May 20, 2024
  • May 20, 2024
Breaking News
May 10, 2024

ஸ்டார் திரைப்பட விமர்சனம்

By 0 84 Views

சினிமா நடிகன் ஆக வேண்டும் என்ற கனவுகளோடு நாள்தோறும் பல்லாயிரம் பேர் தலைநகரை நோக்கிப் படையெடுத்து வந்தாலும் அவர்களில் யாரோ ஒருவருக்குதான் நட்சத்திர அந்தஸ்து கிடைக்கிறது. 

அந்த ‘ஸ்டார் வேல்யூ’வை அடைவதற்கு அவர்கள் கடந்து வரும் கடின பாதை எப்படிப்பட்டது என்பதை இளன் தன்னுடைய இளமையான இயக்கத்தில் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார்.

சினிமாவில் இன்றைக்கு வாரிசுகளின் ஆதிக்கம் இருந்தாலும் அப்படி சினிமா வாரிசாக இல்லாமல் சினிமாவுக்குள் வருவது எத்தனை கடினம் என்பதை பல படங்களில் பார்த்திருக்கிறோம். இந்தப் படத்திலும் அதுவேதான் என்றாலும் படத்தின் நாயகன் கவினின் கரடு முரடான பாதையை இதில் முன் வைத்திருக்கிறார் இயக்குனர். 

எல்லா ஹீரோக்களும் நடிக்க ஆசைப்படும் ஒரு பாத்திரம் இந்த படத்தில் கவினுக்குக் கிடைத்திருக்கிறது. அவரும் தன்னை நிரூபிக்க தன்னால் இயன்ற அளவு இதில் நடிப்பில் பரிமளித்திருக்கிறார்.

நாயகி பிரீத்தியைக் கண்ட மாத்திரத்தில் காதல் கொண்டு, அத்து மீறி ஒரு நாள் இரவு அவள் அறையில் தங்குவதில் ஆகட்டும், கல்லூரி விழாவில் பெண்கள் நடனமாடக்கூடாது என்கிற முதல்வரின் கட்டுப்பாட்டை உடைக்க தானே பெண் வேடம் போன்று குத்தாட்டம் போடுவதில் ஆகட்டும், போட்டுவிட்டு பெண்களின் உரிமையை உரக்க பேசி அனைவரையும் கூப்பிட்டு மேடையில் தோன்றச் செய்வதில் ஆகட்டும், தன் நடிப்பை ஒத்துக் கொள்ள மறுக்கும் ஆசானிடம் போராடி பயிற்சி பெறுவதில் ஆகட்டும், கனவுகள் எல்லாம் தகர்ந்து போன வேதனையை கண்களில் வெளிப்படுத்தவதில் ஆகட்டும் கவினுக்கு நடிப்பில் இது வின்னிங் பாயிண்ட்.

நாயகிகளில் முன்பாதியை பிரீத்தி முகுந்தனும், பின் பாதியை அதிதி போஹன்கரும் ஆக்கிரமிக்கிறார்கள். அவர்கள் அழகையும், துடிப்பையும் நிறுத்தால் தராசு முள்ளே தாளாமல் ஸ்தம்பித்துப் போய் நின்றுவிடும்.

படத்தில் முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டிய இருவர் கவினின் அப்பா லாலும், அம்மா கீதா கைலாசமும். லால் நடிப்பில் எட்டடி என்றால் கீதா கைலாசம் 16 அடி. இத்தனை நடிப்பு பிசாசுகளுக்கு மகனாகப் பிறந்த கவினுக்கு நடிப்பார்வம் வந்ததில் வியப்பில்லை. 

ஆனால் சொந்த வாழ்க்கையின் நெருக்கடிகளுக்கு எல்லாம் லால் நடித்துக் கொண்டிருப்பது ஒரு அப்பாவுக்கான அறமாகத் தோன்றவில்லை. அதேபோல் கீதா கைலாசத்தின் நடிப்பைக் காட்டுவதற்கென்று திணிக்கப்பட்ட காட்சிகள் படத்துக்கு உதவவில்லை.

ஒரே நேர்கோட்டில் செல்லாமல் திரைக்கதை மலைப்பாதை போல் வளைந்து நெளிந்து சென்று கொண்டிருப்பது சற்றே அயர்ச்சியை ஏற்படுத்துகிறது. கவினுக்கு வரும் துன்பங்களும் சற்று வலிய திணிக்கப்பட்டவை போல் தோன்றுகிறது.

மாறன், காதல் சுகுமார், நிவேதிதா ராஜப்பன், தீப்ஸ், ராஜா ராணி பாண்டியன், சஞ்சய் ஸ்வரூப், தீரஜ் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் தேவையை நிறைவு செய்து இருக்கிறார்கள்.

யுவன் சங்கர் ராஜாவின் இசையும், ஒளிப்பதிவாளர் எழில் அரசு.கே-வின் ஒளிப்பதிவும் படத்தின் தரத்தை வெகுவாகக் கூட்டி இருக்கின்றன. அதிலும் மாறிவரும் காலக் கட்டத்தைத் தனது ஒளிப்பதிவில் மிக நேர்த்தியாகத் தந்து இருக்கிறார் எழில் அரசு.

பாடல்களுக்கான இசையில் பிரமாதப்படுத்தி இருக்கும் யுவன் பின்னணி இசையில் அதிக வால்யூமை கூட்டி வைத்திருக்கிறார்… அது பல இடங்களில் வசனத்தைத் தின்று செரித்து விடுகிறது. 

கவின் – இளன் – யுவன் கூட்டணி நம்பிக்கையை வெகுவாக விதைத்து இருக்கிறது.

ஸ்டார் – நன்னம்பிக்கை முனை..!

– வேணுஜி