October 5, 2024
  • October 5, 2024
Breaking News
January 22, 2023

இளைஞர்களுக்கு குடல் நோய் அழற்சி அதிகரிப்பது குறித்து அப்போலோ எச்சரிக்கை

By 0 402 Views
  • வேகமாக மாறிவரும் வாழ்க்கை முறை, உணவு முறை மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகியவை குடல் அழற்சி நோயின் [Inflammatory Bowel Disease] அதிகரிப்புக்குக் காரணமாக அமைகின்றன

சென்னை, ஜனவரி 20, 2023: ஆசியாவின் முதன்மையான நம்பகமான ஒருங்கிணைந்த சுகாதார சேவைகள் குழுமமான அப்போலோ மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு இரைப்பைக் குடலியல் (காஸ்ட்ரோஎன்டராலஜிஸ்ட்) அறக்கட்டளை [Tamil Nadu Gastroenterologist Trust] ஆகியவை இணைந்து, அதிகரித்து வரும் இரைப்பை மற்றும் குடல் அழற்சி நோய் குறித்து மருத்துவர்கள், நோயாளிகள் மற்றும் சுகாதார நிபுணர்களுக்கு விழிப்புணர்வை அதிகரிக்க ஒரு மாநாட்டை நடத்துகின்றன.

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜனவரி 2023 அன்று நடைபெறும் ஒரு நாள் மாநாட்டில், அழ்ந்த நிபுணத்துவம் பெற்ற 300-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வந்து பங்கேற்கின்றனர்.

நோயின் தன்மை மற்றும் பாதிப்பு குறித்த மதிப்பீடு, சிகிச்சை, சிக்கலான சூழல்களைச் சமாளித்தல், கடுமையான சீழ் புண்ணை உண்டாக்கும் (அல்சரேட்டிவ்) பெருங்குடல் அழற்சி மேலாண்மை, குடல் அழற்சி சிகிச்சை மற்றும் மேலாண்மையில் அண்மைக்கால முன்னேற்றங்கள் ஆகியவை குறித்து இந்த மாநாட்டின் போது நிபுணர்களால் எடுத்துரைக்கப்படும். இந்த உயர்நிலைக் கற்றல் அனுபவம், எதிர்காலத்தில் மேம்பட்ட சிகிச்சை அளித்து, நோயாளிகளுக்கு சிறந்த அனுபவங்களை ஏற்படுத்த வழிவகுத்து, சிறந்த பலன் கொடுக்கும் என்று அப்போலோ மருத்துவமனை நம்புகிறது.

குடல் அழற்சி நோய் (IBD – Inflammatory Bowel Disease) என்பது குடல் அழற்சி மற்றும் குடல் புண்களால் வரும் ஒரு நிலை ஆகும். இது இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் என இருவரையும் பாதிக்கிறது. ஐபிடி எனப்படும் குடல் அழற்சி நோய் ஒரு நீண்ட கால நோய் ஆகும். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வழக்கமான சோதனைகள், சிகிச்சைகள், மருந்துகள் மற்றும் சிகிச்சை பலன்களைக் கண்காணித்தல் உள்ளிட்ட நீண்ட கால மருத்துவப் பராமரிப்பு தேவைப்படுகிறது.

அப்போலோ மருத்துவமனையால் நடத்தப்பட்ட அண்மைக்கால ஆய்வில், குடல் அழற்சி நோய் (IBD) உடையவர்களில் பெரும்பாலானவர்கள் படித்த இளம் பட்டதாரிகள் என்று தெரியவந்துள்ளது. குடல் அழற்சி நோயறிதல் மற்றும் சிகிச்சையில் உள்ள சில சிக்கலான அம்சங்கள் மற்றும் அது தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான நிபுணர்களை, இந்த தளத்தின் மூலம் ஒரே மேடையில் ஒன்றிணைப்பதை அப்போலோ மருத்துவமனை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அப்போலோ மருத்துவமனையின் மூத்த இரைப்பை குடல் நோய் மருத்துவர் டாக்டர் கே.ஆர்.பழனிசாமி (Dr. K.R Palaniswamy, Senior Consultant Gastroenterologist Apollo Hospitals) செய்தியாளர்களிடம் கூறுகையில், “வேகமாக மாறிவரும் வாழ்க்கை முறை, உணவு முறை மற்றும் சுற்றுச்சூழல் மாசு உள்ளிட்ட பிற காரணிகளால் இரைப்பை குடல் அழற்சி அதிகம் ஏற்படுகிறது.

நமது மக்கள்தொகையில் குடல் அழற்சி நோய் உள்ளவர்களைக் கண்டறிவதற்கான சிறந்த தகவல்கள் மற்றும் திறன்களைப் பெற இந்த மாநாடு, நமது மருத்துவர்களுக்கு உதவும். அத்துடன் செலவு குறைந்த முறையில் நோய் மேலாண்மை மற்றும் சிகிச்சை அளிக்கவும் உதவும்.” என்றார்.

அப்போலோ மருத்துவமனையின் இரைப்பை குடல் நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் பாசுமணி (Dr.Basumani, Consultant Gastroenterologist, Apollo Hospital) கூறுகையில், “குறிப்பாக நம்மைப் போன்ற வளரும் நாடுகளில் குடல் அழற்சி நோய் அதிகரித்து வருகிறது. கிரோன்ஸ் (Crohn’s) நோய் மற்றும் சீழ் புண்ணை உண்டாக்கும் (அல்சரேட்டிவ்) பெருங்குடல் அழற்சி, பல இடங்களில் தவறாகக் கணிக்கப்படுகிறது அல்லது முறையாக சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. குறிப்பாக 40 வயதுக்கு குறைவானவர்களிடையே அதிகரித்து வரும் இந்த நோயைக் கருத்தில் கொண்டு, உடனடி நோயறிதல் மற்றும் தகுந்த சிகிச்சை அவசியம்.” என்றார்.

கடந்த சில ஆண்டுகளில் நம் நாட்டில் இரண்டு குடல் நோய்கள் அபாயகரமான அளவில் அதிகரித்து வருகின்றன. ஒன்று குடல் அழற்சி நோய். குடல் அழற்சியை மீண்டும் மீண்டும் ஏற்படுத்தும் ஒரு நீண்ட கால நிலை இதுவாகும். மற்றொன்று குடல் (பெருங்குடல்) புற்றுநோய். இது ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு சிறந்த பலன்களைத் தரும்.

அப்போலோ மருத்துவமனை இந்த நோய் நிலைகளைக் கண்டறிந்து, நவீன மருந்துகளுடன் சிகிச்சையளிப்பதற்கான புதிய, அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளது. இரண்டு நிலைகளுக்கும் நோயறிதல், எந்த நிலையில் இருக்கிறது என்பதை கண்டறிதல் மற்றும் எந்தவிதமான சிகிச்சை அளிப்பது என்பனவற்றை மதிப்பிடுவதற்கு ஒரு சிறப்புப் பரிசோதனை தேவை. கொலோனோஸ்கோபி செயல்முறை, மருத்துவர்களால் பெருங்குடலின் பகுதிகளைப் பரிசோதிக்கவும் மற்றும் பாலிப்ஸ் எனப்படும் பெருங்குடலே பகுதியில் உள்ள சிறிய கட்டிகளை அகற்றவும் உதவுகிறது. சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் இந்தத் தன்மை சில ஆண்டுகளுக்குப் பிறகு புற்றுநோயாக மாறும்.

இந்த மாநாட்டின் தொடர்ச்சியாக, வானகரத்தில் உள்ள அப்போலோ சிறப்பு மருத்துவமனை சார்பில், தமிழகத்தைச் சேர்ந்த ஆறு மூத்த மருத்துவர்கள் மற்றும் ஆறு பயிற்சி மருத்துவர்களுக்கு, கொலோனோஸ்கோபி திறன்கள் குறித்து ஜனவரி 23 முதல் 26 வரை 4 நாள் பயிலரங்கம் நடத்தப்படுகிறது.

அப்போலோ மருத்துவமனைகள் குழுமம் பற்றி….:

டாக்டர் பிரதாப் ரெட்டி 1983-ம் ஆண்டில் சென்னையில் முதல் அப்போலோ மருத்துவமனையைத் திறந்தபோது அப்போலோ சுகாதாரப் புரட்சியை ஏற்படுத்தியது. 71 மருத்துவமனைகள், 5,000 மருந்தகங்கள் மற்றும் 400-க்கும் மேற்பட்ட கிளினிக்குகள் மற்றும் நோயறிதல் மையங்கள் மற்றும் 150 தொலை மருத்துவ மையங்கள், 10,000 படுக்கைகளை அப்போலோ கொண்டுள்ளது. 200 மில்லியனுக்கும் அதிகமான நோயாளிகளுக்கு சேவை செய்யும் உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைக்கப்பட்ட சுகாதார தளமாக இன்று அப்போலோ உள்ளது. இது 160,000 க்கும் மேற்பட்ட இதய அறுவை சிகிச்சைகளை மேற்கொண்ட உலகின் முன்னணி இதய நோய் சிகிச்சை மையமாகவும் உலகின் மிகப்பெரிய தனியார் புற்றுநோய் சிகிச்சை வழங்கும் மருத்துவமனையாகவும் திகழ்கிறது. நோயாளிகளுக்கு உலகிலேயே சிறந்த பராமரிப்புக் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, அதிநவீன தொழில்நுட்பங்கள், உபகரணங்கள் மற்றும் சிகிச்சை நெறிமுறைகளை மேம்படுத்த அப்போலோ தொடர்ந்து ஆராய்ச்சிகளில் முதலீடு செய்து வருகிறது. அப்போலோவின் 100000 பணியாளர்கள் சிறந்த பராமரிப்பை நோயாளிகளுக்கு வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றனர்.

மேலும் விவரங்களுக்கு www.apollohospitals.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.