காதலர்கள் சாப்பிட்டு விட்டுப்போட்ட ஒரு மாங்கொட்டை எப்படி வளரத் தொடங்கி கிளைத்து எழுகிறதோ, அப்படி நாயகன் ஜெய் ஆகாஷின் காதலும் முளை விட்டு எழுந்து பின் வெட்டப்பட்டு கடைசியில் எப்படி துளிர்த்து மரமாகிறது என்று சொல்லும் கதை.
இதை ஜெய் ஆகாஷ் எழுதி இயக்கி நடித்தும் இருக்கிறார். ஆனால், ஒரு மாமரம் வளரும் காலகட்டம் வரை அவரும் அதனுடன் உருவம் மாறி வருடக் கணக்காக காத்திருந்து இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார்.
அதற்காக இளமையான தோற்றம் முதல் இப்போதைய பருத்த தோற்றம், மனநலம் பாதிக்கப்பட்ட தோற்றம் என்று மூன்று விதமான தோற்றங்களில் அவர் வருவது ஆச்சரியம்.
அவருக்கு ஜோடிகளாக மீனாட்சி, சந்தியா இருவரும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் கிளாமரில் களை கட்டுபவர்கள் நடிப்பிலும் தேர்ச்சி பெறுகிறார்கள்.
ஜெய் ஆகாஷின் காதலை மறுபரிசலினை செய்யும் விதமாக தன் தோற்றுப்போன காதலை சொல்லி அவ்வப்போது உசுப்பேற்றும் வேலையை கச்சிதமாக செய்கிறார் காதல் சுகுமார்.
இவர்களுடன் கே.பி.ஒய் திவாகர், ராகுல் தேவ், பிரம்மாஜி, அருணாச்சலம், மதுரை சக்திவேல், பிரம்மானந்தம், பாஷா, சத்யம் ராஜேஷ், ரம்யா உள்ளிட்டோர் பல பாத்திரங்களில் வந்து படத்தை நிறைக்கிறார்கள்.
பல வருடங்கள் காத்திருந்து படத்தை படம் பிடித்த ஒளிப்பதிவாளர் பவுல் பாண்டி பாராட்டுக்குரியவர்.
இசையமைப்பாளர் நந்தாவின் இசையில் பாடல்கள், ஜெய் ஹரிஷாந்தின் பின்னணி இசை எல்லாமே நேர்த்தியாக இருக்கின்றன.
பல காலம் காத்திருந்து படமாக்கியதாலோ என்னவோ தொடர்பில்லாத காட்சிகள் வருகின்றன. என்றாலும் அவற்றையெல்லாம் தோல்வின்றி ஒரு படமாக கொடுப்பதில் பலே வேலை பார்த்து இருக்கிறார்கள்.
படத்தின் தலைப்பை பார்த்ததும் ஒரு மாமரத்தின் கதை என்பது புரிந்து போகும் ஆனால் அதற்குப்பின் இருக்கும் புதைந்து போன காதல் பற்றி சொல்லி இருக்கும் ஜெய் ஆகாஷின் இந்த புதுமையான முயற்சி வரவேற்கத்தக்கது.
புது முயற்சி என்ற வகையில்…
மாமரம் – வேறு எங்கும் கிளைகள் இல்லாதது..!
– வேணுஜி