தனுஷின் ‘அசுரன்’ படம் வரும் அக்டோபர் 4ம் தேதி உலகெங்கும் 1000-க்கும் மேற்பட்ட அரங்குகளில் வெளியாகிறது.
கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் அசுரன். இந்தப் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பசுபதி, பவன், யோகி பாபு, ஆடுகளம் நரேன், தலைவாசல் விஜய், குரு சோமசுந்தரம் என தேர்ந்த நடிகர்கள் இணைந்துள்ளனர். இயக்குநர்கள் பாலாஜி சக்திவேல் மற்றும் சுப்பிரமணிய சிவா ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
வெற்றி மாறன் – தனுஷ் கூட்டணியின் நான்காவது படம் இது. இவர்களுடன் ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இசையமைப்பாளராக இணைந்துள்ளார் ஜிவி பிரகாஷ். அண்மையில் இந்தப் படத்தின் பாடல்கள், ட்ரைலர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றன.
தனுஷின் திரையுலக வாழ்க்கையில் முக்கிய திருப்பத்தைத் தந்த படம் ‘ஆடுகளம்’. வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இந்தப் படம் பெற்ற வெற்றி அசாதாரணமானது. சிறந்த நடிகர். சிறந்த இயக்குநர் உள்பட ஆறு தேசிய விருதுகளையும் இந்தப் படம் அள்ளியது. அதற்கு இணையான படமாக ‘அசுரன்’ உருவாகியுள்ளதாக படம் குறித்து பேசப்படுகிறது.
படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு கூறுகையில், “இந்தப் படம் அதன் தலைப்பைப் போலவே ஒரு அசுரத்தனமான படம். நான் பேசுவதை விட படம் பேசட்டும் என்பதால் இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்வேன். வணிக ரீதியாக இந்த ஆண்டின் முக்கியமான படமாக ‘அசுரன்’ இருக்கும். அது உறுதி,” என்றார்.
உலகம் முழுவதும் வரும் அக்டோபர் 4-ம் தேதி 1000க்கும் மேற்பட்ட அரங்குகளில் அசுரன் வெளியாகிறது. இதில் அமெரிக்காவில் மட்டும் 110 அரங்குகளில் அசுரன் வெளியாவது குறிப்பிடத்தக்கது.