது. தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். நடிப்பில் நிறைய அனுபவம் இருப்பதால் குறை இல்லாமல் நடித்திருக்கிறார் சித்ரா.
உடன் நடித்து இருப்பவர்களில் தேவதர்ஷினி மற்றும் சித்ராவின் பெற்றோர் தவிர மற்றவர்களுக்கு அதிக பங்கில்லை.
பெண்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மையப்படுத்தி எடுத்து இருப்பதாலும், அவர்கள் தங்களுக்கு எதிரான சவாலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற தைரியத்தை ஏற்படுத்தி இருப்பதாலும் இந்த முயற்சியைப் பாராட்டலாம்.
ஆனால் இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் இயக்குனர் சபரீஸ் எம் திரைக்கதையை நறுக்கென்று சொல்வதில் தவறி இருக்கிறார். அதுவும் முதல் பாதியில் நாடகம் போன்று எல்லோரும் ஒரே இடத்தில் உட்கார்ந்து வளவளவென்று பேசிக் கொண்டே இருக்கிறார்கள்.
தமீன் அன்சாரியின் இசை பரவாயில்லை. எடிட்டரின் கையைக் கட்டிப் போடாமல் இருந்திருந்தால் தெளிவான ஒரு படம் கிடைத்திருக்கும்.
கொலைகளை எப்படி தடயம் இல்லாமல் செய்யலாம் என்று இப்படத்தில் சொல்லியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சிறிய வயதில் தனக்கு பாலியல் தொல்லைகள் தந்த தன் மாமாவை மட்டும் சித்ரா மன்னித்து விடுவது ஏன் என்று தெரியவில்லை.
முதல்பாதியில் சித்ரா தொடர்பு கொள்ளும் அத்தனை நபர்களும் பல பிரச்சினைகளில் சிக்கி கொண்டிருப்பதும் இரண்டாம் பாதியில் அவர்களுடைய பிரச்சனைகள் சரியான முறையில் தீர்க்கப்பட்டு இருப்பதும் நமக்கு ஆறுதலை தருவதுடன் நேர்மறை எண்ணங்களை ஏற்படுத்துகின்றன.
கால்ஸ் – சித்ராவுக்கு அர்ப்பணம்..!