July 2, 2025
  • July 2, 2025
Breaking News
October 5, 2024

ஆரகன் திரைப்பட விமர்சனம்

By 0 289 Views

மூன்றே முக்கிய கேரக்டர்களை வைத்துக் கொண்டு ஒன்றே முக்கால் மணி நேரப் படத்தை அலுப்பில்லாமல் கொண்டு செல்ல முடியுமா..? முடியும் என்று நிரூபித்திருக்கிறார் இயக்குனர் அருண் கே.ஆர்.

இதற்கு அவருக்குக் கை கொடுத்திருப்பது சஸ்பென்ஸ் திரில்லர் ஜேனர்தான்.

நாயகி கவிப்ரியாவை தொடர்ந்து வந்து காதலிக்க சொல்லிக் கேட்கிறார் ஹீரோ மைக்கேல் தங்கதுரை. ஆதரவில்லாத கவிப்ரியாவும் தங்கதுரையின் அன்பில் மயங்கி அவரைக் காதலிக்க ஆரம்பிக்க, கவிப்ரியாவுக்கு பெரிய சம்பளத்தில் ஒரு வேலை கிடைக்கிறது – அது வயதான ஒரு பெண்மணியைப் பார்த்துக் கொள்வது. 

அதுவும் வெளியூரில் என்பதால் மைக்கேல் தங்கதுரை அதற்கு மறுக்கிறார் ஆனால் கவிப்பிரியா தன் சம்பளத்தைக் காரணம் காட்டியும், பணிக்காலத்துக்கான ஒப்பந்தம் முடிந்ததும் திரும்பி வந்துவிடுகிறேன் என்றும் கூற அரை மனத்துடன் சம்மதிக்கிறார் மைக்கேல். 

அதுவரை கலகலப்பான காதல் பாதையில் போய்க் கொண்டிருந்த படம் கவிப்ரியா மலைப்பங்கான காட்டுக்குள் சம்பந்தப்பட்ட வயதான பெண்மணியைத் தேடிப் போகும்போது நம் அட்ரினல் சுரப்பியை கொஞ்சம் அதிகம் சுரக்க வைக்கிறது. 

காட்டுக்குள் தன்னந்தனியே கட்டப்பட்டிருக்கும் வீட்டை அடைந்ததும் கவிப்ரியா உள்ளே எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் நமது நெஞ்சு பக் பக் என்று அடித்துக் கொள்கிறது. ஆனால் நல்ல வேளையாக உள்ளே ஸ்ரீரஞ்சனி இருக்க, ஓரளவுக்கு ஆறுதல் கிடைத்தாலும் அடுத்து என்ன நடக்குமோ என்கிற பயம் இடைவேளை வரையே தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இடைவேளையில் ஒரு எதிர்பாராத திருப்பத்துடன் முன் பாதி முடிய பின் பாதியில் என்னதான் ஆகப்போகிறது என்கிற திகிலுடன் மீதிப் படம் கடக்கிறது.

நாயகன் மைக்கேல் தங்கதுரை, காதலிக்கும் போது அழகானவராகவும் அவருடைய உண்மை முகம் தெரியும்போது ஆபத்தானவராகவும் தெரிவுதே அவருக்கான வெற்றி.

சின்னக் குழந்தை போன்ற அப்பாவி முகத்தைக் கொண்டிருக்கும் கவிப்ரியாவை பார்க்கும்போது இந்தப் பெண் எந்த ஆபத்தில் சிக்கிக் கொள்வாளோ நமக்கே கலக்கம் வருகிறது. கண்ணாடி கூட இல்லாத வீட்டில் நமக்கு மட்டுமே கவிப்ரியா வயதானவராக மாறிக்கொண்டு வருவதைக் காட்டும் போது நெஞ்சு அடைக்கிறது. 

பாசமான அம்மாவாக இதுவரை நாம் பார்த்திருக்கும் ஸ்ரீ ரஞ்சனியை இந்தப் படத்தில்தான் முதல் முறையாக பயத்துடன் பார்க்க நேர்கிறது. 

முக்கிய பாத்திரங்கள் இந்த மூவர்தான் நான்காவதாக ஒரு துணைப் பாத்திரத்தில் கலைராணி வருகிறார். அவரது கதை அதைவிட சோகம். 

முன்பாதியில் போட்ட ஒவ்வொரு முடிச்சையும் பின் பாதியில் அவிழ்த்துக் கொண்டே வருகிறார் இயக்குனர். அங்கங்கே அவர் நமக்கு வைக்கும் ஷாக், உண்மையிலேயே எதிர்பாராதவைதான்.

அழகையும் ஆபத்தையும் நம்மை ஒரு சேர அனுபவிக்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர் சூர்யா வைத்தி.

இரைச்சல் இல்லாத பின்னணி இசை மூலம் பயத்தை நம்முள் கடத்தியிருக்கும் இசையமைப்பாளர்கள் விவேக் – ஜெஷ்வந்த் இசையில் பாடல்களும் ஓகே தான்.

படத்தொகுப்பாளர் சாய் தக்‌ஷாவும், கலை இயக்குநர் காகி ஜெயசீலனும் கூட கவனிக்கத் தகுந்தவர்கள்.

ஒரு திரில்லர் படத்தை எப்படித் தர வேண்டும் என்கிற இலக்கணத்துடன் எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் இருக்கும் ஒரே குறை, இந்தக் கதையின் மையப் புள்ளிதான். இத்தனை அருமையான படம் பகுத்தறிவுக்கு ஒவ்வாத மந்திரவாதம் சொல்லும் கதையாகவும் அதை மெய்ப்பிக்கும் விதமாகவும் முடிந்திருப்பது ஏற்றுக் கொள்வதாக இல்லை.

புரியாத தலைப்பும் கூட ரசிகர்களை தியேட்டருக்குள்ளே வரவிடாமல் செய்யும்.

ஆனால் ரசிகனை ஏமாற்றாத படம் என்பதில் ஐயமில்லை. 

ஆரகன் – அபாயகரமானவன்..!

– வேணுஜி