July 22, 2025
  • July 22, 2025
Breaking News

பன் பட்டர் ஜாம்

By on July 22, 2025 0 4 Views

கல்லூரி மாணவரான நாயகன் ராஜுவின் அம்மா சரண்யா பொன் வண்ணனுக்கு, தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் தோழி தேவதர்ஷணியின் மகள் ஆதியாவை தன் மகனுக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்படுகிறார்.

ஆனால், ஆதியாவோ விஜே பப்புவை காதலிக்க, ராஜுவோ தனது சக மாணவி பவ்யா ட்ரிகாவை காதலிக்கிறார்.

இது ஒரு பக்கம் இருக்க, ராஜுவின் உற்ற நண்பன் மைக்கேல் தன் காதலில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக ராஜுவிடம் இருந்து விலகிச் செல்கிறார்.

இத்தனை குழப்பங்களுக்குள் ராஜுவின் காதலும், சரண்யா பொன்வண்ணனின் ஆசையும் என்ன ஆனது? என்று சொல்லும் கதை. 

காலம் காலமாக காதல் நட்பு மோதல் எல்லாம் இருந்தாலும் இதை இந்தக் காலக்கட்ட இளைஞர்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள்  என்று இளமை ததும்ப சொல்ல முயற்சித்து இருக்கிறார் இயக்குனர் ராகவ் மிர்தாத்.

நாயகனாக நடித்திருக்கும் ராஜு ஒரு புதுமுகம் போலவே தெரியவில்லை. இயல்பாக நடித்திருப்பதுடன் காமெடியும் அவருக்கு நன்றாக வருகிறது. 

நாயகிகளாக நடித்திருக்கும் பவ்யா ட்ரிகாவும் , ஆதியாவும் இளமை அழகில் ஜொலிக்கிறார்கள். பவ்யாவுக்கு நடனம் பிளஸ் பாயிண்ட் என்றால் ஆதியாவின் சுறுசுறுப்பும் நடிப்பும் பலமாக இருக்கிறது.

 

 

ஆதியாவின் காதலனாக நடித்திருக்கும் விஜே பப்பு, வரும் காட்சிகளில் சிரிப்பு சத்தம் காதை பிளக்கிறது. நாயகனின் நண்பனாக நடித்திருக்கும் மைக்கேலின் நடிப்பிலும் குறையில்லை.

 

 

 

சரண்யா பொன்வண்ணன், தேவர்தர்ஷினி, சார்லி ஆகியோரது அனுபவம் வாய்ந்த நடிப்பு திரைக்கதைக்கு பலம் சேர்த்தாலும், அவர்கள் வழக்கமாக செய்வதை கொஞ்சம் ஓவராக செய்து பார்வையாளர்களை சற்று சலிப்படைய வைத்துவிடுகிறார்கள்.

 

 

 

கெளரவ வேடத்தில் நடித்திருக்கும் விக்ராந்த், வரும் காட்சிகள் மாஸாக இருக்கிறது.

 

 

 

நிவாஸ் கே.பிரசன்னா இசையில் பாடல்கள் துள்ளல் ரகம். பின்னணி இசை முதன்மை கதாபாத்திரங்களிடம் இருக்கும் இளமைக்கு ஏற்ப பயணித்து பார்வையாளர்களை பரவசமடைய செய்கிறது.

 

 

 

 

ஒளிப்பதிவாளர் பாபு குமார்.ஐ.இ, படம் முழுவதையும் கலர்புல்லாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

 

 

 

எழுதி இயக்கியிருக்கும் ராகவ் மிர்தாத், தற்போதைய இளைஞர்கள் காதல், நட்பு, பெஸ்ட்டி, காதல் திருமணம், பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்படும் திருமணம் உள்ளிட்ட உறவுகளை பார்க்கும் விதமும், அதனால் பாதை மாறும் வாழ்க்கையையும் விவரிக்கும் வகையில் கதை, திரைக்கதை அமைத்திருக்கிறார்.

 

 

 

இரட்டை அர்த்த வசனங்கள் மற்றும் காட்சிகள் மூலம் இது 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கும் படம் என்பதை தெளிவுப்படுத்தினாலும், இளைஞர்களை கவர்வதற்கு இப்படிப்பட்ட விசயங்களை வைக்க வேண்டுமா? என்று தோன்றுகிறது. இத்தகைய விசயங்களை ஒருசிலர் ரசித்தாலும், பெரும்பாலான இளைஞர்கள் வெறுப்பார்கள் என்பதை இயக்குநர் உணரவில்லை. ஜெயித்தாக வேண்டும் என்ற ஒரே நோக்கோத்தோடு, இளைஞர்களுக்கு பிடிக்கும் என்ற கண்ணோட்டத்தில் சில குப்பை காட்சிகள் திணிக்கப்பட்டிருப்பது, நல்ல கதையை சிதைக்கும்படி செய்திருக்கிறது.

 

 

 

கருத்து சொல்கிறேன், அறிவுரை கூறுகிறேன் என்ற பெயரில் அதர பழசான விசயங்களை பேசி சில இடங்களில் மொக்கை போட்டிருக்கும் இயக்குநர் நகைச்சுவைக் காட்சிகள் மூலம் அதில் இருந்து பார்வையாளர்களை காப்பாற்றியிருக்கிறார். ஆனால், அந்த நிலை அதிக நேரம் நீடிக்காமல் போக, மீண்டும் பழைய பாணியில், சிறந்த நண்பனை திருமணம் செய்து கொள்ளலாமா? என்ற கேள்வியை முன்வைத்து அதற்கு விளக்கம் கொடுத்திருப்பது, பல வருடங்களுக்கு முந்தைய தமிழ் சினிமாவுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. இருந்தாலும், எதிர்பார்க்காத கிளைமாக்ஸ் வித்தியாசமாகவும், ரசிக்கவும் வைக்கிறது. 

 

 

 

நல்ல கதையாகவும், நகைச்சுவை, காதல் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் நிறைவாக காட்டக்கூடிய களமாகவும் அமைந்தும் இயக்குநரின் தடுமாற்றத்தால் கொண்டாடி தீர்க்க வேண்டிய படம், ”என்ன கொடுமை சரவணன்”, என்று புலம்ப வைத்திருக்கிறது.

 

 

 

மொத்தத்தில், ‘பன் பட்டர் ஜாம்’ திகட்டுகிறது.