ஶ்ரீ வாரி ஃபிலிம்ஸ் ரங்கநாதன் தயாரிப்பில் நந்தா பெரியசாமி இயக்கியிருக்கும் படம் ஆனந்தம் விளையாடும் வீடு.
இந்தப்படத்தில் கௌதம் கார்த்திக் ஹீரோவாக, டாக்டர் ராஜசேகர் – ஜீவிதா மகள் சிவாத்மிகா ராஜசேகர் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சேரன், சரவணன், விக்னேஷ், டேனியல் பாலாஜி, சவுந்தர் ராஜ், சினேகன் உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது.
தயாரிப்பாளர் ரங்கனாதனிடம் படம் பற்றிப் பேசியபோது, “இயக்குனர் நந்தா பெரியசாமி என்னிடம் வேறு ஒரு கதை சொல்ல வந்தார். அவரிடம் வேறு கதை இருக்கிறதா என்று கேட்டபோது இந்தக்கதயை சொன்னார். எனக்கு மிகவும் பிடித்துப் போய் படம் தயாரிக்க ஒத்துக் கொண்டேன்.
எனது தயாரிப்பில் ஏதாவது வித்தியாசம் இருக்க வேண்டும் என்று நினைப்பவன். இது நாம் இழந்து கொண்டிருக்கும் குடும்ப உறவுகளை மேன்மைப் படுததும் படமாக இருக்கிறது..!” என்றார்.
“நான் எதிர்பார்த்ததை விட படம் பெரிதாக வந்ததற்கு தயாரிப்பாளர் தான் காரணம். அவர் மனது வைத்ததால் சேரன் போன்ற பெரிய நடிகர்கள் உள்ளே வந்தார்கள்.
அதனாலேயே எங்களுக்கு பெரிய பொறுப்பு ஏற்பட்டது. அதுவும் கொரோனா பயம் இருந்ததால் ஒவ்வொருவரையும் சோதித்து பிறகே ஷூட்டை நடத்தினோம்..!” என்று ஆரம்பித்த இயக்குனர் நந்தா பெரியசாமி தொடர்ந்தார்.
“பிரிந்து கிடக்கும் குடும்ப உறவுகளை நாயகன் ஒன்று சேர்க்கும் கதைதான் இது. கௌதம் கார்த்திக்குக்கு சிறப்பான பெயரைப் பெற்றுத் தரும். அத்துடன் சிவாத்மிகா ராஜசேகர் ரத்தத்திலேயே நடிப்பு இருப்பதால் சிங்கிள் ஷாட்டில் அற்புதமாக நடித்தார்.
கௌதம் கார்த்திக் தங்கையாக வெண்பாவும், தந்தையாக சரவணனும் நடிக்க, சரவணன் தம்பியாக சேரனும் நடித்திருக்கிறார்கள். படம் பார்த்து முடித்ததும், நீங்கள் குடும்பத்தில் இழந்த உறவுகளை நினைத்து ஒரு சொட்டுக் கண்ணிராவது விடுவீர்கள். பிரிந்த உறவுகளைத் தேடுவீர்கள்..!” என்றார்.
பொர்ரா பாலபரணி ஒளிப்பதிவில், சித்து குமார் இசையமைக்க சினேகன் பாடல்களை எழுதி இருக்கிறார்.
விரைவில் படத்தின் டீஸர், டிரெய்லர், பாடல்கள் வெளியிடப்பட்டு படம் நவம்பர் முதல் வாரத்தில் தியேட்டரில் வெளியாக இருக்கிறது.
தியேட்டரிலும் ஆனந்தம் விளையாடட்டும்..!