ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் என்றாலே ஊட்டிக்கோ, கொடைக்கானலுக்கோ போக வேண்டும் என்பது எழுதப்படாத விதி. இதிலும் அப்படித்தான். கொடைக்கானல் ரெசார்ட் மற்றும் காட்டுப் பகுதிகளில் நடக்கிறது கதை.
சுரேஷ் குமார் இயக்கியிருக்கும் இந்தப்படத்தில் தன் மனைவி மற்றும் 14 வயது மகளுடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா வருகிறார் டாக்டர் விஜய் ஆனந்த். அதே போல் நான்கு இளைஞர்களும் சுற்றுலா வர அவர்கள் அனைவரும் ஒரே விடுதியில் தங்கி நண்பர்களாகிறார்கள்.
ஒருநாள் காலை டாக்டரின் மகள் காணாமல் போக, அந்த நான்கு இளைஞர்களில் ஒருவரும் காணாமல் போகிறார். அவர்தான் மகளை கடத்தி இருப்பார் என்று டாக்டர் நினைக்க இன்னொரு பக்கம் முரட்டுத்தனமான காட்டிலாகா அதிகாரி ஒருவர் மீதும் மற்றும் காட்டுக்குள் பதுங்கி இருந்து சதி வேலைகள் செய்யும் சிலர் மீதும் சந்தேகப் பார்வை விழுகிறது.
விஷயம் போலீசுக்கு போக காணாமல் போனவர்களைப் பற்றி துப்பறிய வருகிறார் இன்ஸ்பெக்டர் ஜான் விஜய். அவர் துப்பறிந்து கண்டுபிடித்த உண்மை என்ன என்பதுதான் கிளைமாக்ஸ்.
நடிகர்களில் நமக்கு நன்றாகத் தெரிந்த முகம் என்றால் இன்ஸ்பெக்டர் ஜான் விஜய்தான். அவரும் தன் முரட்டுப் பார்வை, வித்தியாசமான முகக் குறிகள் மற்றும் மாடுலேஷனுடன் வந்து இவர் நல்லவரா கெட்டவரா என நம்மை நிறைய யோசிக்க வைக்கிறார்.
இவரது பாத்திரத்தை 24 கேரட் என்று மதிப்பிடலாம். அதற்காக தங்கம் என்று நினைத்துவிடாதீர்கள். எப்போதும் ஒரு கேரட்டை கையில் வைத்துக்கொண்டு மென்று கொண்டிருக்கும் அவர் படம் முழுதும் சாப்பிட்ட கேரக்டர்கள் 24 இருக்கலாம்.
டாக்டராக வரும் விஜய் ஆனந்தையும் பல சீரியல்களில் நாம் பார்த்திருக்கிறோம். அவரது மனைவியாக வரும் அஞ்சலி நாயர் ஆரம்பத்தில் அடக்கி வாசித்து கிளைமாக்சில் மிரள வைக்கிறார். அவர்களது மகளாக வரும் ரவீனா தாஹாவும் நிறைவாகச் செய்திருக்கிறார்.
முரட்டுத்தனமான காட்டிலாகா அதிகாரியாக வரும் நடிகர் பார்வையிலேயே மிரட்டுகிறார். அவர் வீட்டுக்குள் ஒரு சிறுமியின் அலறல் சத்தம் கேட்க அவள் கடித்த காயத்துடன் அவர் வெளியே வர, இடைவேளை வந்து நம்மை நிறைய யோசிக்க வைக்கிறது.
நான்கு நண்பர்களில் காணாமல் போகும் சித்தார்த் மேனன் ஒரு ஹீரோவுக்கு உரிய எதிர்பார்ப்புகளுடன் இருக்கிறார். அவரும் திடீரென்று ஒரு கட்டத்தில் இறந்து போக அதிர்ச்சி மேலிடுகிறது.
ஒரு சஸ்பென்ஸ் திரில்லருக்குரிய அனைத்து அம்சங்களும் படத்தில் இருந்தாலும் படத்தின் பட்ஜெட் இல்லாத காரணங்களால் படம் மெதுவாக நகருகிறது.
லொகேஷனாக கொடைக்கானல் கிடைத்தும் ஒளிப்பதிவாளர் தன் பங்கை நிறைவாகச் செய்யவில்லை. அதேபோல் இசையமைப்பாளரும் தன்னால் முடிந்ததை இட்டு நிரப்பியிருக்கிறார்.
உண்மை வெளியே தெரியும் கிளைமாக்ஸில் குற்றவாளியுடன் இன்ஸ்பெக்டர் மட்டுமே இருக்க உண்மை தெரிந்த மறுநிமிடம் குற்றவாளியும் தற்கொலை செய்துகொள்ள அந்த உண்மையை எப்படி உலகுக்கு உணர்த்தப் போகிறார் இன்ஸ்பெக்டர் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது. அவர் சொல்வதை உண்மை என்று எப்படி சமுதாயம் ஏற்றுக் கொள்ளும்..?
எதிர்பாராத கிளைமாக்ஸ் கிடைத்துவிட்டது என்பதற்காக படத்தின் மற்ற பகுதிகளில் விறுவிறுப்பை ஏற்படுத்த தவறி விட்டாரோ இயக்குனர் என எண்ணத் தோன்றுகிறது.
அகடு – போதைக்கு அடிமையான அசடு..!