அமலா பால் நடிக்கும் ‘ஆடை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் அமலா பால் பேசியதிலிருந்து…
இயக்குநர் ரத்னகுமார் –
“இக்கதையை எழுதி முடித்ததும் எப்படி இயக்கப் போகிறேன் என்று இருந்த நிலையில், தயாரிப்பாளர் சுப்புவிடம் இக்கதையைக் கொடுத்துப் படிக்க கூறினேன். அவர் படித்துவிட்டு உடனே தயாரிக்க ஒப்புக் கொண்டார். இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். அமலா பாலிடம் கதை கூறியதும் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அமலா பாலுக்கு பிடித்திருந்தால் உயிரைக் கொடுத்து நடிப்பார்.
இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானதும் இது ஆபாச படமாக இருக்குமோ? என்று பல தலைப்பு போட்டு எழுதினார்கள். ஆனால் இப்படம் வெளியானதும் அனைவரின் பார்வையும் மாறும் என்று நம்புகிறேன்..!”
தயாரிப்பாளர் சுப்பு –
“இக்கதையைப் படித்ததும் அமலா பால் தான் சரியான தேர்வாக இருக்கும் என்று அவரின் மேலாளர் பிரதீப்பிடம் கூறினோம். சில சவாலான காட்சிகளில் நடிப்பதற்கு முதல் நாள் தயங்கினார். ஆனால், அடுத்த நாளிலிருந்து ஒரு கேள்வியும் கேட்காமல் நடித்து முடித்தார்..!”
நடிகை அமலா பால் பேசும்போது –
“நடிப்பதையே விட்டுவிட முடிவு செய்திருந்த தருணத்தில் ஆடை படத்தின் கதையைப் படித்ததும் உற்சாகமாக ஒப்புக் கொண்டேன். இருப்பினும், படப்பிடிப்பு ஆரம்பிக்கும்போது ஒரு சிறு தயக்கம் இருந்தது. உடனே இயக்குநரிடம் நாம் அனைவரும் ஒரு குழுவாக பணியாற்றினால்தான் இப்படம் சிறந்த படமாக வரும் என்று கூறினேன். அதை அவர் ஏற்றுக் கொண்டதால் அனைவரும் ஒன்றாக பணியாற்றினோம்.
ஒரு காட்சியில் நடிக்கும்போது நீங்கள் யாரோ போல நடிக்காதீர்கள். நீங்கள் நீங்களாகவே இருங்கள் என்று கூறினார். பல பேருக்கு தெரியாது ரத்னகுமாருக்கு ‘ஆடை’ படம் தான் முதல் படம் என்று. அவர் பன்முக திறமை வாய்ந்தவர்.
ரம்யா இனிமேல் தொகுப்பாளினி இல்லை. சினிமாத் துறைக்கு மற்றுமொரு நடிகை கிடைத்துவிட்டார். விவேக் பிரசன்னா படத்தில் வருவது போலவே நிஜத்திலும் எனக்கு சகோதரர் மாதிரி தான்.
முதல் நாள் படப்பிடிப்பில் நான் நினைத்தேன், எனக்கு பாதுகாப்பு இருக்குமா என்று. ஏனென்றால், ஒளிப்பதிவாளர்களையும் சேர்த்து 15 பேர் இருந்தார்கள். ஆனால் அனைவரும் எனக்கு பாதுகாப்பாக இருந்தார்கள்..!”