March 1, 2024
  • March 1, 2024
Breaking News
May 27, 2023

2018 திரைப்பட விமர்சனம்

By 0 535 Views

டொவினோ தாமஸ், குஞ்சாக்கோ போபன், ஆசிஃப் அலி, வினீத் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, லால், இந்திரன்ஸ், ஷிவதா என மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்திருந்தாலும் எந்த ஒரு நடிகரும் தனிப்பட்ட ஹீரோ இல்லை என்கிற பொருளில் “ஒவ்வொருவரும் ஹீரோதான்…” என்று சொல்லியே இந்த படத்தைத் தொடங்குகிறார் இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப்.

2018 ஆம் ஆண்டு கேரளத்தை உலுக்கிய மழை வெள்ளத்தை அத்தனை சீக்கிரம் மறப்பதற்கு இயலாது.

செய்திகளாகவும், செய்திப் படங்களாகவும் நாம் அறிந்திருந்த அந்த சோகத்தை ஒரு திரைக்கதையாக்கி நம்மை உணரச் செய்திருக்கிறார் இயக்குனர்.

மனிதர்களிடையே எத்தனை பிரிவினை இருந்தாலும் ஒட்டுமொத்த சமுதாயத்துக்கும் ஆபத்து என்று வந்து விடும்போது மனிதம் எப்படி புனிதப்பட்டு நிற்கிறது என்பதுதான் இந்த படத்தில் அவர் சொல்லியிருக்கும் செய்தி.

நல்ல மழைக்காலம். கேரளாவில் மழை ஒன்றும் புதிதல்ல என்பதால் மாஜி ராணுவ வீரர் டோவினோ தாமஸ் தன் திருமண வேலைகளில் இருக்க, குஞ்சாக்கோ போபன் தனது அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு புறப்பட ஆயத்தமாக, மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த ஆசிஃப் அலி அந்த வேலை பிடிக்காமல் போட்டோ ஷூட்டுக்காக திருவனந்தபுரம் செல்ல, நோய்வாய்ப்பட்ட தன் தாயைப் பார்க்க துபாயிலிருந்து கிளம்பிவரும் வினீத் விமானம் பிடிக்க, பார்வைச் சவால் கொண்ட இந்திரன்ஸ் மழை வலுப்பதால் நிவாரண முகாம் செல்ல முடிவெடுக்க,  கேரளாவுக்கு சுற்றுலா வந்திருக்கும் வெளி நாட்டு ஜோடியை டிரைவர் வரவேற்க… இப்படியான அனைவரின் தேவைகளையும் முடக்கிப் போடுகிறது வெள்ள அபாயம்.

இவர்களது வேலைகள் முடிந்தனவா? வெள்ளம் இவர்களது வாழ்வை எல்லாம் எப்படி புரட்டி போட்டது என்று இரண்டரை மணி நேரம் நம் இதயத்தைத் தத்தளிக்க விட்டு படத்தை முடிக்கிறார் இயக்குனர்.

எல்லோருமே படத்தின் ஹீரோ என்று சொன்னாலும் கொஞ்சம் அதிகமாக தெரிவது என்னவோ டோவினோ தாமஸின் பங்களிப்பு தான். அவரது அர்ப்பணிப்பான நடிப்பு அசர வைக்கிறது.

ஒரு கர்ப்பிணிப் பெண்ணை ஹெலிகாப்டரில் ஏற்றி அனுப்பவும், கால் உடைந்த சிறுவனை யும், அவன் குடும்பத்தையும் காப்பாற்றவும் பார்வையில் சிறப்புத் திறன் கொண்ட இந்திரன்ஸை காப்பாற்றவும் அவர் எடுக்கும் முயற்சிகள் நம்மை சீட்டின் முனைக்குத் தள்ளி விடுகின்றன.

நிவாரணக் குழுவில் கண்காணிப்பாளராக வரும் குஞ்சாகோ போபன், அம்மாவை பார்க்க வரும் வினித் சீனிவாசன், மாநிலமே வெள்ளத்தில் தத்தளிக்க தண்ணீர் எங்களுக்கெல்லாம் ஒரு பொருட்டல்ல என்று தன் படகை எடுத்துக்கொண்டு நிவானத்துக்குக் கிளம்பும் லால், அவரது மகன் நரேன், செய்தியாளர் அபர்ணா பாலமுரளி என ஒவ்வொருவரும் உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

லாஜிக்கில் சில பல ஓட்டைகள் இருந்தாலும் அதையெல்லாம் கவனிக்க விடாத பரபரப்பான எடிட்டிங்கிலும் உணர்ச்சிமயமான காட்சிகளிலும் நம்மை கட்டிப் போட்டு விடுகிறார் இயக்குனர்.

அகில் ஜார்ஜின் ஒளிப்பதிவுதான் படத்தின் அத்தனை உழைப்பையும் நமக்குக் கடத்துகிறது. கலை இயக்கம், சிஜி, ஒலியமைப்பு இன்று ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞர்களும் தங்களது வேலையை அர்ப்பணிப்புடன் செய்திருப்பதால் படத்தின் நோக்கம் கச்சிதமாக நிறைவேறி இருக்கிறது. நம் உணர்ச்சிகளைக் கட்டிப்போட்டு அதில் மின்சாரம் பாய்ச்சுவதில் நோபின் பால் இசைக்கும் பெரும் பங்குண்டு.

உண்மைச் சம்பவங்களின் கோப்புக் காட்சிகளை படத்தினூடே வைத்திருப்பதும் இந்தப் படம் உண்மை என்று நம்மை நம்ப வைக்கிறது.

இத்தனை ஆச்சரியங்களும் அற்புதங்களும் இருந்தும் வழக்கமான கேரள சினிமாவின் அரசியலில் இருந்து இந்தப் படத்தை இயக்குனராலும் மீட்க முடியவில்லை என்பதுதான் சோகம்.

2018 கேரளா வெள்ளத்துக்காக தமிழ்நாட்டிலிருந்து தங்கள் படகுகளை எடுத்துக்கொண்டு போய் காப்பாற்றிய தமிழக மீனவர்களைப் பற்றிய எந்த குறிப்போ, செய்திகளோ படத்தில் இல்லை.

அத்துடன் தமிழர்களை வன்மத்துடனேயே அணுகும் கேரள சினிமாவின் போக்கின்படியே இதிலும் தமிழரான கலையரசன் ஒரு சதி வேலைக்காக கேரளாவுக்குள் நுழைந்து அங்கே மனம் திருந்தி நல்லவராகிறாராம்.

அத்துடன் ஒரு மதத்தைத் தூக்கியோ, தாக்கியோ பிரசாரம் செய்யும் கேரள சினிமாவின் போக்கையும் இந்தப் படம் விடாமல் பிடித்து ஒரு மதத்தைத் தூக்கி நிறுத்தும் போக்கைக் கொண்டிருக்கிறது.

இத்தனை அரசியலோடு தத்தளித்தாலும் இந்த அரிய முயற்சியை எந்த வன்மமும் இல்லாமல் இந்தியாவின் டைட்டானிக் என்று சொல்வதில் தவறில்லை.