April 26, 2024
  • April 26, 2024
Breaking News
January 26, 2023

அயலி வெப் தொடர் (Zee 5) விமர்சனம்

By 0 339 Views

தமிழில் வெப் தொடர்கள் வர துவங்கியதும் அவற்றில் தனக்கென தனி இடத்தை பெற்று… சொல்லப் போனால் முதல் இடத்தில் இருப்பவர்கள் ஜீ5 (Zee 5) தளம்தான்.

ஜீ 5 தயாரிப்பில் இப்போது ஒளிபரப்பாகத் தொடங்கி இருக்கும் தொடர்தான் ‘அயலி.

பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் பெண்களின் முன்னேற்றம் குறித்தும் பல படங்கள் வந்திருந்தாலும் அதை இன்னொரு முறை உரக்கச் சொல்லி இருக்கும் தொடர் இது.

1990- ல் புதுக்கோட்டை மாவட்டத்தில் வீரப்பண்ணை என்ற கிராமத்தில் நடக்கும் கதையாக இது சொல்லப்பட்டிருக்கிறது. அந்த கிராமத்து மக்கள் வழி வழியாக பெண்கள் பூப்பெய்ததும் அவர்களின் படிப்பை நிறுத்திவிட்டு உடனடியாக திருமணம் செய்து கொடுக்கும் வழக்கம்தான் அது. 

அப்படி இருந்தால்தான் பெண்கள் ஒழுக்கமாக இருப்பார்கள் – கிராமத்தின் பண்பாடும் கலாச்சாரமும் காக்கப்படும் என்பது வழி வழியாக வந்தது அவர்களின் நம்பிக்கை. பத்தாவது வரை வகுப்பு இருக்கக்கூடிய ஒரு பள்ளி மட்டுமே அங்கு இருக்க, அந்த பத்தாவது வகுப்பைக் கூட தொட முடியாமல் பெண்கள் பருவத்துக்கு வந்து திருமண கொட்டடியில் அடைக்கப்படுகிறார்கள்.

அந்த கிராமத்தில் அருவி மதனுக்கும் அனுமோளுக்கும் மகளாக நடிக்கும் அபிநயஸ்ரீ இந்த கொடுமையில் இருந்து மீண்டு  மருத்துவராக நினைக்கிறாள். பத்தாவது வகுப்பில் முதலிடம் பிடித்து விட வேண்டும் என்று அபிநயஸ்ரீயும் அவளது தோழி லவ்லினும் ஆசைப்பட்டு அதற்கான கரும்பலகையில் தங்கள் பெயரை எழுதிப் பார்த்து மகிழ்கிறார்கள்.

ஆனால் ஒன்பதாவது படிக்கும்போது லவ்லின் பருவம் எய்துவிட அவளை பள்ளிக்கு அனுப்பாமல் திருமணமும் பேசி முடித்து திருமண பந்தத்துக்குள் தள்ளி படாதபாடு படுத்துவதை கண்ணெதிரே பார்க்கும் அபிநயஸ்ரீ மனம் உடைகிறார்.

இந்தக் கொடுமையில் இருந்து எப்படி தப்பி தான் மருத்துவராக போகிறோம் என்ற கேள்வியுடனையே இருக்கையில் அவரும் பருவம் எய்திவிட என்ன ஆனது… அபினய ஶ்ரீயின் கனவு நனவானதா, தகர்ந்ததா என்பதை 8 எபிசோடுகளாகக் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் முத்துக்குமார்.

அபினய ஶ்ரீ பருவம் எய்துவதில் இருந்து சூடு பிடிக்கும் திரைக்கதை அடுத்து என்ன, அடுத்து என்ன என்கிற பரபரப்புடன் நகர்வது ஒரு சஸ்பென்ஸ் திரில்லருக்குரிய வேகத்தைக் கொடுக்கிறது.

அதற்கு ஏதுவாக அமைந்திருக்கிறது வீணை மைந்தன், சச்சின், இயக்குனர் முத்துக்குமார் சேர்ந்து எழுதி இருக்கும் அற்புதமான திரைக்கதை. அதற்கு பொருத்தமான வசனங்களையும் எழுதி இருக்கிறார் வீணை மைந்தன்.

பக்தி மார்க்கமாக செல்லும் கதை ஒரு கட்டத்தில் பகுத்தறிவுப் பாதைக்கு திரும்புவது அற்புதம். தாங்கள் நம்பும் தெய்வமும் கூட தங்களைப் போலவே பாதிக்கப்பட்ட பெண்தான் என்பதை கிராமத்து பெண்கள் உணரும் கட்டமும் நன்று.

படத்தில் முதன்மை பாத்திரம் ஏற்றி இருக்கும் அபிநயஸ்ரீ மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அந்த வயதுக்கு உரிய துறு துறுப்பும் செழிப்பும் நிறைந்து இருந்தாலும் அவ்வப்போது தன் எதிர்காலத்தை குறித்து கவலைப்படுவதும் தோழிகளுக்கு நேர்மறை எண்ணத்தை கொடுப்பது மட்டுமல்லாமல் பழமையில் ஊறிக் கிடக்கும் ஒவ்வொரு பெண்ணையும் தனித்தனியாக திருத்துவது அழகு.

அவர் பருவமடைவது வரை திரைக்கதையை ஆழமாக்கி கொண்டு செல்லும் வேலையை ஏற்றிருக்கிறார் லவ்லின். பெண் இனத்தின் அத்தனை சோகங்களையும் குறிப்பாக கலாச்சாரம் என்ற பெயரில் பெண்கள் எவ்வளவு அடக்கப்பட்டும், அடிமைப்படுத்தப்பட்டும் இருக்கிறார்கள் என்பதைத் தன் பாத்தரத்தின் வாயிலாக அதி அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார் லவ்லின்.

அம்மா விஜி சந்திரசேகரின் நடிப்புக்கு சற்றும் குறைவில்லாமல் நடித்திருக்கும் லவ்லின் இதுபோன்ற பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தால் கூடிய விரைவில் ஒரு தேசிய விருது வாங்குவது சாத்தியமே.

அபிநயஸ்ரீயின் அம்மா குருவம்மாளாக நடித்திருக்கும் அனுமோள் இயல்பில் ஒரு மலையாளியாக இருந்தாலும் உச்சரிப்பில் கொஞ்சம் கூட அதன் சாயல் தெரியாமல் ஒரு கிராமத்து தமிழச்சியாகவே வாழ்ந்திருப்பது பாராட்டுக்குரியது. ஊர் பழக்க வழக்கங்களில் இருந்து மீள முடியாமலும் அதே நேரத்தில் மகள் கேட்கும் நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமலும் இருபக்கம் அடி வாங்கும் தவில் போல தவிக்கும் அனுமோளின் பாத்திரம் மட்டுமல்லாமல் அவரது நடிப்பும் மிகவும் சிறப்பாக அமைந்திருக்கிறது.

அப்பா தவசியாக நடித்திருக்கும் அருவி மதனும் அப்படியே. மகள் மீதான பாசத்தை கொட்டுவதிலும் அதே நேரம் ஊர் கட்டுப்பாடு என்று வந்துவிட்டால் அதற்கு தலை வணங்கும் பக்குவத்திலுமாக துல்லியமாக செய்திருக்கும் இவரை தமிழ் சினிமா இன்னமும் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது.

சமீபத்திய வெப் தொடர்களில் கலக்கும் லிங்கா இதில் வில்லன் சத்திவேலாக வந்து அமைதியான வில்லத்தனத்தில் அசத்துகிறார். அதற்கு துணை புரிகின்றன அவரது வித்தியாசமான பார்வையும் கண்களும்.

அவரது அப்பா திருப்பதியாக சிங்கம்புலி, கணக்கு வாத்தியார் மூர்த்தியாக டிஎஸ்ஆர்.தர்மராஜ், அபினயஶ்ரீயின் தோழி ஈஸ்வரியாக காயத்ரி, கயல்விழியாக தாரா, செல்வியாக மேலோடி, முருகனாக பிரகதீஷ்வரன், சேகராக ஜென்சன் என்று ஒவ்வொருவரும் அந்தப் பழமை ஊறிய மண்ணின் உண்மையான மைந்தவர்களாகவே தெரிகிறார்கள். 

இன்ஸ்பெக்டராக லட்சுமி பிரியா சந்திரமௌலி, ஆங்கில ஆசிரியையாக ஸ்மிருதி வெங்கட், கலெக்டராக செந்தில்வேல், எம்எல்ஏவாக பகவதிபெருமாள் ஆகியோரை சின்ன சின்ன பாத்திரங்களில் வைத்து பளிச்சென்று ரசிக்க வைத்திருக்கிறார்கள்.

ராம்ஜியின் ஒளிப்பதிவு ஒரு திரைப்படமாக இந்தத் தொடரை உணர வைக்கிறது. ரேவாவின் இசையும் மெத்தப் பொருத்தம். கணேஷ் சிவாவின் படத் தொகுப்பும் கச்சிதம்.

ஏழாவது எபிசோட் வரை எந்த குழப்பமும் இல்லாமல் முடிவை நோக்கி செல்லும் கதை எட்டாவது எபிசோடில் மட்டும் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்லிவிட எத்தணித்ததில் கொஞ்சம் குழப்பம் தருகிறது.

அதேபோல் அபிநயஶ்ரீ பருவம் அடைந்ததை சிகப்பு மை என்று சொல்லி ஊரை ஏமாற்றினாலும் ஒரு பெண்ணின் தாயால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதை ஒத்துக் கொள்ள முடியவில்லை.

இப்படியான சிறிய தவறுகளைக் கடந்து பார்த்தால் மிகச் சிறப்பான படைப்பாக வந்திருக்கிறது இந்த அயலி. தவிர்க்காமல் பெண்கள் மட்டுமல்ல… ஆண்களும் பார்த்து தெளிய வேண்டிய தொடர்.

அயலி – லவ்லி..!