March 28, 2024
  • March 28, 2024
Breaking News
October 4, 2019

100 % காதல் திரைப்பட விமர்சனம்

By 0 1157 Views

ஒரு காதல் படத்துக்கு என்ன வேண்டும்..? முதலில் களையான… முக்கியமாக இளமையான ஒரு ஜோடி வேண்டும். அந்த முதல் விஷயத்தில் இதில் ஜி.வி.பிரகாஷ் – ஷாலினி பாண்டே ஜோடி அற்புதமாகப் பொருந்தி இருக்கிறது. அதில் இயக்குநர்-தயாரிப்பாளர் எம்.எஸ்.சந்திரமௌலிக்கு முதல் வெற்றி கிடைத்துவிடுகிறது.

அடுத்தது இருவரும் காதலிப்பதற்கேற்ற களம். அதில் ஜிகு ஜிகுவென்று காதல் பற்றிக்கொள்ள ஏதுவாக ஈகோவினால் உண்டாகும் ஊடல் கொண்ட திரைக்கதை. அதையும் தெலுங்கிலிருந்து இறக்கியாகி விட்டது. 

அடுத்து துள்ளலான இசை. கண்ணைப் பறிக்கும் ஒளிப்பதிவு. படத்தின் நாயகன் ஜிவியே படத்துக்கு இசை என்றானபிறகு தனக்கு மிஞ்சிதானே அவர் மற்ற படங்களுக்கு இசைப்பார்..? அதிலும் ‘டிக்’ அடித்து விடலாம். ஆர்.கணேஷின் ஒளிப்பதிவில் ஷாலினி பாண்டே என்ன, தலைவாசல் விஜய், தம்பி ராமையாக்களே மின்னுகிறார்கள். பிறகென்ன..? படம் களமிறங்கி விட்டது.

‘அப்படியானால் படம் சூப்பரா..?’ என்று கேட்டால் கொஞ்சம் மென்று முழுங்கத்தான் வேண்டியிருக்கிறது. காரணம் ஒன்றே ஒன்றுதான். சுவாரஸ்யமில்லாத நாடக பாணியிலான கதை நகர்த்தல்கள்.

படத்தொடக்கத்தில் நாயகன் ஜிவியை ஒரு கறார் பேர்வழியாகக் காட்டுகிறார்கள். வீட்டின் சுவர், சீலிங் என்று எங்கெல்லாம் இடம் இருக்கிறதோ அங்கெல்லாம் ஒரு ஃபார்முலாவை எழுதி வைத்து படிப்பில் அவரைப் புலியாகக் காட்டுகிறார்கள். அப்படிப்பட்டவரிடம் அக்கம்பக்கத்து வீட்டுக் குழந்தைகல் எல்லாம் கிட்டத்தட்ட ஒரு குருகுலம் போலவே தங்கி (டியூஷன்..?) படிக்கிறார்கள். அதில் கொஞ்சம் வளர்ந்த குழந்தையாக வந்து சேர்கிறார் ஜிவியின் அத்தை மகளான ஷாலினி பாண்டே.

படிப்பில் மந்தமாக இருக்கும் அவருக்கும், காலேஜ் நம்பர் ஒன் ஜிவிக்கும் அந்தக் காரணத்தாலேயே முதலில் உரசல் உண்டாகி பிறகு ஒருவழியாகப் புரிதல் ஏற்படுகிறது. இருவரும், ஒரே கல்லூரி, ஒத்த படிப்பு என்று இருக்க, ஒரு கட்டத்தில் ஷாலினி நன்றாகப் படித்து ஜிவியை ஓவர்டேக் செய்ய, இடையில் முளைக்கிறது காதல். அதை ‘இன்பாச்சுவேஷன்’ என்று ஹைதர் காலத்துப் பேர் சொல்லி ஒதுக்குகிறார் ஜிவி.

ஆனால், இவர்கள் படிப்புக்குப் போட்டியாக யுவன் மயில்சாமி வந்து சேர, அவரை போக்குக் காட்டி முதலிடத்தைத் தக்க வைக்க அவரிடம் காதல் நாடகம் ஆடும் ஷாலினி அதன் மூலம் தன் மாமன் ஜிவிக்கு முதலிடத்தைப் பெற்றுத் தருகிறார். அதுவே இன்னொரு பிரச்சினைக்குக் காரணமாகிறது.

ஒரு பேச்சுக்குக் கூட தன் ஈகோவை விட்டுக் கொடுக்காத ஜிவி, தன்னை மட்டுமே சிறந்தவன் என்று ஷாலினி வாயால் சொல்ல வைக்கவும், பதிலுக்கு “தட் இஸ் ஷாலினி…” என்று ஜிவியைப் புகழ வைக்க ஷாலினியும் சபதம் மேற்கொண்டு முதல் பாதியை முடிக்கிறார்கள். இரண்டாவது பாதியில் அதே ஆட்டம் தொடர்ந்து ஆள் மாறிக் கல்யாணத்துக்குப் பேசி கடைசியில் என்ன ஆகிறது (என்னதான் ஆகி விட முடியும்..?) என்கிற முடிவு.  

முதல்பாதியிலேயே கதை முடிந்து விடுவதால் பின்பாதியில் ஏற்படும் அசுவாரஸ்யத்தை இயக்குநரும் புரிந்துகொண்டு தம்பி ராமையாவைக் களமிறக்கி நம்மைக் கிச்சு கிச்சு மூட்டப் பார்க்கிறார். ஆனால், தம்பி ராமையாவோ கொஞ்ச காலமாக ‘டச்’ விட்டுப் போனதில் ‘டக்’ அடிக்கிறார்.

போதாக்குறைக்கு இவர்கள் காதலுக்கு இடையில் பிரிந்திருக்கும் இவர்களின் பாட்டி ஜெயசித்ராவுக்கும், தத்தா நாசருக்கும் பல வருடங்களாக இருக்கும் ஈகோ கிளாஷும் ‘டிங்கரிங்’ பார்க்கப் படுகிறது. 

ஜிவியின் வீடு என்று காட்டினாலே ஒரு மழலைப்பட்டாளம் தொடர்ந்து கொண்டே இருப்பதில் எந்த லாஜிக்கும் இல்லை. 

‘அன்பே வா’ காலத்திலிருந்து காதலர்களுக்குள் இருக்கும் ஈகோவுக்கு இங்கேயே ஆயிரம் கதைகள் இருக்க, இதை ஏன் தெலுங்கிலிருந்து வாங்கி வர வேண்டும் என்ற கேள்வியும் எழாமலில்லை. 

வரும் காட்சியெல்லாம் ஜொலிக்கும் ‘ஷாலினி பாண்டே’வின் இளைமையும், பொலிவும் இளசுகளைக் கட்டிப்போட்டு படம் பார்க்க வைக்கும். அந்த ‘யுஎஸ்பி’யில் படம் இரண்டு வாரங்கள் தாண்டினால் தப்பிக்கும்.

100 % காதல் – ஷாலினியாய நமஹ..!