பல கொடூரமான டிவி சீரியல்களைப் பார்த்து சலிப்படைந்த மக்களுக்கு ஓடிடி தளம் மிகப்பெரிய ஆறுதலாக அமைந்திருக்கிறது. அதேபோல பல கோடிகளைக் கொட்டி படமெடுத்து தியேட்டரில் வெளியிட முடியாமல் வைத்திருக்கும் படத்தயாரிப்பாளர்களுக்கும் மிகப்பெரிய வரப் பிரசாதமாகவும் அதுவே அமைந்திருக்கிறது.
அப்படி ZEE 5-ல் வெளியான இந்தப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.
வழக்கமாக சஸ்பென்ஸ் த்ரில்லர் கதைகளுக்கு இயக்குநர்கள் நகர்ப்புறங்களையே தேர்ந்தெடுப்பதை மாற்றி இதில் ஒரு கிராமியத் த்ரில்லரைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ல.சி. சந்தானமூர்த்தி. தஞ்சைப்பகுதி கிராமம் ஒன்றில் விவசாய நிலத்தில் வைத்து ஒரு பெண் எரித்துக் கொலை செய்யப்படுகிறார். அதற்கு அந்தப்பெண்ணின் குடிகாரக் கணவரே காரணம் என்று வழக்கை முடிக்கிறார் உதவி ஆய்வாளராக வரும் துரை சுதாகர்.
ஆனால், பிரச்சினை அத்துடன் முடியவில்லை. அந்தக் காவல்நிலையத்துக்கு ஆய்வாளராகப் பொறுப்பேற்கும் வரலட்சுமி, மீண்டும் அந்த வழக்கைக் கையிலெடுக்கிறார். ஆனால், இப்போது வரலட்சுமியின் சொந்தத் தங்கையே அதுபோன்று எரித்துக் கொலைசெய்யப்பட, அதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்ற சஸ்பென்ஸுடன் நகர்கிறது படம்.
அப்படி வரலட்சுமி விடுவிக்கும் புதிர்களுக்கு உதவியாக டேனி என்ற நாயும் இருக்கிறது. அதுவே படத்தின் டைட்டிலாகவும் ஆகியிருக்கிறது.
அப்பா சரத்குமார் போலவே வரலட்சுமி சரத்குமாருக்கும் காவல்துறை ஆய்வாளராக காக்கிச்சட்டை கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது. படபடப்பான பேச்சைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் மிடுக்குக்கும் மிரட்டலாகவே இருக்கிறது. தங்கைக்காகத் துடிக்கையில் ஒரு சகோதரியின் பாசத்தை உணரவைக்கிறார்.
உதவி ஆய்வாளராக நடித்திருக்கும் துரை.சுதாகர் பொறுப்புக்ளைத் தட்டிக் கழிக்கும் காக்கிச் சட்டைகளின் பலவீனமான பக்கத்தைக் காட்சிப் படுத்துகிறார். அவரது இயல்பான நடிப்பு பாத்திரத்தில் அப்பட்டமாகப் பொருந்துவதுடன் தஞ்சை மணத்துடன் அமைந்து கதைக் களத்துக்கும் பக்க பலமாக ஆகி இருக்கிறது. சிரிப்பதிலேயே பல உணர்ச்சிகளைக் காட்டும் அவருக்கு இன்னும் கூட வலுவான வேடங்கள் கிடைக்கப் பெற்றால் மின்னும் சாத்தியம் இருக்கிறது.
படத்தின் டைட்டிலையே பிடித்துவிட்ட டேனிக்கு இன்னும் இட ஒதுக்கீடு அளித்திருந்தால், குழந்தைகளும், குழந்தை உள்ளம் கொண்டோரும் ரசித்திருக்க முடிந்திருக்கும். ஆனாலும், ஒப்புக்கு மோப்பம் பிடித்துவிட்டுப் போய்விடாமல் நாய்களுக்கு வழங்கப்படும் சம்பளம், பதவிகள் போன்று வெகுஜனம் அறியாத விஷயங்களைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
டேனியை பராமரிப்பவராக நடித்திருக்கும் கவின், அனிதா, வினோத் கிஷன், வேலராமமூர்த்தி ஆகியோர் கிடைத்த வேடத்துக்கு நியாயம் சேர்த்திருக்கிறார்கள்.
ஆனந்த்குமாரின் ஒளிப்பதிவும், சாய் பாஸ்கரின் பின்னனி இசையும் படத்தின் தன்மையைப் பிரதிபலித்திருக்கின்றன.
கண்டிப்பில்லாத செல்வந்தர்கள் கொடுக்கும் செல்லம் அவர்களின் வாரிசுகளை எந்த அளவுக்குக் கொண்டு சென்று நிறுத்தும் என்பதைக் கருத்தாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தி விறுவிறுப்பூட்டி இருந்தால் முழுமையாக ரசித்திருக்க முடியும்.
தளத்துக்கேற்ற தரத்தில் – டேனி..!